ஒத்துழைப்பைக் கோருகிறது மாநகர சபை

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட நீர் நிலைகள் மற்றும் பொது இடங்களில் ஆடு, மாடு, கோழிக் கழிவுகளைக் கொட்டி, சூழலை மாசுபடுத்தும் நபர்களைக் கைது செய்து, தண்டிப்பதற்கு பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டும் என மாநகர சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அசாதாரண சூழ்நிலை காரணமாக நிதிப்பற்றாக்குறை மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு மத்தியிலேயே கல்முனை மாநகர சபையானது திண்மக் கழிவகற்றல் சேவையை சிறப்பாக முன்னெடுத்து வருகின்றது. எனினும் நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக அட்டாளைச்சேனை, பள்ளக்காடு பகுதியில் அமைந்துள்ள திண்மக்கழிவகற்றல் நிலையம் வழமை போன்று தொழிற்படாத காரணத்தினால் நாம் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் மாற்று ஏற்பாடுகளை மேற்கொண்டு இச்சேவையை மிகுந்த சவால்களுக்கு மத்தியில் முன்னெடுத்து வருகின்றோம்.

இந்நிலையில் சாய்ந்தமருது கரைவாகு பொலிவேரியன் வீட்டுத் திட்டத்தை சூழவுள்ள குளங்கள், கல்முனை கிரீன்பீல்ட் வீட்டுத் திட்டத்திற்கு பின்னாலுள்ள ஆற்றங்கரைப் பகுதிகள் மற்றும் தோணாப் பகுதிகள் உள்ளிட்ட நீர் நிலைகளில் ஆடு, மாடு, கோழிக் கழிவுகளையும் இதர குப்பைகளையும் கொட்டி வருகின்றனர். இவற்றைக் கூட அடிக்கடி பெருமளவிலான ஆளணியிருடன் கனரக இயந்திரங்கள் கொண்டு பெரும் சிரமங்களுக்கு மத்தியில் மாநகர சபையின் திண்மக்கழிவகற்றல் முகாமைத்துவப் பிரிவு தூய்மைப்படுத்தியே வருகின்றது. இப்பணியில் ஈடுபடுகின்ற சுகாதாரத் தொழிலாளர்களும் எம்மைப்போன்ற மனிதர்களே என்பதை எல்லோரும் உணர்ந்து கொள்ள வேண்டும். தவிரவும் இப்பணிகளை ஒவ்வொரு நாளும் செய்வதற்கான வசதிகள் மாநகர சபையிடம் கிடையாது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

மாநகர சபையின் வர்த்தக அனுமதிப் பத்திரம் பெற்ற கோழிக் கடைகளில் சேர்கின்ற கோழிக் கழிவுகள் தினமும் அதற்காக ஒதுக்கப்பட்டிருக்கின்ற பிரத்தியேக திண்மக்கழிவகற்றல் வாகனங்களில் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறே மாநகர சபையின் வர்த்தக அனுமதிப் பத்திரம் பெற்ற மாட்டிறைச்சிக் கடைகளுக்கான மாடுகள், விலங்கறுமனைகளில் அறுக்கப்படுவதனால், அக்கழிவுகளும் முறையாக அகற்றப்பட்டு வருகின்றன.

ஆனால், அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக நடத்தப்படுகின்ற கோழிக் கடைகளினதும், தனி நபர்களினதும் கோழிக் கழிவுகளும், வீடுகளிலும் அங்கும் இங்குமாகவும் சட்டவிரோதமாக அறுக்கப்படும் ஆடு, மாடுகளின் கழிவுகளுமே மேற்படி நீர்நிலைகளில் கொட்டப்படுவதாக அறிய முடிகின்றது. அத்துடன் வீடுகளில் அன்றாடம் சேர்கின்ற கழிவுகளையும் சிலர் பொறுமையில்லாமல் உடனுக்குடன் இவ்வாறான நீர்நிலைகளிலும் தெருக்களிலும் பொது இடங்களிலும் வீசி வருகின்றனர். சட்டத்தை மதிக்காமலும் பொதுநலன் சார்ந்த உணர்வு எதுவுமில்லாமலும் செய்கின்ற இந்த ஈனச்செயல் மிகவும் கண்டிக்கத்தக்கதும், தண்டனைக்குரிய குற்றமுமாகும். சில ஈனப்பிறவிகளின் கண்டிமூடித்தனமான இச்செயற்பாடுகளினால் எமது மாநகரப் பகுதிகள் மாசுபட்டு, துர்நாற்றம் வீசுவதுடன் மிகவும் அசிங்கமாகவும் காட்சியளிக்கின்றன. இதனால் முழு மாநகருக்கும் பொது மக்களுக்கும் அவப்பெயர் ஏற்படுத்தப்படுகின்றது.

ஆகையினால், இனிவரும் நாட்களில் இவ்வாறு ஆடு, மாடு, கோழிக் கழிவுகளையும் ஏனைய குப்பைகளையும் மேற்படி இடங்களில் கொட்டும் ஈனப்பிறவிகளை கண்டறிந்து, கைது செய்வதற்கும் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் அதன் மூலம் எமது மாநகரின் சுற்றுச்சூழல் சுத்தத்தையும் உறுதிப்படுத்துவதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டும் என கல்முனை மாநகர வாழ் பொது மக்களை கல்முனை மாநகர சபை அன்பாய் வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒத்துழைப்பைக் கோருகிறது மாநகர சபை

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House