ஒற்றுமையால் ஒருங்கிணையும் இலங்கை - செல்வம் அடைக்கலநாதன்

எங்கள் தமிழ் மக்கள் தாக்கப்பட்டதும் சிறைசாலைகளை தமிழ் மக்களால் இந்த அவசரகால சட்டத்தை வைத்துக் கொண்டு நிரப்பியபோது யாருமே அதற்கு எதிராக குரல் கொடுக்கவில்லை. ஆனால் இன்றைய காலம் ஒரு ஒற்றுமையின் காலமாக மாறி வருகின்றது. இன்றைய போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர் யுவதிகள் அன்று தமிழர் நடாத்திய போராட்டம் உண்மையானது என பேசி வருகின்றார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பு வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இவ்வாறு தெரிவித்தார்.

புதன்கிழமை (27.07.2022) அன்று நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வின்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆற்றிய தனது உரையில் மேலும் தெரிவிக்கையில்;

முன்னாள் மறைந்த ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனா அவர்கள் இந்த அவசரகால சட்டத்தை உருவாக்கியதும், இனப்படுகொலையை ஆரம்பித்ததும் அவருடைய காலத்தில்தான் என்பதை இங்கு கூறிக்கொண்டு, இந்த படுகொலையை ஆரம்பித்த நாள் இன்று 39 வருடங்களைத் தாண்டிச் செல்லுகின்றது. இந்த அவசரகால சட்டத்தை உருவாக்கிய நாளும் 39 வது ஆண்டை கடந்து செல்லுகின்றது.

வெலிக்கடையில் படுகொலையை ஆரம்பித்து இந்த யூலை படுகொலை மாதத்தை ஒரு கரிநாளாக எங்கள் தமிழ் தேசம் நினைவு கூறுகின்றது.

அந்த ரீதியில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஸ்தாபகரான தங்கத்துரை குட்டிமணி அவர்களுடன் மரித்த ஜெகன் , நடேசதாசன் தேவன் போன்றவர்களுடன் 53 பேர் படுகொலை செய்யப்பட்டார்கள்.

அந்த ரீதியில் இந்த உயர்ந்த சபையிலே யாரும் கருத்துக்கூறவில்லை என்ற கவலையோடு ஆழ்ந்த இரங்கலை தமிழ் மக்கள் சார்பாகவும் தமிழீழ இயக்கத்தின் சார்பாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பாகவும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

இங்கு எனக்கு என்ன கவலை என்றால் இன்று கொண்டு வரும் அவசரகால சட்டம் புதுப்பிக்கப்பட போகின்றது. சிங்கள மக்கள் தாக்கப்பட்டுள்ளனர். அந்த விடயத்தில் இன்று ஒரு பெரிய விடயமாக பேசப்படுகின்ற ஒரு நிகழ்ச்சி நிரலாக நான் இன்று இங்கு காணக்கூடியதாக இருக்கின்றது.

சிங்கள மக்கள் தாக்கப்பட்டதை நாங்கள் வண்மையாக கண்டிக்கின்றோம். ஜனநாயக ரீதியில் போராடியவர்களை தாக்கியது மிகவும் கண்டிக்கத்தக்கது.

இந்த ரீதியில் யாழ்ப்பாணத்தில் வடக்கு கிழக்கில் மலையகத்தில் இந்த அரசு செய்த அநியாயத்தை கண்டித்து இன்றும் நடக்கும் போராட்டத்தில் தங்கள் ஆதரவை வழங்கி வருகின்றனர்.

இவ்வேளையில் எங்கள் தமிழ் மக்கள் தாக்கப்பட்டதும் சிறைசாலைகளை தமிழ் மக்களை இந்த அவசரகால சட்டத்தை வைத்துக் கொண்டு நிரப்பியபோது யாருமே அதற்கு எதிராக குரல் கொடுக்கவில்லை. அப்பொழுது அது ஒரு பயங்கரவாதமாக பார்க்கப்பட்டது.

இந்த உயர்ந்த சபையிலே நான் தெரிவிப்பது இன்றைய காலம் ஒரு ஒற்றுமையின் காலமாக மாறி வருகின்றது. இன்றைய போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர், யுவதிகள் அன்று தமிழர் நடாத்திய போராட்டம் உண்மையானது என பேசி வருகின்றார்கள்.

இன்று ஜனாநாயக ரீதியான போராட்டத்துக்கு நாங்கள் ஆதரவு வழங்க தயாராக இருக்கின்றோம். இந்த அவசர காலத்தை வைத்துக் கொண்டு அவர்களை அடக்க நினைத்தால் அன்று ஜே.ஆர். ஜெயவர்த்தனா அன்று செய்த அநியாத்தின் நிமித்தமே அன்று ஆயுத போராட்டம் உதித்தது என நான் இங்கு சுட்டிக்காட்டுகின்றேன்.

தந்தை செல்வா காலத்தில் ஏற்பட்ட அந்த ஜனநாயக போராட்டத்தை அடக்கியது போன்று அது இன்றும் இடம்பெற்று வருகின்றது. ஆகவே யாவரும் ஒன்றிணைந்து எமது இனப் பிரச்சனையையும், இந்த நாட்டில் உள்ள அனைத்து மக்களினதும் நிலவுகின்ற பிரச்சனைகளையும் நீக்கி இந்த ஐக்கிய இலங்கைக்குள்ளே யாவரும் சுதந்திரமாக வாழக்கூடியதை சந்தர்ப்பம் வந்துள்ளது.

  • ஆகவே இந்த அவசரகால சட்டத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்க்கும் என்பதை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். அதுமட்டுமல்ல சிறையிலே கொல்லப்பட்டவர்கள் அவர்களின் உடல்கள் எங்கே புதைக்கப்பட்டது என்பதை இற்றைவரை கண்டு பிடிக்கப்படவில்லை. ஆகவே இந்த அரசு இவர்கள் எங்கே புதைக்கப்பட்டார்கள் என்பதை உறுதிப்பட தெரிவிக்க வேண்டும் என நான் கேட்டுக் கொள்ளுகின்றேன்.
  • இன்று டீசல், பெற்றோல் வழங்குவதற்கு கொடுக்கும் முக்கியத்துவம் மண்ணெணெய்க்கு வழங்கப்படுவதில்லை. இன்று எங்கள் மீனவ சமூகம் 34 மாதங்களாக பட்டினி சாவை எதிர்கொண்டு வருகின்றனர்.

  • இவ்வாறு விவசாயிகளும் இவ்வாறான சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ளனர். ஆகவே பெற்றோல், டீசலுக்கு வழங்கும் முக்கியத்துவம் போன்று இந்த அரசு மீனவர்களுக்கும் விவசாயிகளுக்கும் காண்பிக்க வேண்டும் என கேட்டு நிற்கின்றேன்.


  • அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது சேறு பூசுகின்ற புல்லுறுவிகள் நாங்கள் சோரம் போயிற்றோம் என தெரிவிக்கின்றனர். இவர்களை பார்த்து கேட்கின்றேன் நாங்கள் சோரம் போயிற்றோம் என நிரூபியுங்கள் அப்பொழுது நாங்கள் நீங்கள் சொல்வதை கேட்கின்றோம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு எப்பொழுதும் முதுகெழும்போடுதான் செயல்படும். எடுத்த முடிவின் பிரகாரம் நடக்கும் முடிவை ஒருபோதும் மாற்றிக் கொள்ளாது. தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒருபோதும் சோரம் போகாது என்பதையும் இங்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என்றார்.

ஒற்றுமையால் ஒருங்கிணையும் இலங்கை - செல்வம் அடைக்கலநாதன்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)