சுகாதார உத்தியோகத்தர்கள் மீதான தாக்குதல்கள் பற்றிய கண்டனங்கள்
சுகாதார உத்தியோகத்தர்கள் மீதான தாக்குதல்கள் பற்றிய கண்டனங்கள்

வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன்

சுகாதார உத்தியோகத்தர்கள் மீதான தாக்குதல்கள் பற்றிய கண்டனங்கள்

சுகாதாரத்துறையினருக்கான எரிபொருள் விநியோகத்தின்போது குழப்பத்தை ஏற்படுத்த முனைவோர் மற்றும் தாக்குதலில் ஈடுபட்டவர்களைக் கண்டிக்கின்றோம் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

துரதிஷ்டவசமான இந்நிலைமை நீடிக்குமானால் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் முடங்கும் நிலை ஏற்படுவதை யாராலும் தவிர்க்கமுடியாது போகும். அப்போது வைத்தியசாலை சேவைகளை முற்றாக வடமாகாண மக்கள் இழக்கவேண்டி ஏற்படலாம். அதனால் காப்பாற்றக் கூடிய பல அப்பாவிகளின் உயிர்கள் மட்டுமல்லாது, இன்று குழப்பம் விளைவிப்பவர்களின் உயிர்கள் கூட பலியாக நேரிடலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் அனுப்பி வைத்துள்ள அறிக்கையில்;

உயிர் காக்கும் மிக அதி உயர் அத்தியாவசிய சேவையான சுகாதார சேவையில் பணியாற்றும் ஊழியர்கள் தமது கடமைகளை தொடர்ந்து மேற்கொண்டபடி எரிபொருளையும், தமது குடும்பங்களுக்கான அத்தியாவசியப்பொருட்களையும் பெற்றுக்கொள்வதற்கு மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, அவர்கள் தமது கடமை நிலையங்களான வைத்தியசாலைகளுக்கும், சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளுக்கும், ஏனைய பணிமனைகளுக்கும், கடமைக்கு வருவதற்கான தமது தனிப்பட்ட வாகனங்களுக்கான எரிபொருளைப் பெற முடியாது மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.

இதனால், படிப்படியாக சுகாதார சேவை முடங்கும் நிலையை நோக்கிச் சென்று கொண்டிருந்த நேரத்தில் சுகாதார அமைச்சு சுகாதார பணியாளர்களுக்காக விசேட ஏற்பாட்டின் மூலம் முன்னுரிமை அடிப்படையில் எரிபொருளை வழங்குவதற்கு ஒழுங்குகளை செய்தது.

அதற்காக, மாவட்டம் தோறும் தெரிவு செய்யப்பட்ட சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வெள்ளிக்கிழமைகளில் சுகாதாரப் பணியாளர்களுக்கு மட்டும் எரிபொருள்களை விநியோகிப்பதற்கு சுகாதார அமைச்சு ஒழுங்குகளை செய்திருந்தது.

நேற்று முன் தினம் முதல் தடவையாக இந்த ஒழுங்குக்கு அமைய சுகாதாரப் பணியாளர்களுக்கு எரிபொருள்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதேவேளை, வாரத்தில் ஒரு நாள் மட்டும் சுகாதார பணியாளர்களுக்கு என தெரிவு செய்யப்பட்ட ஒரு சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மட்டும் இருந்து எரிபொருள் வழங்குவதற்காக செய்யப்பட்ட இந்த ஒழுங்கை பல இடங்களில் பொது நல நோக்கற்ற பொதுமக்களில் சிலர் தீவிரமாக எதிர்த்ததுடன் குழப்ப நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர். மிகுந்த சிரமத்தின் மத்தியில் பொலிஸாருக்கு மேலதிகமாக விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினரின் பாதுகாப்புடனேயே எரிபொருளை விநியோகிக்கக் கூடியதாக இருந்தமை மிகுந்த மன வருத்தத்துக்குரியது.

இவை அனைத்துக்கும் மேலாக கிளிநொச்சி மாவட்டத்தில் சுகாதாரப் பணியாளர்களுக்கு என ஒதுக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் விநியோகத்தை ஒருங்கிணைப்பதற்காக அந்த மாவட்டத்தின் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ந. சரவணபவன் ஈடுபட்டிருந்தார். அப்போது சில பொதுமக்கள் அங்கு வரிசையில் காத்திருந்த தாதிய உத்தியோகத்தர்கள் சிலரை நகரவிடாமல் தடைகளை ஏற்படுத்தினர். வைத்திய கலாநிதி சரவணபவன் அவர்களிடம் சென்று தாதிய உத்தியோகத்தர்களை முன்னோக்கி நகர அனுமதிக்குமாறு கேட்டபோது அதற்கு மறுத்து அவருடன் வாக்குவாதப்பட்டவர்களுள் ஒருவரால் அவர் தாக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் வடமாகாணத்தின் சுகாதார பணியாளர்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நாகரிகமற்ற, மனிதாபிமானமற்ற, செயலை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். தாக்குதலுக்குள்ளான வைத்திய கலாநிதி சரவணபவன் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற பின் தற்போது வீடு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதலை மேற்கொண்ட நபரும் பொலிஸாரினால் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

போர்க்காலத்தில் இன்றிலும் விட மிகக் குறைவாக எரிபொருள் இருந்த காலத்தில் கூட சுகாதாரத் துறையினருக்கான முன்னுரிமை எங்கும் மறுதலிக்கப்படவுமில்லை, எதிர்க்கப்படவுமில்லை என்பதையும் நாம் மறக்க முடியாது.

துரதிஷ்டவசமான இந் நிலைமை நீடிக்குமானால் வடமாகாண சுகாதார சேவைகள் முடங்கும் நிலை ஏற்படுவதை யாராலும் தவிர்க்க முடியாது போகும். அப்போது வைத்தியசாலை சேவைகளை முற்றாக வடமாகாண மக்கள் இழக்க வேண்டி ஏற்படலாம். அதனால் காப்பாற்றக் கூடிய பல அப்பாவிகளின் உயிர்கள் மட்டுமல்லாது, இன்று குழப்பம் விளைவிப்பவர்களின் உயிர்கள் கூட பலியாக நேரிடலாம்.

களத்தில் பணியாற்றும் சுகாதார வைத்திய அதிகாரிகள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், குடும்ப நல உத்தியோகத்தர்கள் உட்பட ஏனைய சகல சுகாதார பணியாளர்களும் கடமைகளுக்கு வருவதை தவிர்த்து எரிபொருள் வரிசைகளில் காத்திருக்கும்போது, டெங்கு மரணங்கள், தாய்-சேய் மரணங்கள் என்பவை பன்மடங்கு அதிகரிப்பதை தவிர்க்க முடியாது போகும்.

சுகாதாரத்துறை மக்கள் அனைவரதும் உயிர்காக்கும் அத்தியாவசிய சேவை என்பதை புரிந்துகொண்டு, எதிர்காலத்திலாவது சுகாதாரப் பணியாளர்கள் தடையின்றியும், தாமதமின்றியும் வேலைக்கு வருவதை உறுதிப்படுத்துவதற்காக அரசாங்கத்தால் வழங்கப்படும் முன்னுரிமைச் சேவைகளுக்கு இடையூறு செய்யாது பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும், இவற்றுக்கு எதிராக குழப்பங்களை ஏற்படுத்துகின்ற சமூக விரோத சக்திகளுக்கு எதிராக பொதுமக்கள் குரல் கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம் என்றுள்ளது.


சுகாதார உத்தியோகத்தர்கள் மீதான தாக்குதல்கள் பற்றிய கண்டனங்கள்

சிவஞானம் சிறீதரன் பா. உ.

பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மீதான தாக்குதல் கண்டனத்துக்குரியது.

நேற்றைய முன் தினம் (24) எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்த, கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ந. சரவணபவன் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் வன்மையான கண்டனத்துக்குரியது. அத்தியாவசிய சேவைகளுள் முதன்மையானதாக உள்ள சுகாதாரத் துறையின் பதவிநிலை உத்தியோகத்தரும், வைத்தியருமான அவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுமளவுக்கு காட்டு மிராண்டித்தனமாக தாக்கப்பட்டுள்ளமை இந்தமாவட்டத்தின் மிகமோசமான சமூகப் பிறழ்வுச் செயலாகும்.

ஒட்டு மொத்த அரச சேவைத்துறையினரது பாதுகாப்பையும் கேள்விக்குட்படுத்தி, அவர்களிடையே அச்சநிலையைத் தோற்றுவித்த இச் சம்பவத்துக்கு எதிராக எனது கண்டனங்களைப் பதிவு செய்வதோடு, இதுவிடயமாக உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறேன்.

முழு நாடும் எதிர்கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடி நிலையில், மட்டுப்படுத்தப்பட்ட முறையில் மேற்கொள்ளப்படும் எரிபொருள் விநியோகம், ஒவ்வொரு எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் நீண்டதோர் வரிசை யுகத்தை தோற்றுவித்திருக்கிறது.

இரவு, பகல், மழை, வெயில் பாராது அன்றாடத் தேவைக்கான எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக வரிசையில் நிற்கும் அரச உத்தியோகத்தர்கள் அதிலும் குறிப்பாக பெண் உத்தியோகத்தர்கள் மீது அவதூறான வார்த்தைகள் பிரயோகிக்கப்பட்டு, அவர்கள் ஆகப்பெரும் மன அழுத்தங்களோடு எரிபொருளைப் பெறாமல் அழுதபடியே வீடு திரும்பிய பல சம்பவங்கள் கடந்த ஓரிரு நாட்களில் கிளிநொச்சியிலும், யாழ்ப்பாணத்திலும் நடைபெற்றுள்ளன.

எரிபொருள் என்பது அனைத்துத் துறைசார் தரப்பினருக்கும் அடிப்படைத் தேவையாக உள்ள இன்றைய காலச் சூழலில், தமது அன்றாடக் கடமைகளுக்கு அப்பால் நாளும், பொழுதுமாய் எரிபொருளுக்குக் காத்திருப்போர் கோபம், விரக்தி உள்ளிட்ட பல்வேறுவிதமான மனோநிலைகளோடு இருந்தாலும், அதே உணர்வுகளோடும், எதிர்பார்ப்போடும் காத்திருக்கும் சக மனிதர்களிடம், பொதுவெளியில் பிரயோகிக்கத்தகாத வார்த்தைகளாக அந்த மனோநிலையை வெளிப்படுத்துவது அவர்களை கடுமையாகப் பாதிக்கும் என்பதையும், அத்தகையை முரண் கருத்துக்கள் சமூக மற்றும் குழு வன்முறைகளுக்கு வழிகோலக்கூடும் என்பதையும் நாம் ஒவ்வொருவரும் உணரத் தலைப்பட வேண்டும்.

துறைசார் வேறுபாடுகளற்று எல்லோரும் எரிபொருளுக்காக காத்திருக்க வேண்டியுள்ள போதும், அவரவர் பணிகளின் அவசியம் கருதி சில விட்டுக் கொடுப்புக்களைச் செய்ய வேண்டிய சமூகக் கடப்பாடு ஒவ்வொரு தனி மனிதனுக்கும் உண்டு. குறிப்பாக உயிர்காக்கும் சேவையாளர்களான மருத்துவர்களும், தாதியர்களும் கூட நீண்டிருக்கும் வரிசைகளில் நின்று எரிபொருளைப் பெறுவது இந்த நாட்டின் ஆகப்பெரும் அவல நிலையின் வெளிப்பாடே!

எரிபொருளுக்கான தேவைப்பாடுகள் எல்லோருக்கும் உள்ளது என்பதை உணர்ந்தவர்களாக, சமூகப் பொறுப்போடும், மனிதாபிமானத்தோடும், எமது பண்பாட்டையும், அதன் வழியான சமூகக் கடப்பாடுகளையும், வார்த்தை வரைமுறைகளையும் மீறாதவர்களாக, இந்த சமூகப் பேரிடரை எதிர்கொள்ளும் வல்லமையை எல்லோருமாக இணைந்து ஏற்படுத்த வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

சிவஞானம் சிறீதரன்
பாராளுமன்ற உறுப்பினர்,
யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டம்,
கிளிநொச்சி.

சுகாதார உத்தியோகத்தர்கள் மீதான தாக்குதல்கள் பற்றிய கண்டனங்கள்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY

மேலதிக செய்திகள் | Additional News

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Read More
Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More