எமது இதயங்களில் இன்றும் உயிர் வாழ்கிறார்

இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்திற்கு அரசியல் முகவரியை பெற்றுத்தந்த பெருந்தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் எம்மை விட்டுப் பிரிந்து 22 வருடங்கள் சென்றாலும் எங்களது இதயங்களில் இன்றும் உயிர் வாழும் தலைவனாகவே அவர் திகழ்கிறார் என்று கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீப் தெரிவித்துள்ளார்.

இன்று அனுஷ்டிக்கப்படுகின்ற தலைவரின் 22ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள விசேட செய்தியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது;

முஸ்லிம்கள் இந்நாட்டுப் பூர்வீகக் குடிகளாக இருந்தபோதிலும் காலாகாலமாக சமூக ரீதியாக கட்டமைக்கப்படாமல், எடுப்பார் கைப்பிள்ளைகளாகவே இருந்து வந்தனர். அவ்வாறான ஒரு சூழலில்தான் அஷ்ரப் என்கிற ஒரு தலைவன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் பேரியக்கத்தை தோற்றுவித்து, முஸ்லிம்களும் இந்நாட்டில் தனித்துவமான ஓர் இனம் என்ற அடையாளத்தை நிறுவினார்.

ஏனைய சமூகத்தினர் போன்று அனைத்து உரிமைகளுடனும், அபிலாஷைகளுடனும் சமத்துவமாக வாழ்வதற்கான அத்தனை தகுதிகளும் முஸ்லிம் சமூகத்தினருக்கு இருக்கின்றன என்பதை உரத்துச் சொல்லி, செயல் வடிவம் கொடுத்த ஓர் உன்னத தலைவனே அஷ்ரப் ஆவான்.

காலத்திற்கு காலம் எம்மில் சிலர் அமைச்சர்களாகவும், பிரதி அமைச்சர்களாகவும் பதவி வகித்திருந்தாலும் ஓர் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக முஸ்லிம் சமூகத்தை தூக்கி நிறுத்தியது மட்டுமல்லாமல், ஆட்சியின் பங்காளராகவும் மாறுவதற்கான அரசியல் சூட்சுமத்தை தலைவர் அஷ்ரப் நிரூபித்துக் காட்டினார்.

பதவிகளை அனுபவிக்க வேண்டும் என்பதற்காய் ஆட்சியாளர்களுக்கு சோரம்போய் அடிபணியாமல், பேரம் பேசும் சக்தியை உச்சமாகப் பயன்படுத்தி, சமூகப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைத் தேடிக்கொடுத்தார். அப்படியொரு இராஜ தந்திரத்தினாலேயே தென்கிழக்கு பல்கலைக்கழகத்தையும் உருவாக்கினார். அபிவிருத்திகளுக்காக உரிமைகளை புறந்தள்ளாமல், உறுதியுடன் நின்று இரண்டையும் சமாந்தரமாக முன்கொண்டு சென்றார்.

இனப்பிரச்சினை புரையோடிப்போயிருந்த கால கட்டத்தில், யுத்தம் உக்கிரமடைந்திருந்த வேளையில் சிங்கள, தமிழ் சமூகத்தினர் மத்தியில் முஸ்லிம் சமூகத்தின் வகிபாகம் நடுநிலைப்போக்குடன் சமாந்தரமாக இருக்க வேண்டுமென்பதை தனது மதிநுட்பத்தினால் செயற்படுத்திக் காட்டினார்.

சமூக ஒற்றுமையை பலப்படுத்திக் கொண்டு இனங்களிடையான ஐக்கியம், சமாதானம், சகவாழ்வுக்காக தலைவர் அஷ்ரப் தன்னை அர்ப்பணித்திருந்தார். விசேடமாக வடக்கு, கிழக்கில் தமிழ், முஸ்லிம் சமூகங்களின் ஒற்றுமைக்கு உந்து சக்தியாக விளங்கிய அதேவேளை தென்னிலங்கையில் சிங்கள பெரும்பான்மை சமூகத்தினருடன் இரண்டறக்கலந்து வாழ்கின்ற முஸ்லிம்களின் நலன்களையும் ஐக்கியத்தையும் அவர் உறுதிப்படுத்தியிருந்தார்.

இப்படி முஸ்லிம் சமூகத்தின் ஓர் ஆதர்ஷபுருஷராக பெரும் தலைவர் அஷ்ரப் திகழ்ந்தார். அதனால்தான் நம் இதயங்களில் அவர் இன்றும் உயிர் வாழ்கிறார்.

எல்லாம் வல்ல இறைவன் அன்னாருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயர்ந்த சுவர்க்கத்தை வழங்குவானாக என்று முதல்வர் ஏ.எம். றகீப் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எமது இதயங்களில் இன்றும் உயிர் வாழ்கிறார்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Read More
Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More