
posted 28th April 2024
உறவுகளின் துயர் பகிர்வு
காய்ச்சலால் உயிரிழந்த சிறுமி
காய்ச்சலுக்கு மீண்டும் சிகிச்சை பெறுவதற்காக மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்த 5 வயது சிறுமி வழியிலேயே உயிரிழந்த துயரச் சம்பவம் இன்று (28) ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
ஆவரங்கால் கிழக்கைச் சேர்ந்த சிறுமியே இவ்வாறு உயிரிழந்தார்.
இச் சிறுமி, சில நாட்களுக்கு முன்னர் காய்ச்சல் காரணமாக அச்சுவேலி பிரதேச மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருந்தார்.
இந்நிலையில், நேற்று திடீரென்று அவரின் உடல் நிலை மீண்டும் மோசமடைந்த நிலையில் பெற்றோர் அச் சிறுமியை அச்சுவேலி பிரதேச மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதே அச்சிறுமி உயிரிழந்தார்.
உயிரிழந்த சிறுமியின் சடலம் அச்சுவேலி பிரதேச மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், பிரேத பரிசோதனைக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
பிரேத பரிசோதனைக்குப் பின்னரே உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)