
posted 24th June 2023
உறவுகளின் துயர் பகிர
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
ஆதம்லெப்பை ஹஸ்ரதின் மறைவு பேரிழப்பாகும்
சன்மார்க்க வளர்ச்சிக்காகவும், சமூக சீர்திருத்தத்திற்காகவும் தியாக மனப்பாங்குடன் பெரும்பங்காற்றிய காத்தான்குடி ஜம்இயத்துல் உலமாவின் தலைவரும், மத்ரஸத்து ஷபிலுர் றஷாத் அரபுக் கல்லூரியின் அதிபருமான மெளலவி பி.எம். ஹனிபா (ஆதம்லெப்பை) ஹஸ்ரதின் மறைவு, சமூகத்திற்கு பேரிழப்பாகும் என்று அம்பாறை மாவட்ட ஜம்இயத்துல் உலமா தெரிவித்துள்ளது.
மாவட்ட ஜம்இயத்துல் உலமாவின் சார்பில் அதன் தலைவர் யூ.எல்.எம். ஹாஷிம் மெளலவி, செயலாளர் ஏ.எல். நாசிர்கனி மெளலவி ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது;
கிழக்கு மாகாணத்தின் மூத்த ஆலிம்களில் ஒருவரான ஆதம்லெப்பை ஹஸ்ரத் எப்போதும் தஃவாப் பணிக்கே முன்னுரிமை கொடுத்து வந்துள்ளார். அன்னாருடைய மார்க்க சொற்பொழிவுகள், மக்களின் உள்ளங்களை ஆழ ஊடுருவும் வகையில் உயிரோட்டமிக்கவையாக அமையப் பெற்றிருந்தன.
காத்தான்குடியிலுள்ள பலாஹ் அறபுக் கல்லூரி மற்றும் மர்கஸ் ஸபீலுர்ரஷாத் அறபுக் கல்லூரி என்பவற்றின் வளர்ச்சியிலும் அங்கிருந்து நூற்றுக்கணக்கான உலமாக்களை பிரசவிப்பதிலும் அன்னார் முன்னின்று உழைத்துள்ளார்.
மார்க்கக் கல்விக்காகவும் தஃவா எனும் இஸ்லாமிய பிரசாரப் பணிக்காகவும் தன்னை முழுமையாக அர்ப்பணித்த ஒரு தலைசிறந்த சன்மார்க்க அறிஞராகத் திகழ்ந்த அன்னார் சமூக ஒற்றுமை, இன ஐக்கியம் மற்றும் சகவாழ்வைப் பலப்படுத்துகின்ற விடயங்களிலும் கரிசனையுடன் பங்காற்றி வந்திருக்கிறார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)