
posted 12th February 2023
அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய முஸ்லிம் பிரதேசமான நிந்தவூரில் போதைப் பொருள் வியாபாரிகள் மற்றும் போதைபாவனையாளர்கள் இறந்த பின் அத்தகையோரது ஜனாஸாக்களை (சடலங்களை) தனியான மையவாடியில் அடக்கம் செய்து இனம் காட்டப்பட எடுக்கப்பட்ட நடவடிக்கைக்குத் தடை ஏற்பட்டுள்ளது.
நிந்தவூரில் முன்னெடுக்கப்படும் போதை ஒழிப்பு நடவடிக்கையின் பிரதான அம்சமாக இத்தகைய நடவடிக்கையை முன்னெடுக்கத்திட்டமிடப்பட்டது.
இதன்படி இந்த நடவடிக்கையில் களமிறங்கிய நிந்தவூர் அனர்த்த முகாமைத்துவ அணியினர் நிந்தவூர் பிரதேச சபையின் அனுமதியுடன் குறித்த ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கான
தனியான மையவாடியை பிரகடனப்படுத்தும் நிகழ்வு ஒன்றை கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் நடத்துவதற்கு ஏற்பாடுகளைச் செய்து பொது மக்களுக்கும் அழைப்புக்களை விடுத்திருந்தது.
ஆனால் நிந்தவூர் 9 ஆம் பிரிவிலுள்ள பிர்தௌஸ் மையவாடியில் புறம்பாக ஒதுக்கப்பட்ட இடத்தை பிரகடனம் செய்யும் நிகழ்வு இறுதி நேரத்தில் இரத்துச் செய்யப்பட்டது.
இந்த நிகழ்வு நிந்தவூர் அனர்த்த முகாமைத்துவ அணியின் தலைவரும், ஜும்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவருமான எஸ்.எம்.பி. பாறூக் தலைமையிலும், நிந்தவூர் பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர் மற்றும் பல அதிதிகளின் பங்கு பற்றுதலுடனும் நடைபெறவிருந்தது.
எனினும் பிரதேச மக்கள் சிலரது ஆட்சேபனை முறைப்பாட்டையடுத்து குறித்த நிகழ்வுக்கு பொலிஸார் நீதி மன்றதடை உத்தரவைப் பெற்றதாலும், உள்ளுராட்சி மன்றத் தேர்தல் காலத்தில் இத்தகைய நிகழ்வை நடத்த வேண்டாமென அம்பாறை மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளதாலும் நிகழ்வு இறுதி நேரத்தில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
இதற்குரிய முன்னைய செய்தியை கிளிக் செய்து வாசிக்கவும் - போதைப்பொருள் சம்பந்தமானோருக்கென தனியான மையவாடி

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)