இலங்கை நாட்டின்  ஜனநாயகம் பாராளுமன்ற செங்கோலுக்கின்றி  சீனாவின் உளவுக் கப்பலுக்கோ

இந்தக் காலகட்டத்தில் இந்தியா உணவுக்கப்பலை அனுப்புகிறது. ஆனால், தங்களால் வழங்கப்பட்ட கடனைக் கூட மறுசீரமைப்புச் செய்யமுடியாது என்று சொல்கின்ற சீனா இங்கு உளவுக் கப்பலை அனுப்புகின்றது. அதைவிட வேதனையான விடயம் பாராளுமன்றத்தில் செங்கோல் வரும் போது எழுந்து மரியாதை கொடுக்காத தேரர் சீனக்கப்பல் வரும் போது மரியாதை கொடுத்து எழுந்து நிற்பது தான் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமாக கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

விவசாயக் கடன் தள்ளுபடி என்பது மட்டக்களப்பு, அம்பாறை விவசாயிகளுக்கு இல்லாமல் உள்ளது. ஏனெனில், அம்மாவட்ட விவசாயிகள் குறிப்பிட்ட காலத்துக்கு முன்னரே இடைப்போக வேளாண்மையை முடித்து தற்போது பெரும் போகத்திற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதால் அவர்கள் பெற்ற கடன்களை அடைத்து விட்டார்கள். அவர்களுக்கு இந்தக் கடன் தள்ளுபடியானது இல்லை. இதனை விவசாய அமைச்சர் கருத்திற் கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய பாராளுமன்ற அமர்வில் பாதீட்டு விவாதத்தின் போது உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

உண்மையில் இந்த நான்கு மாதங்களுக்கான இடைக்கால வரவு செலவுத் திட்டம் விவாதித்துக் கொண்டிருக்கையில், சர்வதேச நாணய நிதியம் ஊழியர் மட்டத்தில் 2.9 பில்லியன் டொலர்களை இலங்கைக்குக் கடனாக வழங்க முன்வந்திருப்பதையிட்டு ஓரளவுக்கு இந்த நாடு மூச்சு விடக்கூடிய நிலைமைக்கு வரும் என்பது எல்லோருடையதும் எதிர்பார்ப்பு. அதே வேளையில், அவர்கள் சில நிபந்தனைகளைக் கூட வைத்திருக்கிறார்கள்;

  • வரியைச் சரியாக பேணிப் பாதுகாப்பது
  • மக்களின் அடிப்படை வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான வேலைத் திட்டம்

  • அத்துடன் முக்கியமானதொன்றானதும், இந்த நாட்டில் மலிந்து கிடப்பதுமானதும், இந்தப் பொருளாதார நெருக்கடிக்கான காரண கர்த்தா ஊழல், அதனை முற்றாக இல்லாதொழிப்பது

  • அதைவிட மேலாக இலங்கைக்குக் கடந்த காலங்களில் கடன் கொடுத்த நாடுகளிடம் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக ஒரு உடன்பாட்டுக்கு வருதல் என்பனவாகும்.

நேற்றைக்கு முதல் நாள் (31) மத்திய வங்கியின் ஆளுனர் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நாட்டின் தற்போதைய பொருளாதார நிலவரம் தொடர்பாக விளக்கமளித்திருந்தார். அவர் குறிப்பிடும் போது இந்த நாடு சுதந்திரமடைந்த காலமிருந்து தன்னிறைவடையவில்லை. மாறாக, கடனுக்கு மேல் கடன் பெற்றிருப்பதாகவும் சொன்னார். அதே வேளையில் 80 ஆண்டுகளில் பெற்ற கடன்களிருப்பினும் இந்த நாட்டை முன்னேற்றுவதாகக் கூறியிருந்தார்.

மேலும் கூறுகையில், இக் கடன்களை மகாவலி அபிவிருத்திக்கும், நீர் மூலமான மின்சார உற்பத்திக்குமாக பெற்றிருந்ததாகக் கூறியிருந்தார். ஆனால், மகாவலி அபிவிருத்தி ஊடாக அரிசியில் தன்னிறைவடைந்திருந்தாலும், மகாவலி அபிவிருத்தியினை வைத்து வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் இனப்பரம்பலைக் குறைப்பதற்கான குடியேற்றங்களை மையப்படுத்தியே அன்றிலிருந்து இன்று வரை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

நீர் மூலமாக 60 வீதம் மின்சாரத்தைப் பெற்றுக் கொடுத்திருந்தாலும், ஏனைய தற்போதைய ஊழலின் மத்தியில் டீசலில் இயக்கம் ஜெனரேற்றர்கள் மூலமாகவும், நிலக்கரியில் இயங்கும் அனல் மின் நிலையங்களிலும் ஊழல்கள் இருப்பதாகவும் கூறியிருந்தார். ஆனால், 2012ஆம் ஆண்டுக்குப் பிறகு எந்தவித வருமானத்தையும் ஈட்டாத முதலீடுகளுக்காக கடன்களைப் பெற்று அதன் மூலமாக மில்லியன் கணக்கான டொலர்களை தரகுப் பணமாகப் பெற்றிருக்கின்றார்கள் என்பதனையும் அவர் மறைமுகமாகக் கூறியிருந்தார்.

80தின் காலகட்டத்தில் மகாவலி மூலமாக அரிசியில் தன்னிறைவு அமைந்திருந்தாலும், தற்போது என்னுடைய மாவட்ட நெல் உற்பத்தி, விவசாயம் சம்பந்தமாகப் பேசவேண்டியுள்ளது. இதற்கு முன்னரும் பாராளுமன்றத்தில் கூறியிருந்தேன். நெல் விலையைத் தீர்மானிப்பதும், பசளை இறக்குமதி செய்வதும் பொலநறுவை, அனுராதபுர விவசாயச் செய்கையைப் பொறுத்தே செய்யப்படுகின்றது. கடந்த இரண்டு போகங்களில் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் விவசாயிகள் பெரும் நஸ்டத்தை அடைந்திருக்கிறார்கள். ஒரு அந்தர் யூரியாவை 43ஆயிரம் ரூபா கொடுத்து வாங்கியிருக்கிறார்கள். களை நாசினிகளுக்கு 20ஆயிரத்துக்கும் ரூபாவுக்கும் மேல் கொடுத்திருக்கிறார்கள். இருந்த போதிலும் நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக நெல் கொள்வனவு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சபைக்கு நெல்லைக் கொடுத்தவர்கள் தற்போது வரை பணத்தைப் பெற்றுக் கொள்ள முடியாமலிருக்கிறார்கள். ஒரு மாதத்திற்கு முன்னர் நெல் விலை 7000 ரூபாவாக இருந்தது. ஆனால் தற்போது 8000 ரூபாவாக மாறியிருக்கிறது. ஆனால். அந்த நெல்லை விவசாயிகள் வைத்திருந்திருந்திருந்தால் 8000 ரூபாவுக்கு விற்றிருப்பார்கள். ஒரு மாதத்திற்கு முன்பு கொடுத்த நெல்லுக்கு பணம் இன்னமும் கொடுக்கப்படவில்லை. கடந்த காலங்களில், டீசல், களை நாசினி யூரியா பற்றாக்குறைகளினால் மாவட்ட விவசாயிகள் வங்களில் கடன் பெற்றும், நகைகளை அடகு வைத்தும் வேளாண்மை செய்கை பண்ணியிருந்தார்கள். ஆனால் இந்த வரவு செலவுத்திட்டத்தில் விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடியைச் செய்திருந்தார். கடன் தள்ளுபடி செய்ததும் கூட ஏனைய மாவட்டங்களின் அடிப்படையில் அந்தத் தள்ளுபடியைச் செய்திருக்கிறார்கள்.

மட்டக்களப்பு, அம்பாறைப் பிரதேசத்தில் குறிப்பிட்ட காலத்துக்கு முன்னரே வேளாண்மை செய்தவர்கள் என்பதால் பெற்ற கடன்களை ஏற்கனவே அடைத்துவிட்டார்கள். ஆகையால் இவர்களுக்கு இந்தக் கடன் தள்ளுபடியில்லை. ஏனெனில், அந்தப் போகத்துக்குரிய கடனைச் செலுத்திவிட்டால்தான் அடுத்த போகத்துக்கு கடன் பெறமுடியும். எனவே, விவசாய அமைச்சரின் கவனத்திற்கு இந்தத் தடவை பெரும்போகச் செய்கைக்கு முன்னர் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட விவசாயிகளுக்கான யூரியா பசளைகளை ஏற்கனவே கொடுக்க வேண்டும். யாழ்ப்பாணத்துக்குரியவை ஏற்கனவே அனுப்பப்பட்டு விட்டதாக அறிகின்றோம். எங்களுடைய மாவட்டத்திற்கும் நேர காலத்திற்கு முன்னர் யூரியா பசளையை அனுப்பிவைக்க வேண்டும். இல்லாவிட்டால் 2 இலட்சம் ஏக்கர் பெரும் போகம் செய்யும் மக்கள் இம்முறை செய்கை பண்ணமாட்டார்கள் என்ற ஒரு முடிவை மாவட்ட செயலக மட்டத்தில் எடுத்திருக்கிறார்கள் என்பதனை மிக வேதனையுடன் கூறிக் கொள்ள விரும்புகிறேன்.

கடந்த காலங்களில் பெற்ற கடன்களினால் அம்பாந்தோட்டடைத் துறைமுகமாக இருந்தாலும் சரி, மத்தள விமான நிலையமாக இருந்தாலும் சரி, ராஜபக்ச விளையாட்டரங்காக இருந்தாலும் சரி, தாமரைக் கோபுரமாக இருந்தாலும் சரி இந்த நாட்டுக்கு எந்த விதமான வருமானத்தையும் ஈட்டிக் கொடுப்பதாக இல்லை. எங்களை விடச் சிறிய நாடான மாலை தீவிலிருந்து நாங்கள் கருவாடை இறக்குகின்றோம். மாசியை இறக்குகின்றோம். மீன்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குகின்றோம். இப்படியான வருமானத்தைத் தராத முதலீடுகளைச் செய்ததற்குப் பதிலாக, இந் நாட்டின் இளைஞர், யுவதிகளுக்கு கடற்தொழில் செய்வதற்கான பயிற்சிகளையும், அதற்கான படகுகளையும் வாங்கிக் கொடுத்திருந்தால் மீன்கள், கருவாடுகள் இறக்குமதிகளைத் தவிர்த்து அவற்றின் மட்டில் தன்னிறைவடைந்திருக்குமல்லவா?

ஆனால், இன்று அதளபாதாளத்துக்குள் இந்தப் பொருளாதாரம் சிக்கிக் கிடக்கின்றது.

இந்த நெருக்கடிக்குள் எமது நாட்டுக்கு உதவிய நாடு நமது அயல்நாடு இந்தியா மத்திரமே. இந்தியா கடந்த பொருளாதார நெருக்கடியில் 4 பில்லியன் கடன்களை வழங்கியிருக்கின்றது. குறைந்த வட்டியில் 800 மில்லியனை உணவு மற்றும் மருந்துப் பொருட்களுக்காக வழங்கியிருக்கிறது. கடன் அடிப்படையில் 700 மில்லியன் மட்டும் எரிபொருளுக்காக வழங்கியிருக்கிறது. விவசாய உரத்துக்காக 55 மில்லியன் டொலர் உதவியிருக்கிறது. மீனவர்களுக்கு மண்ணெண்ணை. அதற்கு மேலாக தமிழ் நாட்டிலிருந்து அன்பளிப்பாக உணவு, பால்மா, மருந்துப் பொருட்கள் அனுப்பப்பட்டன. இந்தக் காலகட்டத்தில் இந்தியா உணவுக் கப்பலை அனுப்புகிறது. உதவிக்கப்பலை அனுப்புகிறது. ஆனால், தங்களால் வழங்கப்பட்ட கடனைக் கூட மறுசீரமைப்புச் செய்யமுடியாது என்று சொல்கின்ற சீனா இங்கு உளவுக் கப்பலை அனுப்புகின்றது.

ஒரு விடயத்தை மிகவும் வேதனையுடன் கூறிக் கொள்ள விரும்புகின்றேன். இந்தப் பாராளுமன்றத்தில் செங்கோல் வரும் போதோ, நமது நாட்டின் ஜனாதிபதிக்கோ அல்லது வேறு எந்த நாட்டுத் தலைவர்களுக்கோ எழுந்து நிற்க முடியாத தேரர், சீனக்கப்பல் வரும் போது மட்டும் எழுந்து நின்று அதற்கு மரியாதை கொடுக்கிறதென்பதுதான் இந்த நாட்டின் ஜனநாயகமா என்று கேட்கின்றேன் என்று தெரிவித்தார்.

இலங்கை நாட்டின்  ஜனநாயகம் பாராளுமன்ற செங்கோலுக்கின்றி  சீனாவின் உளவுக் கப்பலுக்கோ

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Read More
Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More