
posted 15th January 2023
இந்திய மீனவர்களை பிடிப்பதற்கும், இடிப்பதற்கும் பாரிய இரும்புப் படகுகள் இரண்டை மீனவர்களுக்கு தருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். அடுத்த வாரம் இந்த படகுகள் வழங்கப்படும் என அமைச்சர் கூறினார்.
இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல்களுக்கு எதிராக குருநகர் கடற்றொழிலாளர் அபிவிருத்தி சங்கத்தினர் 13.01.2023 போராட்டத்தை முன்னெடுத்து, அமைச்சரின் அலுவலகத்தில் மகஜரைக் கையளித்தபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
எமது மீனவர்களின் பிரச்சனைகள் நான் நன்கு அறிவேன். இந்த பிரச்சனை நீண்ட காலமாக நடைபெறுகிறது. கடற்படையினர் இடையிடையே இந்திய மீனவர்களைக் கைது செய்கிறார்கள். ஆனால், அது போதாது. ஆகையால் இதில் நீங்கள் கடற்படையை மட்டும் நம்பாது நீங்களும் எதிர்க்க வேண்டும்.
இந்திய மீனவர்கள் பெரிய இரும்புப் படகுகளில் வருகிறார்கள். எமது மீனவர்களின் படகுகள் சிறியவை. அதனால் கைப்பற்றிய இந்திய மீனவர்களின் படகுகள் உள்ளன. அவற்றை உங்களிடம் தர தயாராக உள்ளேன். இந்திய மீனவர்களை பிடிப்பதற்கும் இடிப்பதற்கும் இரண்டு பாரிய படகுகளை நான் தருகிறேன் என்றார்.
இதன்போது மீனவர்கள் “படகு வெள்ளோட்டத்திற்கு நீங்கள் வரவேண்டும்” என்றனர். அதற்கு அவர் “நான் ஒன்றைக் கூறிவிட்டு பங்கருங்குள் ஒழிந்திருக்க மாட்டேன். நானும் வருவேன்” என்றார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)