
posted 26th May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
உறுமய வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தக் கோரிக்கை

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கமைவாக, தேசிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் 'உறுமய' நிபந்தனைகளற்ற பூரண காணி ஆவணம் வழங்கும் வேலைத் திட்டத்தை அம்பாறை மாவட்டத்தில் வெற்றிகரமாகவும், வினைத்திறனுடனும் நடைமுறைப்படுத்தி மக்களுக்கு உதவ வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இவ் வேலைத் திட்டம் தொடர்பில், அம்பாறை மாவட்டத்திலுள்ள கரையோரப் பிரதேச செயலகங்கள் கூடிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் கோரப்படுகின்றது.
இவ் விடயம் தொடர்டபில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது,
அம்பாறை மாவட்டத்தில் அதிகமான மக்கள் தற்காலத்தில் காணிப் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். அதிகமானவர்களுக்கு காணி உரிமம் அல்லது ஆவணம் உள்ள போதிலும், அது நிபந்தனைகளற்ற பூரண காணி ஆவணமாக இல்லை. இதனால் அவர்கள் சிரமங்களை நீண்டகாலமாக எதிர்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறான மக்களுக்கு ஜனாதிபதியின் 'உறுமய' நிபந்தனைகளற்ற பூரண காணி ஆவணம் வழங்கும் வேலைத் திட்டம் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
இவ் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு பிரதேச செயலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்திலுள்ள பிரதேச செயலக காணிப்பிரிவுகள் இது தொடர்பான விண்ணப்பங்களை கிராம உத்தியோகத்தர் ஊடாக ஏற்கனவே பெற்றுக் கொண்டுள்ளன.
விண்ணப்பித்தவர்கள் அனைவருக்கும் நிபந்தனைகளற்ற காணி ஆவணம் வழங்குவதிலேயே 'உறுமய' வேலைத் திட்டத்தின் வெற்றி தங்கியுள்ளது. ஆகையால், இப்பணியை அம்பாறை மாவட்ட பிரதேச செயலாளர்கள் நேரடியாக மேற்பார்வை செய்து, வினைத்திறனுடன் வெற்றிகரமாகவும் நடைமுறைப்படுத்தி சம்பந்தப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும் என கோரப்படுகின்றது.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)