சமஸ்டி - முழுமையான உரை

நிரந்தரமாக புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை நீங்கள் கொடுக்க வேண்டுமென்றால் இணைந்த வடகிழக்கில் முழு அதிகாரங்களையும் பரவலாக்கி ஒரு சமஸ்டி அடிப்படையிலான ஒரு தீர்வைக் கொடுத்தால்தான் இந்த நாடு எதிர்காலத்தில் ஒரு சுபீட்சமான நாடாக இருக்கும் என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நடைபெற்ற சுகாதார அமைச்சு, புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் (29) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர்,

இன்று காலையில் முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய ஜனாதிபதியும் இந்த சபையில் ஒட்டு மொத்த நாட்டு மக்களையும், குறிப்பாக தமிழ் மக்களையும் வேதனைப்படுத்தும் ஒரு கருத்தைப் பரிமாறிக் கொண்டார்கள்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் மாவட்ட அபிவிருத்திச் சபைகள் மூலம் அதிகாரத்தைப் பரவலாக்க வேண்டும் என்றுகூறியிருந்தார். தற்போதைய ஜனாதிபதி அவர்கள் கடந்த சில அமர்வுகளுக்கு முன்பு அனைவரையுமே இந்த சபையில் எழுப்பி இனப்பிரச்சினைக்கான ஒரு நிரந்தரத் தீர்வைக் காண்பதற்கு நீங்கள் எல்லாம் தயாரா என்று கேட்டது மாத்திரமல்லாமல், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களை எழுந்து 13 பிளஸ் என்று கூறுங்கள் என்று கூறிய ஜனாதிபதி மாவட்ட சபைகளைப் பற்றி பிரஸ்த்தாபித்திருப்பது மிகவும் வேதனையான விடயம்.

மாவட்ட அபிவிருத்தி சபை தேர்தல் என்றாலே எங்களுக்கு ஞாபகம் வருவது யாழ்ப்பாண நூலகத்தை எரித்த சம்பவம் தான். அந்த மாவட்ட அபிவிருத்தி சபை தேர்தலையும் அந்த அதிகாரப்பரவலாக்கத்தையும் என்றோ இந்த நாட்டு மக்கள் நிராகரித்து விட்டார்கள்.

உங்களுக்குத் தேவையென்றால், தெற்குக்குத் தேவையென்றால் மாவட்ட அபிவிருத்திச் சபைகளை வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் நிரந்தரமாக புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை நீங்கள் கொடுக்க வேண்டுமென்றால் இணைந்த வடகிழக்கில் முழு அதிகாரங்களையும் பரவலாக்கி ஒரு சமஸ்டி அடிப்படையிலான ஒரு தீர்வைக் கொடுத்தால்தான் இந்த நாடு எதிர்காலத்தில் ஒரு சுபீட்சமான நாடாக இருக்குமென்பதை மீண்டும் நான் வலியுறுத்துகிறேன்.

சுகாதார அமைச்சு, புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு இந்த நாட்டின் முக்கியமானதும், பிரபலமானதும், பிரச்சினைகளுக்குரியதுமான அமைச்சுக்களில் இவையும் ஒன்று.

2023க்கான வரவு செலவுத்திட்ட முன்மொழிவில் சுகாதார அமைச்சுக்கான மொத்த செலவின மதிப்பீடு 319 லட்சத்து 990 மில்லியன்களாகும்.

சுகாதார அமைச்சானது, எமது நாட்டில் சுகாதார அமைச்சர்களாகப் பதவி வகித்த பலரின் செயற்றிறன் இன்மையை வெளிப்படுத்தியது மாத்திரமன்றி, பல அமைச்சர்களது பதவி விலகல்களுக்கு, பல அமைச்சர்களது ஊழல்களுக்குக் காரணமான ஒரு அமைச்சாக இருந்திருக்கிறது.

பாராளுமன்றத்தில் சுகாதார அமைச்சராக நியமனம் பெறக்கூடிய, நிபுணத்துவ ஆலோசனைகளை வழங்கக்கூடிய தகுதியும், திறமையும் உள்ளவர்கள் பலர் இருந்தும், ஜனாதிபதி, பிரதமர் அவர்களின் விருப்பம் மாத்திரமே இந்த அமைச்சிற்குரிய அமைச்சரை நியமனம் செய்யும் அளவுக்கு நிலைமை சென்றிருந்தது. சுகாதார அமைச்சு இன்று கடும் விமர்சனத்தை எதிர்நோக்க வேண்டி வந்தமைக்கான காரணமும் அதுவேயாகும்.

அரச மருத்துவ உத்தியோகத்தர்கள் சங்கம் மற்றும் மருத்துவம் சார் தொழிற் சங்கங்களுக்கும், சுகாதார அமைச்சுக்குமான நெருக்கமான இணைப்பு இன்மையே சுகாதார சேவையின் முக்கியமான குறைபாடாகும்.

அதையும்விட சுகாதார அமைச்சின் சகல மட்டங்களிலும் ஊழல்கள் இருந்ததை கடந்த காலங்களில் காணமுடிந்தது.

மருந்துக் கொள்வனவில் ஊழல், மருத்துவ உபகரணங்கள் கொள்வனவில் ஊழல், தரமான மருந்துகளைப் பெறுவதில் ஊழல் என்று சகல மட்டங்களிலும் ஊழல் காணப்பட்ட அமைச்சே சுகாதார அமைச்சாகும்.

இதற்கு சிறந்த ஒரே ஒரு உதாரணம் கடந்த ‘கொவிட் -19’ தொற்று பரவிய காலத்தில் அரசு நடந்து கொண்ட முறை இதற்கு சான்றாகும். இராணுவத் தளபதியை‘கொவிட்’ செயலணியின் தலைவராக நியமித்து யுத்தம் நடத்தியதைப் போல ‘கொவிட்’ஐ கட்டுப்படுத்த முயற்சித்தார்கள். இங்கு இராணுவத்தை இணைத்ததை தவறு எனக் கூறவில்லை. சுகாதார அமைச்சையும், சுகாதார உயர் பதவி ஆளணியினரையும் இராணுவத்தின் கீழ் இராணுவ ஆணைக்கு கட்டுப்படுத்தி வைத்தீர்கள்.

‘கொவிட் 19’ தடுப்பூசியினை பெற்ற விலைக்கும் அதாவது அதன் உண்மையான விலைக்கும் செலுத்திய விலைக்கும் இடையிலான வேறுபாடுகள் நிலவியதாக அப்போது பெரிதாகப் பேசப்பட்டது. அன்னியச் செலாவணிப் பிரச்சினையால் நாடு அவதியுற்ற நேரம் நோய்த் தடுப்புக்காக கொள்வனவு செய்யப்பட்ட மருந்துகள் அதன் காலாவதித் திகதி முடிவடைந்ததனால் அழிக்கப்பட்டதாகவும் அறிய முடிந்தது. இவற்றின் உண்மைத் தன்மையை கௌரவ அமைச்சர் இந்த உயரிய சபைக்கு அறிவிக்க வேண்டும்.

விஞ்ஞான பூர்வமான ஆய்வு வழிமுறைகளில் பெற்ற முடிவுகளைக் கொண்டு சுகாதாரத் துறையினை அபிவிருத்தி செய்வதை விடுத்து ‘நீர்முட்டிகளை கங்கையில் வீசி’ எமது சுகாதாரத் துறையினை வளர்க்க முடியாது என்பதை தற்போதைய அமைச்சராவது புரிந்து கொள்ள வேண்டும்.

இன்று மண் மாபியா, மர மாபியா, போல சுகாதாரத்துறையும் பணமீட்டும் மாபியாக்களைக் கொண்ட துறையாக மாறி வருகின்றது. எமது இலவச சுகாதார சேவை இன்று சவாலுக்குள்ளாகி வருகிறது. சுகாதாரத் துறையும் அரசியல் மயமாக்கப்பட்டுள்ளது. சுகாதார வைத்தியசாலைகளின் பணிப்பாளர்கள் சிலர் அரசியல்வாதிகள் போல நடந்து கொள்கின்றார்கள்.

அரச வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவதை விட தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவதே மேல் என்ற நிலைக்கு மக்கள் மனம் மாறியுள்ளது. இத்தகைய மன மாற்றத்துக்கு அரச வைத்திய சாலைகளில் பணிபுரியும் சில வைத்தியத் துறைசார் நிபுணர்களின் நடத்தை காரணமாக இருப்பது ஒன்றும் ரகசியமல்ல. இதற்காக அவர்களது தனிப்பட்ட சிகிச்சை வழங்குவதை நான் எதிர்க்கவில்லை. ஆனால், சில மகப்பேற்றுச் சிகிச்சைகள், சில அறுவைச் சிகிச்சைகள், சில பரிசோதனைகள், குறிப்பிட்ட சில தனியார் வைத்தியசாலைகளில் தான் செய்யப்படவேண்டும் என மறைமுகமாக நோயாளர்கள் நிர்ப்பந்திக்கப்படுவது பகிரங்க ரகசியமாகும்.

அண்மைக் காலமாக நடந்து வருவதும், அதிகரித்து வருவதுமான பெரும் துயர சம்பவம் மருத்துவக் கவலையீனங்களால் வைத்தியசாலைகளில் நடைபெறும் மரணங்களாகும். ‘மருத்துவரின் தவறு புதைகுழியோடு மறைந்துவிடும்’ என்றொரு வழக்கு மொழியுள்ளது. இக் கூற்றினை தற்போதைய நிகழ்வுகள் உண்மையென நிரூபித்து வருகின்றன. நோயாளர்களுக்கு வழங்கப்படும் உணவுகளின் தரம் தொடர்பாகவும், அளவு தொடர்பாகவும், அதில் இடம்பெறும் ஊழல் தொடர்பாகவும் மருத்துவத் துறைசார் நிருவாகிகளின் பங்கும் உள்ளதோ என பரவலாக விமர்சிக்கப்படுகிறது.

இம்முறை வரவு செலவுத் திட்ட முன்மொழிவில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இருதயவியல் பிரிவு அபிவிருத்திக்கும், அறுவைச் சிகிச்சைப் பிரிவு புனரமைப்புக்கும், இதற்கான மருத்துவ உபகரணங்கள் கொள்வனவு செய்வதற்கும் ஏற்பாடுகள் கூறப்பட்டுள்ளது. இவை முன்மொழிவுகளாக மட்டும் இருக்காது இவற்றுக்காக ஒதுக்கப்பட்ட முழுத் தொகையும் எவ்வித ஊழலும், கமிசனும், லஞ்சமுமின்றி பயன்படுத்தப்பட வேண்டும்.

இத்துடன் கிழக்கு மாகாணத்தின் ஒரேயொரு போதனா வைத்தியசாலையாகத் திகழும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சிறுநீரக சிகிச்சைப்பிரிவு, புற்றுநோய் சிகிச்சை அலகு, சிறுவர் நோயியல் பிரிவு, நரம்பியல் பிரிவு, கதிர் வீச்சுப் பிரிவுகள் விரிவாக்கப்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் கௌரவ அமைச்சர் அவர்கள் கவனம் செலுத்த வேண்டும்.

அண்மைக்காலமாக வைத்தியத்துறை நிபுணர்களின் ஓய்வு வயது தொடர்பாகவும் நிபுணத்துவ வைத்தியர்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வருகிறது. இதன் மூலம் நிபுணத்துவ வைத்தியர்களின் எண்ணிக்கையில் பெருமளவு வீழ்ச்சி ஏற்படலாம் என வைத்திய நிபுணர்களின் சங்கம் கரிசனை செலுத்தியுள்ளது. இது தொர்பாகவும் கௌரவ அமைச்சர் அவர்கள் முறையாக ஏற்றுக் கொள்ளக் கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அத்தோடு மட்டக்களப்பு வைத்தியசாலை சம்பந்தமாக சில தேவைகளைக் குறிப்பிட்டாக வேண்டும். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இருதய சிகிச்சை அலகு இருக்கின்றது. ஆனால், கத்லப் இல்லை. கத்லப் போதனா வைத்தியசாலைக்கு ஏற்கனவே கொண்டு வரப்பட்டிருந்தாலும் அது வேறு ஒரு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட அவல நிலை இருக்கின்றது. அங்கு இருதய நோயாளர்கள் அஞ்சியோக்கிராம் செய்ய வேண்டுமாக இருந்தால் கூட யாழ்ப்பாண வைத்தியசாலைக்கு, அல்லது கொழும்பு, கண்டிக்குச் செல்லவேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலை இருக்கிறது. எனவே கிழக்கு மாகாணத்திலிருக்கும் ஒரேயொரு போதனா வைத்தியசாலைக்கு கத்லப் அவசியமாகத் தேவைப்படுவதை உணர்ந்து அதற்கான ஏற்பாட்டைச் செய்ய வேண்டும்.

றீனல் யுனிற் 90 வீதம் முடிந்திருந்தும் அங்கு இயந்திரங்கள் இல்லாத காரணத்தினால் சிறுநீரக நோயாளர்களுக்கு பூரணமான சந்திர சிகிச்சை மேற்கொள்ளக்கூடிய நிலை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இல்லை. அதே போல சத்திர சிகிச்சைப் பிரிவு இந்திய அரசினால் நன்கொடையாக வழங்கப்பட்டிருக்கின்றது. அதன் வேலைப்பாடுகள் 99 சதவீதம் முடிவடைந்திருக்கின்ற நிலையில் அதற்குரிய உபகரணங்கள் வழங்கப்படாமலிருக்கின்றது. அந்த உபகரணங்கள் கிடைப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும்.

இந்தப் பெரிய வைத்தியசாலைக்கு களஞ்சியப்படுத்தக் கூடிய மருந்துக் களஞ்சியசாலை இல்லாமலிருக்கிறது. மிகவும் கஸ்ரமான நிலையில் விடுதிகளுக்குள்ளும் சிறிய சிறிய அறைகளுக்குள்ளும் மருந்துகளைச் சேர்த்து வைக்கவேண்டிய நிலைமை இருக்கின்றது. அதே போன்று கொழும்பிலிருந்து மருந்துகளை ஏற்றி வருகின்ற லொறி மிகவும் பழையதாகும். ஓட்டை விழுந்ததாகவும் காணப்படுகிறது. மழை காலத்தில் அந்த லொறி வரும் போது அந்த லொறிக்குள் மழைநீர் உட்புகக் கூடிய நிலையும் இருக்கின்றது.

கிழக்கு மாகாணத்திற்கென்று மட்டக்களப்புக்கும் திருகோணமலைக்கும் பி.எஸ்.எஸ்.பி திட்டத்தினூடாக இரண்டு கூலர் லொறிகள் இலங்கை வந்தடைந்து துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ளது. வாகனங்களை இறக்கிக்கொள்ள முடியாத இலங்கையின் நிலைமைக்கு அமைய சுங்கத் திணைக்களத்தில் இருந்து அவை விடுவிக்க முடியாமல் இருக்கின்றது. எனவே அதனை விடுவித்து மட்டக்களப்பு, திருகோணமலை பிராந்திய சுகாதர சேவைகள் பணியகத்திற்கு அவைகளை வழங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலே வைத்தியர்களுக்கான ஆளணி 487ஆகவும் அனுமதிக்கப்பட்ட ஆளணி 290 ஆகவும் இருக்கின்ற நிலையில் தற்போது அவ் வைத்தியசாலையில் 225 வைத்தியர்களே சேவையில் இருக்கின்றார்கள். அத்துடன் பொது மருத்துவ மாதுக்கள் 262 பேர் தேவைப்பட்டாலும் அங்கு 220 பேர் மாத்திரமே கடமையில் இருக்கின்றார்கள். ஆனால் கிழக்கு மாகாணத்திற்காக அனுப்பப்பட்ட ஆளணிகள் அம்பாறை மற்றும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுகளில் மேலதிகமாக நிரப்பப்பட்டுள்ளன. தற்போது கிழக்கு மாகாண சுகாதாரத் திணைக்களம் மருத்துவ மாதுக்களுக்கான மேலதிக ஆளணிக்காக விண்ணப்பத்திருக்கின்றார்கள் அதனையாவது மத்திய அரசு பூரணப்படுத்தி மேலதிக மருத்துவ மாதுக்களை கொடுப்பதன் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தின் மருத்துவ மாதுக்கள் பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

இலங்கையிலுள்ள அனைத்து போதனா வைத்தியசாலைகளிலும் கணக்காளர் தரம் ஒன்றுக்குரிய அனுமதியிருக்கின்றது. ஆனால் மட்டக்களப்பு, யாழ் வைத்தியசாலைகளுக்கே கணக்காளர் தரம் ஒன்றுக்குரிய அனுமதி இல்லாமல் இருக்கின்றது.

அதே போன்று அமைச்சரவையினால் எட்டு திட்டங்கள் மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டிருக்கின்றன. அரசின் திட்டத்தினூடாக அவை மட்டக்களப்பிற்கு வரவேண்டும்.

அதேபோன்று இன்னும் பல குறைபாடுகள் மட்டக்களப்பு வைத்தியசாலையில் இருக்கின்றன. கல்முனை வாழைச்சேனை வைத்தியசாலைகளில் வெளிநோயாளர் பிரிவு இரவு எட்டு மணிவரை திறந்திருக்கின்றது. ஆனால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஆறு மணியுடன் மூடப்படுகின்றது. எனவே அங்குள்ள பணிப்பாளர் அவர்கள் தனியார் வைத்தியசாலைகளுக்கு நோயாளர்களை அனுப்புவதற்காகவா ஆறு மணியுடன் மூடுகின்றார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியாலையின் பணிப்பாளர் தரம் அற்ற பணிப்பாளராக இருப்பதுதான் பல விடயங்களுக்குக் காரணமாக இருக்கின்றது. பல மில்லியன்கள் செலவில் கொரோனா விடுதி உருவாக்கப்பட்டது. அங்கு தற்போது நோயாளர்கள் இல்லாமல் இருக்கின்ற நிலையில் அங்கு நியுரோ வைத்திய நிபுணர், பொது வைத்திய நிபுணர் போன்றவர்கள் விடுதி இல்லாமல் இருக்கின்றார்கள். அதை விட 2017ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட நியுரோ திரப்பி 2022ம் ஆண்டு அதன் உத்தரவாதக் காலம் முடிவுற்றதன் பின்னர் தான் இயங்கு நிலைக்கு வந்துள்ளது. அதே போன்று பத்து மில்லியன் பெறுமதியான ஓட்டேமெடிக் மைக்ரோ பயோலொஜி கல்சர் இயந்திரம் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கின்றது.

உண்மையலேயே மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை ஊழல் மிகுந்த ஒரு வைத்தியசாலையாக இருக்கின்றது. எனவே மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு ஒரு கணக்காய்வு குழுவை அல்லது ஒரு ஆணைக் குழுவை அமைத்து அந்த வைத்தியசாலை தொடர்பில் விசாரணை செய்ய வேண்டும் என நான் வினயமாக வேண்டிக் கொள்கின்றேன்.

சமஸ்டி - முழுமையான உரை

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More
Mahanadhi - மகாநதி-20.08.2025

Mahanadhi - மகாநதி-20.08.2025

Read More