
posted 3rd April 2022

மட்டக்களப்பு மாவட்டத்தின் பின்தங்கிய பிரதேசமான சுரவணையடியூற்றுக் கிராமத்தில் மாணவர்களின் நலன்கருதி ஆரம்பப் பாடசாலையொன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதாரப் பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கமைய கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா ஜகம்பத்தின் அங்கீகாரத்துடன் மட்டக்களப்பு சுரவணையடியூற்றில் விபுலானந்த வித்தியாலயம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
பாடசாலை அதிபர் எஸ். திவாகரன் தலைமையில் நடைபெற்ற அங்குரார்ப்பண நிகழ்வுக்கு இராஜாங்கமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். அத்தோடு கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம், பட்டிருப்பு வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம். மகேந்திரகுமார், மண்முனை தென்மேற்குப் பிரதேச சபை உறுப்பினரும், முற்போக்கு தமிழர் அமைப்பின் பிரதான இணைப்பாளருமான வை. மோகன் மற்றும் போரதீவுப்பற்றுப் பிரதேசசபை உதவித் தவிசாளர் என். தர்மலிங்கம் மற்றும் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் ஆர். இராகுலநாயகி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
“கல்வி என்பது நிலையான சொத்தாகும். எனவே எமது சமுதாயம் கல்வித்துறை முன்னேற்றத்தில் அதிக அக்கறை காட்ட முன்வர வேண்டும். எனவே வறுமை கல்விக்கு ஓரு தடையாக இருக்கக் கூடாது. நாம் எதிர்கால சந்ததியினரின் கல்வி முன்னேற்த்தில் முழு அக்கறையுடன் செயற்பட வேண்டும்” என நிகழ்வில் உரையாற்றிய பிரதம அதிதி இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் கூறினார்.

ஏ.எல்.எம்.சலீம்
*உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு கீழேயுள்ள இணைப்பைக் கிளிக் செய்யுங்கள்>>>*
https://www.booking.com/index.html?aid=7909977