ஒரு வருடத்துக்குள் அரசியல் தீர்வு  - ரணிலின் வாக்குறுதியை வரவேற்கும் சுமந்திரன்

"இனப்பிரச்சினைக்கான முழுமையான தீர்வு புதிய அரசமைப்பினூடாக ஒரு வருட காலத்துக்குள்ளே செய்து முடிக்கப்படும் என்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வாக்குறுதியைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்கின்றது."

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"புதிய அரசமைப்பினூடாக இனப்பிரச்சினைக்கான முழுமையான தீர்வு காண்பது தொடர்பான வேலைத் திட்டம் உடனடியாக நடைபெற வேண்டும். அதை ஜனாதிபதி முன்னெடுக்கின்ற போது எங்களுடைய முழுமையான இணக்கப்பாடும் முழுமையான ஆதரவும் அதற்கு இருக்கும் என்பதே எங்களுடைய உத்தியோகபூர்வ நிலைப்பாடாகும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமராக இருந்த காலப்பகுதியில் எவ்வளவு சேர்ந்து செயற்பட்டோம் என்பதை அவர் அறிவார்.

2016 ஆம் ஆண்டு ஜனவரியிலிருந்து நாடாளுமன்றம் அரசமைப்பு பேரவையாக மாற்றப்பட்ட காலத்திலிருந்து ஒரு பிரேரணை நிறைவேற்றப்பட்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து இதற்கான முன்னெடுப்புக்காக வழிகாட்டல் குழு எல்லாம் அமைக்கப்பட்டது.

அந்த வழிகாட்டல் குழுவிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் நானும் அங்கத்தவர்களாக இருந்திருக்கின்றோம்.

புதிய அரசமைப்பு தொடர்பான இரண்டு இடைக்கான அறிக்கைகளும் சமர்ப்பிக்கப்பட்டன. 2019 ஜனவரி மாதம் இரண்டாவது இடைக்கால அறிக்கையோடு நிபுணர் குழுவினால் வரையப்பட்ட ஒரு முழுமையான அரசமைப்பு வரைவு கூட அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து வந்து ஜனாதிபதி தேர்தலிலே ஐக்கிய தேசிய கட்சியின் சார்பாக முன் நின்ற சஜித் பிரேமதாஸவுடைய தேர்தல் அறிக்கையிலே அந்த முயற்சியில் தொடர்ந்து செயற்பட்டு முடிவை எட்ட வேண்டும் என்று சொல்லப்பட்டது.

2016 ஆம் ஆண்டு அரசமைப்பு பேரவையாக உருவாக்கப்பட்டு பல வித கூட்டங்கள், கலந்துரையாடல்கள், மக்கள் சந்திப்புகள் செய்யப்பட்டு மாகாண சபைகளுடைய பிரதிநிதித்துவத்தையும் பெற்று விசேடமாக தென்பதியிலுள்ள ஏழு மாகாண சபைகளை உள்ளடக்கி வேலை செய்யப்பட்டது.

அதனடிப்படையில் தொடர்ந்து முன் செல்ல ஜனாதிபதி ஆவண செய்ய வேண்டும். கடந்த ஆட்சிக்காலத்திலே இந்த வேலை செய்யப்பட்டது. இதனை வெகு விரைவாகத் தொடர்ந்து முன்னெடுத்தால் ஒரு வருட காலத்துக்குள் இதனை முடிவுக்குக் கொண்டு வரலாம். ஒரு வருடம் கூடத் தேவை இல்லை. அனைவருடைய இணக்கப்பாட்டோடு சகல மக்களுடைய ஆதரவோடு புதிய அரசமைப்பு கொண்டு வரப்பட வேண்டும்.

ஜனாதிபதியின் கருத்தை வரவேற்கின்ற நேரத்தில் இதற்கு முன்னர் பங்களித்ததைப் போலவே முழுமையான பங்களிப்பைப் கொடுப்போம் என ஜனாதிபதிக்குச் சொல்லி வைக்க விரும்புகின்றேன்.

இதேவேளை, ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் 8 தமிழ் அரசியல் கைதிகள் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அதற்கு ஜனாதிபதிக்கும், அரசுக்கும் நன்றிகள். சிறையில் வாடும் அனைத்து தமிழ் அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கை" என்றார்.

ஒரு வருடத்துக்குள் அரசியல் தீர்வு  - ரணிலின் வாக்குறுதியை வரவேற்கும் சுமந்திரன்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More
Mahanadhi - மகாநதி-20.08.2025

Mahanadhi - மகாநதி-20.08.2025

Read More