
posted 26th January 2023
காலாவதியான மற்றும் பழுதடைந்த உணவுப் பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த 20 வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களுக்கு 5 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
யாழ். மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட வர்த்தக நிலையங்களுக்கே இவ்வாறு தண்டப்பணம் விதிக்கப்பட்டது.
மாநகர எல்லைக்குள் உள்ள பல்பொருள் விற்பனை நிலையங்கள் கடந்த டிசெம்பர் 11, 12, மற்றும் இந்த மாதத்தில் கடந்த 17, 18ஆம் திகதிகளில் சுகாதார பரிசோதகர்களால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இதன்போது திகதி காலாவதியான உணவுப் பொருட்கள், பழுதடைந்த உணவு பொருட்கள், உரிய முறையில் பொதியிடப்படாத உணவு பொருட்கள் என 20 விற்பனை நிலையங்களில் பாவனைக்கு உதவாத பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
இந்த நிலையங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக யாழ். நீதிவான் நீதிமன்றில் வழக்கு தொடுக்கப்பட்டது. 24.01.2023 நடந்த விசாரணையில் உரிமையாளர்கள் குற்றத்தை ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து அவர்களுக்கு 5 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)