
posted 5th May 2022
ஜனாதிபதி, பாராளுமன்றம் இல்லாமல் இன்றைய சூழ்நிலையில் நாட்டை நிருவகிக்க முடியுமா? என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர், ஈ.பி.ஆர்.எல்.எப்(ப.ம) இரா. துரைரெத்தினம், கேள்வியெழுப்பியுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசு, அரசாங்கத்தின் செயற்பாடுகளைப் பொறுத்தவரையில் மாண்புமிகு ஜனாதிபதியின் வருகைக்குப் பின்னும், பாராளுமன்ற புதிய மக்கள் பிரதிநிதிகள் உருவாக்கத்தின் பின் கொரோனா காரணமாகவும், இங்கு நடைபெற்றுள்ள குண்டு வெடிப்பு, சர்வதேசத்தின் இலங்கை தொடர்பான நம்பிக்கையீனம், நாட்டை ஆளுவதற்கு நிதி பற்றாக்குறை, வெளிநாடுகளுக்கு கொடுக்க வேண்டிய கடன்சுமை, நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, எரிபொருள் உட்பட அத்தியாவசியப் பொருட்களுக்கான விலையேற்றம், விவசாயத்திற்கான யூரியா, கிருமிநாசினியை இல்லாமலாக்கியமை போன்ற சூழ்நிலையில் மக்கள் பட்டினிச் சாவை எதிர்நோக்குகின்ற நிலையில் இலங்கை அரசு செய்வதறியாது திகைப்படைந்து நிற்கின்றது.
இந்த நிலையில் கொரோனா காரணமாக டொலர் தட்டுப் பாட்டினாலும், நிதி பற்றாக்குறை, அரசாங்கத்தின் மோசடி ஆட்சிமுறை, வெளிநாடுகளின் அழுத்தங்கள் அரசாங்கத்தின் தவறான செயற்பாடுகள் போன்றவற்றினால் நாட்டை புதிய அரசு ஆட்சி செய்ய முடியாமல் மக்கள் நேரடியாக பாதிக்கப்பட்ட சூழ்நிலையில் இந்த அரசுக்கு எதிராகவும், ஆட்சியாளர்களுக்கு எதிராகவும் மூவின மக்களும் கட்சிபேதமின்றி, இனமத பேதமின்றி வரலாற்றில் இல்லாதவாறு அரசுக்கு எதிராக வெகுஜன ரீதியான போராட்டங்களை முடக்கி விட்டுள்ளனர்.
இந்த நிலையில் பெரும்பான்மை பலத்தை இழந்த அரசு எதிர் கட்சிகளின் பலவீனங்களும், வெளிநாடுகளின் தலையீடுகளினாலும் முழுமையாக இந்த ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் ஸ்தம்பித்துள்ளனர்.
ஒவ்வொரு கட்சிகளும். மக்கள் பிரதிநிதிகளும், வெளிநாட்டு நிறுவனங்களும் மக்களின் நலன்களுக்காக பேசி தங்களின் நலன்களை தக்கவைத்துக் கொள்வதற்காக முயற்சி எடுத்து வருகின்றது.
இலங்கையின் நிலைமைகளை பரிசீலனை செய்து, பொருளாதார ஓப்பந்தங்கள், ஏனைய இலங்கை மக்கள் நலன்கள் தொடர்பான திட்டங்களை அமுல்படுத்துவதற்கு ஓழுங்கான நல்லாட்சிக்கான, திறமையான ஒரு கட்டமைப்பு அரசியல் ரீதியாகவும், நிருவாக ரீதியாகவும் இருப்பது அவசியமாகும். அப்படி ஒரு பலமான கட்டமைப்பு இருந்தால் மட்டுமே உதவி செய்து வருகின்ற, உதவி செய்யப் போகின்ற நாடுகள், நிதி நிறுவனங்கள், அமைப்புக்கள் நம்பிக்கையோடு இருந்தால் மட்டுமே இலங்கைக்கு உதவிகளைச் செய்யும்.
எது நடக்கின்றதோ இல்லையோ மக்கள் பிரதிநிதிகளாக இருந்தாலும் சரி, நிருவாகமாக இருந்தாலும் சரி உதவி புரிகின்றவர்களில் உதவிகளை பெறுவதற்கான ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டும். கட்டமைப்பு உருவாக்கப்படாத பட்சத்தில் பலவீனமான திட்டங்களும், நிருவாகங்களும் தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்தால் எந்த நாடும் உதவி புரிவதற்கு முன்வராது.
மக்கள் பட்டினிச்சாவை எதிர் கொண்டு ஆட்சியாளர்களுக் கெதிராக போராட்டம் நடாத்தி அது வன்முறையாக மாறி வன்முறையை வளர்த்து இறுதியில் கலவரம், இனக்கலவரம், இராணுவ ஆட்சி, சதிப்புரட்சி வரையும் கொண்டு செல்லும் என தெரிவித்துள்ளார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)