ஒலுவில் துறைமுகம் இழுத்து மூடப்பட வேண்டும்

ஒலுவில் துறைமுகத்திற்கு எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் பெயர் சூட்டப்பட்டிருப்பதானது ஒரு சூழ்ச்சியாகவே நோக்கப்படுகிறது. கல்முனைப் பிராந்தியத்தில் கடலரிப்பு ஏற்படுவதற்கும், கடற்றொழில் பாதிப்படைவதற்கும் முக்கிய காரணமாக அமைந்திருக்கின்ற இத்துறைமுகம் உடனடியாக இழுத்து மூடப்பட வேண்டும் என கிழக்கிழங்கை முஸ்லிம் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

இக்கோரிக்கையை வலியுறுத்தி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, துறைமுக அபிவிருத்தி அமைச்சர் நிமல் சிறிபால டி.சில்வா மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்டோருக்கு மகஜர் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக அமைப்பின் செயலாளர் செயிட் ஆஷிப் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;

மறைந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள், நாட்டினதும் பிராந்தியத்தினதும் பொருளாதார அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு ஒலுவில் துறைமுக நிர்மாணத் திட்டத்தை முன்மொழிந்திருந்தாலும், குறித்த கடற்பரப்பு துறைமுக அமைப்புக்கு பொருத்தமற்றது எனவும், அது வெற்றியளிக்காது இதனால் மீனவர் சமூகத்தினருக்கு பெரும் பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளது எனவும் நிபுணத்துவ ஆய்வறிக்கை வெளிப்படுத்தியிருந்தது.

எனினும், அவை எதுவும் கருத்தில் கொள்ளப்படாமலேயே துறைமுக நிர்மாண வேலைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதற்காக ஒலுவில் கிராமத்தில் நூற்றுக்கணக்கானோரின் குடியிருப்புக் காணிகள் சுவீகரிக்கப்பட்டிருந்தன. நீண்ட காலத்திற்கு பின்னரே இவற்றுக்கு நஷ்டஈடு வழங்கப்பட்ட போதிலும் காணிகளை இழந்தோர் எதிர்பார்த்த பெறுமதி, வழங்கப்படாமல், ஏமாற்றப்பட்டிருந்தனர். இன்னும் சிலருக்கு இன்று வரை நஷ்டஈடு வழங்கப்படவில்லை.

இத்துறைமுக நிர்மாணத்தினால் நாட்டுக்கோ, பிராந்தியத்திற்கோ சமூகத்திற்கோ இதுவரை எவ்வித பயனும் கிடைக்கவில்லை. மாறாக தொடர்ந்தும் இழப்புகளையே சந்திக்க நேரிட்டுள்ளது. இதற்காக ஒரு கிராமம் காவு கொடுக்கப்பட்டிருக்கிறது. மக்கள் தமது காணிகளையும், வாழ்வாதாரத்தையும் இழந்து, நிர்க்கதியடைந்திருப்பதுடன் பாரிய கடலரிப்புக்கும் வழிவகுத்திருக்கிறது.

காலத்திற்கு காலம் பதவிக்கு வருகின்ற அரசுகளும், துறைமுக அமைச்சர்களும் இவற்றுக்கு தீர்வு வழங்குவதாக கூறி, அறிக்கைகள் வெளியிட்டு, மாறி மாறி களவிஜயங்கள் மேற்கொள்கின்ற போதிலும் மக்களுக்கு இன்னும் தீர்வு கிடைப்பதாக இல்லை.

இதனை வர்த்தக துறைமுகமாக இயக்க முடியாது எனத் தெரிவித்து, மீன்பிடித் துறைமுகமாக செயற்படுத்துவதற்கு கடந்த கோட்டாபய அரசாங்கத்தின் அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டு, கடற்றொழில் அமைச்சின் கீழ் இத்துறைமுகம் கொண்டு வரப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து கடற்றொழில் அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா அண்மையில் இங்கு விஜயம் செய்து, இத்துறைமுகத்திற்கு அஷ்ரப் ஞாபகார்த்த மீன்பிடித் துறைமுகம் என்று பெயர் சூட்டி விட்டுச் சென்றுள்ளார்.

இத்துறைமுகத்திற்கு மறைந்த தலைவரான அஷ்ரபின் பெயரை சூட்டி விட்டால் பிரச்சினைகள் எல்லாம் தாமாக தீர்ந்து விடுமா? இது மக்களை ஆசுவாசப்படுத்தி, திசைதிருப்பும் சூழ்ச்சியாகவே நோக்கப்படுகிறது. இவ்வாறான மாயைகளை விடுத்து, மக்களின் பிரச்சினைகளை உள்வாங்கி தூரநோக்குடன், ஆக்கபூர்வமாக சிந்தித்து, செயற்பட அரசாங்கமும் சம்மந்தப்பட்ட அமைச்சர்களும் அவசரமாக முன்வர வேண்டும்.

வர்த்தக துறைமுகமாயினும் சரி, மீன்பிடித் துறைமுகமாயினும் சரி, இதன் அமைவிடம் துறைமுகத்திற்கு எவ்வகையிலும் பொருத்தமற்றது என்று நிரூபிக்கப்பட்டிருப்பதால், மக்களை இன்னுமின்னும் ஏமாற்றாமல் இதனை இழுத்து மூடுவது ஒன்றே தீர்வாக அமையும் என்ற யதார்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும். இதன் மூலம் கடலரிப்பில் இருந்து இப்பிரதேசங்களை காப்பாற்ற முயற்சிக்கலாம். அத்துடன் மரபு ரீதியாக முன்னெடுக்கப்பட்டு வந்த கடற்றொழிலை மீளக்கட்டியெழுப்புவதற்கும் சாதகமான புறச்சூழல் ஏற்படும் என்பது மீனவர் சமூகத்தின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இவ்விடயங்களை குறித்த மகஜரில் சுட்டிக்காட்டியிருக்கிறோம் என்றார்.

ஒலுவில் துறைமுகம் இழுத்து மூடப்பட வேண்டும்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Read More
Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More