
posted 16th January 2023
புத்தளத்தை சேர்ந்த 6000 முஸ்லிம் பெண்கள் இணைந்து பெண் காதி வேண்டும் என கேட்டதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச கூறிய கூற்று பொய் என புத்தளம் முஸ்லிம் பெண்கள் இணைந்து கோஷம் எழுப்பியுள்ளதை ஐக்கிய காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது.
இவ்வாறு ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் விடுத்துள்ள ஊடக அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
கடந்த காலங்களில் நாட்டில் பொருளாதார பிரச்சினைகள் ஏற்படும் போது அதனை திசை திருப்புவதற்காக முஸ்லிம் திருமண சட்டத்தை திருத்த வேண்டும் என்ற கோஷங்களை இனவாதிகள் எழுப்பினர். இவர்கள் தமக்கு ஆதரவாக முஸ்லிம் பெயர் தாங்கி பெண்கள் சிலரையும் இணைத்துக்கொண்டனர்.
இந்த நிலையில் தற்போது நாட்டில் இனவாத கருத்துக்கள் கொஞ்சம் மவுனமாக உள்ள நிலையில் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ அவர்கள் மீண்டும் முஸ்லிம் திருமண சட்ட திருத்தம் என சொல்லிக்கொண்டு இனவாதத்தை விதைக்க முயன்றுள்ளார். இதன் ஒரு கட்டமாகவே 6000 புத்தளம் பெண்கள் இணைந்து பெண் காதி வேண்டும் என சொன்னதாக தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்திருந்தார்.
அவரது கருத்து தவறு என புத்தளம் முஸ்லிம் பெண்கள் ஆர்ப்பாட்டம் செய்து தெளிவு படுத்தியுள்ளனர்.
முஸ்லிம் திருமண சட்டத்தை திருத்தி, பெண்களை காதியாக்கும் முயற்சிக்கெதிராக புத்தளம் பெண்கள் போல் அனைத்து முஸ்லிம் ஊர் பெண்களும் குரல் எழுப்ப வேண்டும்.
கை வைக்காதே! கை வைக்காதே!
முஸ்லிம் திருமண சட்டத்தில் கை வைக்காதே!
என்ற கோஷம் எழுப்பப்பட வேண்டும்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)