
posted 18th April 2022
மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கு ஆளுந்தரப்பு மக்கள் பிரதிநிதிகள் முன்வைக்கும் தீர்வு என்ன? இவ்வாறு முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர், பத்மநாபா மன்றம்- ஈ.பி.ஆர்.எல்.எப். இரா. துரைரெத்தினம் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது;
இம் மாவட்டத்தில் எமது மக்கள் ஆரம்பத்தில் கொரோனா காரணமாக பல வகையிலும் பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ள வேளையில் இதைத் தொடர்ந்து கடன் சுமையினால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு விவசாயச் செய்கைக்கான உரம், கிருமிநாசினி இல்லாமல் செய்ததன் காரணமாக மேட்டு நிலப்பயிர் வேளாண்மைச் செய்கைகள் பாதிக்கப்பட்டு, எரிபொருள் (பெற்றோல், டீசல், மண்ணெண்ணை), எரிவாயு இல்லாமலாக்கப்பட்டும், அரிசி, மா, சீனி, பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு விலை உயர்வு, ஆளுந்தரப்பு மக்கள் பிரதிநிதிகள் வருடந்தோறும் குறிப்பிட்ட தொழில் வருமானம் உள்ளவர்களிடமிருந்து பெறப்படவேண்டிய கோடிக் கணக்கான வரி அறவிடுவதற்கு தடையாக இருந்தமை உட்பட இம் மாவட்டத்தில் அப்பாவி மக்கள் வறுமையில் வாடுவதற்கு காரணமாக இருந்த ஆளுந்தரப்பு அரசியல் மக்கள் பிரதிநிதிகள் இம் மக்களின் துயர்களை, எதிர் நோக்கும் பிரச்சினைகளை நீக்குவதற்கு எடுத்த நடவடிக்கை என்ன?
மக்கள் எதிர்நோக்கும் அடிப்படை அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல், ஆளுந்தரப்பினருக்கு முட்டுக் கொடுக்கும் அரசியல் வாதிகளின் செயற்பாடுகள் தேவையா? என மக்கள் கேள்வி கணைகளைத் தொடுத்து, இப்படிப்பட்டவர்கள் இராஜினாமா செய்ய வேண்டும், அல்லது வீடு செல்ல வேண்டும்மெனவும், ஆளுந்தரப்பினரால் மேற்கொள்ளப்படும் ஊழலைத் தடுத்து நிறுத்த சமூகம் முன்வர வேண்டுமென வெகுஜன போராட்டங்களை சுயாதினமாக நடாத்தி வருகின்ற நிலையில், சர்வதேசத்திடம் பெற்ற கடன்களை மோசடி செய்து மக்களின் தலையில் சுமத்தி ஒவ்வொரு மனிதர்களையும் ஆயிரக் கணக்கான வரிகளை கட்டுவதற்கும் நாசவேலைகளைச் செய்து, இன்று, இந்த அரசை வழி நடத்த முடியாமல் ஓடி ஓளிக்கின்ற நிலையில் இம் மாவட்ட ஆளுந்தரப்பினர் பொறுப்பற்ற விதத்தில் கதைகள் கூறுவதை நிறுத்தி, வறுமையினால் பாதிக்கப்படும் மக்களுக்கு உடனடியாக மானியத் திட்டத்தை அறிவிக்குமாறு கோறுகின்றேன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)