
posted 2nd March 2023
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
சம்மாந்துறை ஜமாலியா வித்தியாலயத்தின் அதிபர் எம்.எம். மஹிஷா பானு இடமாற்றம் செய்யப்பட்டதாக பரவிய செய்தியை அடுத்து, பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களின் பெற்றோர்கள் பாடசாலை முன்றலில் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
பல்வேறு அநாகரிக விடயங்கள் இடம்பெற்று வந்த இப்பாடசாலையை பொறுப்பேற்று, திறன்பட நிர்வாகித்து வந்த அதிபரை கடமை செய்யவிடாமல் ஒரு கும்பல் தடுத்து வருவதாகவும், தொடர்ந்தும் இடையூறுகளை செய்து வருவதாகவும் தெரிவித்த பெற்றோர்கள், கொட்டும் மழையில் நனைந்தபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலக நிர்வாக பிரதிக்கல்விப் பணிப்பாளர் மற்றும் வலயக்கல்வி அலுவலக அதிகாரிகள் மற்றும் சம்மாந்துறை பொலிஸார், அங்கு கூடியிருந்த பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களாக கடந்த காலங்களில் இருந்த சிலர் தொடர்ந்தும் பாடசாலையை கொண்டு செல்ல முடியாத வகையில் இடைஞ்சல் செய்வதாகவும் அவர்களின் 09 பிள்ளைகளுக்காக எங்களின் 165க்கு மேற்பட்ட மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்த பெற்றோர்கள், எவ்வித விட்டுக் கொடுப்புக்களுமின்றி போராட்டம் நடத்தினர்.
பாடசாலை அதிபர் இடமாற்றம் செய்யப்பட்டால், நாங்கள் எங்களின் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பமாட்டோம் என்று அவர்கள் வாதிட்டனர்.
தொடர்ச்சியாக கல்வி அதிகாரிகள் மற்றும் பொலிஸார், பெற்றோருக்கிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு பெற்றோர்கள் கலைந்து சென்றனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)