அரசாங்கமே பதவி விலகிடு - நாடு பூராவும்  இன்று ஹர்த்தால்
அரசாங்கமே பதவி விலகிடு - நாடு பூராவும்  இன்று ஹர்த்தால்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி இன்று வெள்ளிக்கிழமை நாடளாவிய ரீதியில் ஹர்த்தால், பணிப் பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.

பல்வேறு தொழிற்சங்கங்கள் ஒன்றினைந்து இந்த ஹர்த்தாலையும் வேலை நிறுத்தப் போராட்டத்தையும் நடாத்தவுள்ளன.

இன்றைய இந்த போராட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு அனைவரிடமும் ஒன்றினைந்த தொழிற்சங்க சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.

இன்றைய ஹர்த்தால், வேலை நிறுத்தத்தின் பின்னர் அரசாங்கத்திற்கு பதவி விலகுவதற்காக நான்கு நாட்கள் கால அவகாசம் வழங்குவதாகவும் அதன் பின்னரும் ஜனாதிபதியும் அரசும் பதவி விலகில்லையெனில் எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் தொடர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாகவும் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

அதேவேளை இன்று வீடுகள் வியாபார நிலையங்கள், தொழிற்சாலைகளில் கறுப்புக் கொடிகளை ஏற்றுமாறும், கறுப்பு நிற ஆடையணிந்து அருகிலுள்ள நகர்ப்பகுதிகளில் முன்னெடுக்கப்படும் இதுதொடர்பான ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ளுமாறும் பெருந்தோட்டத் தொழிலாளர்களை தொழிலுக்குச் செல்லாது எதிர்ப்பினை வெளியிடுமாறும் தொழிற்சங்க ஒருங்கினைப்பு ஒன்றியம் கேட்டுள்ளது.

மேலும் இதன்போது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வன்முறைக்கு இடமளிக்காது, போராட்டத்தை பாதுகாத்து அரசாங்கத்தை விரட்டியடிக்கும் நோக்கை வெற்றியடையச் செய்வோம் என்றும் தொழிற்சங்க ஒருங்கினைப்பு ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.

இதேவேளை இன்றைய ஹர்த்தால் வேலை நிறுத்தப் போராட்டங்களிலும், ஆர்ப்பாட்டங்களிலும் கிழக்கு மாகாண மக்களும் பங்குபற்றவுள்ளனர்.

அத்துடன் பல பிரதேசங்களிலும் வர்த்தக நிலையங்களை மூடவும், முக்கிய நகர்ப்பகுதிகளில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை நடாத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இதற்கமைய அக்கறைப்பற்று நகரில் இன்று பிற்பகல் 5.30 மணிக்கு பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், வர்த்தக நிலையங்களை மூடி ஹர்த்தால் அனுஷ்டிப்பதற்கு அக்கறைப்பற்று வர்த்தக சங்கம் சம்மதமும் தெரிவித்துள்ளதாக அறிய வருகின்றது.

அக்கறைப்பற்று பஸ் நிலையத்திற்கு அருகில் அரசுக்கு எதிரான பாரிய ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

அரசாங்கமே பதவி விலகிடு - நாடு பூராவும்  இன்று ஹர்த்தால்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)