கேள்வியெழுப்புகிறார் சுரேஷ்

தமிழர் தரப்புடன் பேசுவது வரவு - செலவுத் திட்டத்திற்கு ஆதரவைப் பெற்றுக்கொள்ளும் தந்திரோபாயமா?...!
கேள்வியெழுப்புகிறார் சுரேஷ்.

விரைவில் வவுனியாவிற்கு விஜயம் மேற்கொண்டு நல்லிணக்க அலுவலகத்தை திறந்து வைத்து தமிழ் மக்களின் பிரதிநிதிகளையும் சந்திக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இந்த நேரத்தில் ஜனாதிபதியின் இத்தகைய நடவடிக்கைகள் மக்கள்மீது சுமைகளை ஏற்றியுள்ள வரவு - செலவுத் திட்டத்திற்கு எமது ஆதரவையும் பெற்றுக்கொள்ளும் தந்திரோபாயமா என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை சந்தேகிப்பதாக அதன் தலைவர் சுரேஷ் க. பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையின் முழுவிபரம் வருமாறு:

அண்மைக் காலமாக தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை தொடர்பாக தீர்வு காணப்படவேண்டும் என்ற கருத்துகள் பல தரப்பட்ட சிங்கள தரப்புகளால் முன்வைக்கப்பட்டு வருகின்றது. தமிழ்த் தரப்புகளிடையே ஒற்றுமை இல்லை என்பது போலவும், சிங்கள தரப்பு தமிழர் பிரச்சினையைப் பேசித் தீர்க்க தயாராக இருப்பது போலவும் படம் ஒன்று உருவாக்கப்பட்டு வருகின்றது.

நாடு இன்று இருக்கக்கூடிய அவல சூழ்நிலைக்குள் நாட்டின் கடன் வாங்கும் சக்தியை அதிகரிக்க வேண்டுமாக இருந்தால், சர்வதேச சமூகம் சொல்லும் சில காரியங்களை செய்வது போன்ற ஒரு பாவனையை வெளிக்காட்ட வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு இருக்கின்றது.

ஜனாதிபதி தான் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பேசத் தயார் என்று கூறுவதும், அண்மையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் தமிழ் மக்கள் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தீர்வைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறுவதும் இதனாலேயே என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

குறிப்பாக, தமிழர் தரப்பு ஐக்கியப் பட்டுப் பேசவேண்டும் என்ற கருத்தையும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். உண்மையில் சகல தமிழர் தரப்புகளுடனும் பேசுகின்றோம் என்ற ஒரு கருத்தை வெளிக் கொணர விரும்புகின்றார்களா? அல்லது தமிழர் தரப்பு ஐக்கியப்பட வேண்டும் என்று விரும்புகிறார்களா? என்ற கேள்விகள் எழாமலில்லை.

மகிந்த ராஜபக்ச அவர்கள் ஜனாதிபதியாக இருந்த காலததில் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையில் சர்வ கட்சிக் கூட்டங்கள் நடைபெற்றன. இறுதியில் அவரால் ஒரு அறிக்கையும் கையளிக்கப்பட்டது. அந்த அறிக்கை தொடர்பில் அன்றைய ஜனாதிபதியினால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அதன் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பதினெட்டு சுற்றுப் பேச்சுகள் நடைபெற்றனன. ஆனால் அவை அனைத்தும் காலத்தை வீண்விரயம் செய்யும் பேச்சுகளாக இருந்தனவே தவிர, இன பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஆக்கபூர்வமான பேச்சுகளை முன்னெடுக்க அரசாங்கம் தயாராக இருக்கவில்லை.

இவ்வாறான சிந்தனையைக் கொண்ட மகிந்த ராஜபக்ச அவர்கள்தான் தமிழர் தரப்பு சந்தர்ப்பத்தைப் பாவித்து பேச்சுகளில் ஈடுபடவேண்டும் என்று ஆலோசனை கூறுகின்றார்.

பாராளுமன்றத்தில் வரவு - செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வடக்கு - கிழக்கை இராணுவ வல்லாதிக்கத்திற்குள் வைத்திருக்க வேண்டும் என்ற அடிப்படையில் முப்படையினருக்கும் அதிக பட்ச நிதி ஒதுக்கப்பட்டிருக்கின்றது.

இலங்கை இராணுவத்தின் மூன்றில் இரண்டு பகுதியினர் வடக்கு - கிழக்கிலேயே நிலைநிறுத்தப்பட்டிருக்கின்றார்கள். தமிழ் மக்களின் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் இன்னமும் அவர்களின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றது. இந்நிலையில், தமிழ்த் தரப்பினருடனான பேச்சுவார்த்தை என்பது வரவு - செலவு திட்டத்திற்கு ஆதரவு பெற்றுக்கொள்வதற்கான ஒரு தந்திரோபாய நகர்வாகவும் இருக்கலாம்.

எதிர்வரும் 19, 20ஆம் திகதிகளில் ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க அவர்கள் நல்லிணக்க அலுவலகம் ஒன்றைத் திறப்பதற்கும் மாவட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கும் கூட்டங்களில் கலந்து கொள்வதற்கும் வருகைதரவிருப்பதாக ஊடக செய்திகள் வாயிலாக அறியக்கூடியதாக இருக்கின்றது. அலுவலகம் திறப்பதால் மட்டும் நல்லிணக்கம் ஏற்படமாட்டாது. ஏற்கனவே காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகமும் திறக்கப்பட்டது இன்றுவரை அது எதைச் சாதித்தது?

வடக்கு - கிழக்கு மாகாணங்களைப் பொறுத்தவரையில், தமிழ் மக்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். சிங்கள மக்கள் வாழாத இடங்களில் திட்டமிட்ட பௌத்த கோயில்களை உருவாக்குவது, தமிழ் மக்களின் பாரம்பரிய சைவக்கோயில் இருந்த இடங்களில் அவற்றைத் தகர்த்து, அது முன்னொரு காலத்தில் பௌத்தர்களுக்குச் சொந்தமாக இருந்தது என்று காரணம் கூறி அங்கும் பௌத்த சின்னங்களை உருவாக்குவது, நூற்றுக்கணக்கான வருடங்களாக தமிழ் மக்கள் வாழ்ந்து விவசாயம் செய்து வந்த காணிகளை அவர்களிடமிருந்து பறித்தெடுத்து, அங்கு அரசாங்கத்தின் செலவில் சிங்கள மக்களைக் குடியேற்றி, அந்த கிராமங்களின் தமிழ்ப் பெயர்களை சிங்களப் பெயர்களாக மாற்றி, தமிழர்களின் குடிசனப் பரம்பலை மாற்றும் வேலைகள் இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இவை தொடர்பாக பலதடவைகள் ஜனாதிபதிக்கும் அமைச்சர்களுக்கும் தெரியப்படுத்தப்பட்டும் இருக்கின்றது. ஆனால் அரசாங்கத்தால் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படாமல் இன்றும் அவை தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.

வடக்கு மாகாணத்தில் வவுனியா மாவட்டம் மிக அதிகமான தமிழர்களைக் கொண்ட ஒரு மாவட்டமாக இருக்கின்றது. ஆனால், தமிழ் மக்களின் கோரிக்கைகளையும் மீறி தொடர்ச்சியாக சிங்கள அரசாங்க அதிபரே அங்கு நியமிக்கப்பட்டு வருகின்றார். அரசாங்கம் தான் விரும்பியவாறு தனது நிகழ்ச்சிநிரலை முன்னெடுப்பதற்காகவே இத்தகைய செயற்பாடுகளைத் தொடர்ந்தும் செய்து வருகின்றது. வடக்கு மாகாணத்தின் பிரதம செயலாளராகவும் வடக்கு மாகாண சுகாதாரத் துறையின் பணிப்பாளராகவும் வடக்கு மாகாணத்தின் மின்சார சபையின் பிரதிப் பொது முகாமையாளராகவும் சிங்கள நிர்வாகிகளை நியமித்து வருவதுதான் நீங்கள் கூறுகின்ற நல்லிணக்கத்தின் வெளிப்பாடா என்பதை அறிய விரும்புகின்றோம்.

தமிழ் மக்கள் மீது சிங்களக் காடையர்களால் பல்வேறுபட்ட தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டபோதும், எம்மக்கள்மீது அரச பயங்கரவாதம் ஏவி விடப்பட்டு பல்லாயிரக் கணக்கான எமது மக்கள் கொல்லப்பட்டதன் பின்னரும், இவற்றையெல்லாம் மறந்து ஒன்றுபட்ட நாட்டிற்குள் ஒரு சமஷ்டி அரசியலமைப்பின் கீழ் வாழ்வதற்கான தமது நல்லெண்ணத்தை தமிழ் மக்கள் மீண்டும் மீண்டும் தெளிவுபடுத்தி வந்திருக்கின்றார்கள்.

ஆனால் அதனை ஏற்றுக்கொள்ள நீங்கள் என்றும் தயாராக இல்லை என்பதே உண்மையான விடயமாகும். எனவே வவுனியா வந்து நல்லிணக்க அலுவலகத்தைத் திறப்பதற்குப் பதிலாக, பலகாலமாக பாதிக்கப்ட்டிருக்கக் கூடிய தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதன் மூலமே உண்மையான நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப முடியும் என்பதை தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்.

நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக நீங்கள் இருப்பதால் எங்களது பல்வேறு பிரச்சினைகளை வேறு வேறு அமைச்சர்களுக்குக் கை நீட்டி திருப்பாமல் முதற் கட்டமாக அவற்றை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். குறிப்பாக, பல்வேறுபட்ட வழிமுறைகளில் காணிகளைப் பறிமுதல் செய்வது, பௌத்த கோயில்களை தமிழ்ப் பிரதேசங்களில் அமைப்பது போன்ற அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்துங்கள். இவை தான் நல்லிணக்கத்தின்மீது நம்பிக்கை வைப்பதற்கான ஆரம்ப நடவடிக்கையாக அமையும். எனவே, உங்கள் மத்தியில் தான் சிந்தனை மாற்றங்கள் தேவை.

தமிழரும் இந்த மண்ணின் மைந்தர்கள் என்பதை முதலில் நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். வரலாற்றுக்கு முந்தைய காலந்தொட்டு அவர்கள் இந்த மண்ணில் வாழ்கிறார்கள் என்பதை வரலாற்று ஆதாரங்கள் நிரூபித்து நிற்கின்றன. அதனையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஆகவே, தமிழ் மக்களுக்கு உரித்தான முழுமையான அதிகாரங்களைக் கொடுத்து அவர்கள் தமது சொந்த மண்ணில் சுயாட்சியுடன் வாழ்கின்ற சூழல் ஏற்படும்பொழுதே, நல்லிணக்கம், புரிந்துணர்வு என்பவை முழுமைபெறும்.

சுரேஷ் க.பிரேமச்சந்திரன்
தலைவர்
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

கேள்வியெழுப்புகிறார் சுரேஷ்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More
Mahanadhi - மகாநதி-20.08.2025

Mahanadhi - மகாநதி-20.08.2025

Read More