
posted 5th November 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
உயர்தர பரீட்சைக்கு தோற்றும் வாய்ப்பு
மன்னார் பெருநிலப் பரப்பில், முசலி பிரதேசத்தில் இருந்து க.பொ.த.( உயர்தர) பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு இந்த ஆண்டிலிருந்து சிலாவத்துறையில் பிரஸ்தாப பரீட்சைக்கு தோற்றும் வாய்ப்பு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமின் முயற்சியின் பயனாகக் கிட்டியுள்ளது.
முசலி பிரதேசத்தைச் சேர்ந்த உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு பரீட்சை நிலையமாக வெகு தூரத்தில் அமைந்துள்ள மன்னார் பரிகாரிகண்டல் என்ற இடம் தெரிவு செய்யப்பட்டிருந்தது. இந்த பரீட்சை நிலையத்துக்கு செல்வதில் முசலி பிரதேசத்தைச் சேர்ந்த உயர்தர பரீட்சைக்கு தோற்றும் 300க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் போதிய போக்குவரத்துவரத்து வசதியின்மையோடு 25 கிலோ மீட்டர் தூரமளவு பயணிக்க வேண்டிய நிலைமை , தற்போதைய கஷ்டமான சூழ்நிலையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் போன்ற பல்வேறு பிரச்சினைகளையும், அசௌகரியங்களையும் எதிர்நோக்கி இருந்தனர். இதனைமுஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் கல்வி அமைச்சின் பாராளுமன்ற ஆலோசனைக் குழுவின் கவனத்துக்கு 8 .8 .2023ஆம் திகதி எழுதிய கடிதத்தின் ஊடாக சுட்டிக்காட்டி, அதனை விரைவாக நிவர்த்திக்குமாறு கோரி இருந்தார்.
பாராளுமன்ற உறுப்பினரின் காரணிகளை சீர்தூக்கி பார்க்கும்படி கல்வி அமைச்சின் செயலாளருக்கு, அமைச்சின் பாராளுமன்ற ஆலோசனைக் குழு 28. 8 .2023 ஆம் திகதி அனுப்பி வைத்திருந்தது.
அதனைத் தொடர்ந்து பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகத்திற்கு இது பற்றி கல்வி அமைச்சு அறிவித்தற்கமைய, அவரால் மன்னார் வலய கல்விப் பணிப்பாளருக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைய இதுபற்றி நன்கு ஆராயப்பட்ட பின்னர், முசலிப் பிரதேச மாணவர்களுக்கு க.பொ.த. (உயர்தர) பரீட்சைக்கு சிலாவத்துறை, மன்/முசலி முஸ்லிம் மகா வித்தியாலத்தில் அமைக்கப்படவுள்ள நிலையத்தில் பரீட்சை எழுதுவதற்கு இந்த ஆண்டிலிருந்து உரிய அங்கீகாரம் வழங்கப்படுவதாக கல்வி அமைச்சின் செயலாளர் சார்பில் மேலதிக செயலாளர் எச். நிலக்ஷி என். குணசேகர கடிதம் மூலம் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமுக்கு 27.10.2023ஆம் திகதி அறிவித்துள்ளார்.
அத்துடன், ஏற்கனவே, க.பொ.த. (சாதாரணதர) பரீட்சைக்கு இந்தப் பாடசாலையில் மாணவர்கள் தோற்றிவருகின்றனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)