
posted 26th May 2022

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
டீசல் பெற்றோல் இறக்குமதிக்கு அக்கறை காட்டுவதுபோல் மீனவர்கள் நலன்கருதி மண்ணெணெய் எரிபொருளுக்கும் அக்கறை காட்டப்பட வேண்டும்.
மன்னாருக்கு நீண்ட நாட்களாக மண்ணெணெய் வராமையால் மீனவ சமூகம் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளதாக மன்னார் பிரதேச சபை உறுப்பினர் எஸ்.ஏ.எம். நயீம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார்.
இலங்கையில் தற்பொழுது நிலவி வருகின்ற பொருளாதார வீழ்ச்சியால் இலங்கையிலுள்ள சகலரும் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர் என்பது அறிந்த விடயமாகும்.
முன்னைய காலங்களைப் போன்று, தற்பொழுது நிவாரணப் பணிகள் இடம்பெறாத போதும், தமிழ்நாடு இலங்கை மக்களுக்கு நிவாரண உலர் உணவுப் பொருட்களை அனுப்பி வைத்துள்ளது என்பது மகிழச்சிக்குரியதாகும்
இவைகளை பெற்றுக்கொள்ளும் மக்கள் இப் பொருட்களைக் கொண்டு ஓரிரு தினங்களுக்கு தங்கள் வயிற்றுப் பசியைப் போக்கிக் கொள்வார்கள்.
மன்னார் மாவட்டத்தில் 90 வீதமான மக்கள் மீனவர்களாகவே காணப்படுகின்றனர். தற்பொழுது நீண்ட நாட்களாக மீன்பிடிக்கான மண்ணெணெய் இல்லாமையால் மீனவர்கள் தங்கள் மீன்பிடி தொழிலை முன்னெடுக்க முடியாத நிலையில் முடங்கி இருக்கும் நிலையில் இருந்து வருகின்றனர்.
ஆகவே டீசல், பெற்றோல் இறக்குமதிக்கு அக்கறை காட்டுவதுபோல், மீனவர்கள் நலன்கருதி மண்ணெணெய் எரிபொருளும் கிடைப்பதற்கான வழி சமைக்கப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டிலிருந்து கிடைக்கப்பெற்ற நிவாரணப் பொதிகள் நாட்டில் பரந்தளவில் பகிரப்பட வேண்டும்
மஸ்கெலியா பிரதேச சபை உறுப்பினர் எம்.பி.ஆணந்தன்
இலங்கையின் அயல் நாடான இந்தியா தமிழ்நாட;டிலிருந்து வறுமைக்கு உட்பட்டுள்ள இலங்கை வாழ் மக்களுக்கு வழங்கப்பட்ட நிவாரண பொருட்கள் இலங்கையில் வாழும் சகல மக்களுக்கும் பகிர்ந்து அளிக்க வேண்டும் என மஸ்கெலியா பிரதேச சபையின் லக்கம் பிரதேச உறுப்பினர் எம்.பி.ஆணந்தன் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக எம்.பி.ஆணந்தன் மேலும் கருத்து தெரிவிக்கையில் தற்போது நாட்டில் நிலவும் பாரிய பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய பொருட்கள் விலை வான் அளவில் உயர்ந்து உள்ளது. இதனையிட்டு இந்திய தமிழ்நாடு அரசானது இலங்கை மக்களுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்துள்ளது.
பெருந்தோட்ட மக்களும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் இவ் வேளையில் தமிழ் நாடு அரசு வழங்கிய நிவாரணம் கிடைக்கும் என நம்பியpருக்கின்றனர்.
ஆகையால் இயன்றளவு இப் பொருட்கள் நாட்டிலுள்ள வறுமை கோட்டுக்குள் வாழும் யாவருக்கும் கிடைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளும்படி வேண்டியுள்ளார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இணைந்த சுகாதார விஞ்ஞானங்கள் பீடத்தில் இருந்து பட்டம் பெற்று வெளியேறிய தாதியர்களுக்கான சின்னம் சூட்டும் வைபவமும், சத்தியப் பிரமாணம் ஏற்கும் நிகழ்வும் அண்மையில் இடம்பெற்றது.
இணைந்த சுகாதார விஞ்ஞானங்கள் பீடாதிபதி திருமதி தெய்வி தபோதரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா, பதிவாளர் வி. காண்டீபன், யாழ்ப்பாண தாதிய பயிற்சிக்கல்லூரி அதிபர் மற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் விருந்தினர்களாகக் கலந்து கொண்டு தாதியருக்குச் சின்னங்களை அணிவித்தனர்.
டக்ளஸ் தேவானந்தாவின் உறுதிமொழி
இந்தியாவிலிருந்து வரும் பொருட்களை காங்கேசன்துறை துறைமுகத்தில் இறக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று புதன்கிழமை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும், இந்தியாவிலிருந்து வரும் பொருட்கள் அருகில் உள்ள காங்கேசன்துறை துறைமுகத்தைத் தாண்டி பல தூரம் கொழும்பு செல்கிறது. காங்கேசன்துறை துறைமுகத்தில் இறக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
வடக்கு மாகாணத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு இந்திய அரசாங்கத்தால் உரம் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

யாழ்ப்பாணத்தில் இசை நிகழ்ச்சிகள் மற்றும் திருவிழாக்களில் ஒலிபெருக்கி சாதனங்களை பயன்படுத்துவதற்கு தடை விதித்துள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உயித் என் பி லியனகே தெரிவித்தார்.
க.பொ.தர சாதாரண தர பரீட்சை ஆரம்பமாகியுள்ளதன் காரணமாக, மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்கு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நேற்று யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் பொறுப்பதிகாரி அலுவலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்;
க.பொ.த. சாதாரண பரீட்சை ஆரம்பித்தள்ளது. யாழ் மாவட்டத்தில் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு நாம் பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும். பரீட்சைக்கு செல்லும் மாணவர்களுக்கு ஏற்படும் இடையூறுகளை தடுப்பதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படாமையால் யாழ்ப்பாணம் நகரம், திருநெல்வேலி சந்தி, பரமேஸ்வரா சந்தி பகுதிகளில் இன்று மக்கள் போராட்டம் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
பலநோக்கு கூட்டுறவு சங்கங்கள் ஊடாக எரிவாயு வழங்கப்படும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், லிட்ரோ நிறுவனம் எரிவாயு விநியோகத்தை நிறுத்துமாறு நேற்று முன்தினம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், முன்னைய அறிவிப்பை நம்பி யாழ்ப்பாண நகர பலநோக்கு கூட்டுறவு சங்கத்தில் பொதுமக்கள் கூடினர். நீண்டநேரமாகியும் எரிவாயு விநியோகிக்கப்படவில்லை. இதனால், விரக்தியடைந்த மக்கள் காங்கேசன்துறை வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், சிறிதுநேரம் காங்கேசன்துறை வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டதுடன், குழப்பநிலையும் உருவானது. இதையடுத்து அந்தப் பகுதிக்கு வந்த விசேட அதிரடிப் படையினரும், பொலிஸாரும் மக்களை சமரசப்படுத்தி அங்கிருந்து கலையச் செய்தனர்.
எனினும், கொட்டடியில் அமைந்துள்ள எரிவாயு களஞ்சியசாலையில் கூடிய மக்கள் அங்கிருக்கும் எரிவாயுவை விநியோகிக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதைத் தொடர்ந்து மேலதிகமாக மக்களை கூடவிடாது தடுத்த பொலிஸார் இருந்த எரிவாயு சிலிண்டர்களை விநியோகித்தனர்.
இதேவேளை, திருநெல்வேலியில் அமைந்துள்ள நல்லூர் பல நோக்கு கூட்டுறவு சங்கத்தில் எரிவாயு வழங்கப்படவிருந்த நிலையில் பிரதேச செயலரின் தலையீட்டால் விநியோகம் நிறுத்தப்பட்டது. இதையடுத்து அந்தப் பகுதியில் குழப்பமும் பதற்றமும் ஏற்பட்டது. கோப்பாய் பொலிஸாரின் தலையீட்டால் மக்கள் சமரசமாகி அங்கிருந்து சென்றனர்.
இதேபோன்று, பரமேஸ்வரா சந்தியிலும் எரிவாயுவை விநியோகிக்கக் கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY