
posted 13th March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
கல்முனையில் ஆர்ப்பாட்டம்
தேசிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டம் ஒன்று கல்முனை மாநகரில் இன்று திங்கள் (13) பிற்பகல் இடம் பெற்றது.
தேசிய மக்கள் சக்தியின் கல்முனைத்தொகுதி கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம், தேசிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட செயற்குழு உறுப்பினரும், கல்முனைத் தொகுதி அமைப்பாளருமான ஏ.ஆதம் பாவா தலைமையில் நடைபெற்றது.
கல்முனை மாநகர சபையில் இடம்பெற்றுள்ள ஊழல், நிதி மோசடி உட்பட நாட்டில் மின்கட்டண உயர்வு, வரிச்சுமை உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்தவிடாது ஏற்படுத்தப்பட்டு வரும் உயர்மட்டத் தடைகள், விலைவாசி உயர்வு என்பவற்றைக் கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
கல்முனை பஸ் நிலையத்திற்கு அருகிலும், மாநகர மேயர் அலுவலகம் மற்றும் பொது நூலக வளாக முன்றலிலும் சுமார் ஒரு மணி நேரம் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
- “திருடர்கள், திருடர்கள் - 23 வருட திருடர்கள்”
- “முதல்வர், முதல்வர் பதவி விலக வேண்டும்”
- “கணக்காளர், கணக்காளர் பதவி விலக வேண்டும்”
- “கொள்ளையடித்தபணத்தை திருப்பிக்கொடு”
- ” மக்களே திருடர்களை விரட்டுங்கள்”
- “வாழ்க்கைச் செலவு வான் அளவு”
- ”ரணிலின் வாழ்க்கை உச்ச அளவு”
- “வரிச்சுமையும் எல்லையில்லை, வாழ்க்கைச் செலவும் உச்சநிலை”
- “தேர்தலை நடத்து, ஜனநாயகத்திற்கு வேட்டுவைக்காதே”
என்பன போன்ற கோஷங்களை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் எழுப்பியதுடன், இந்த வாசகங்களைக் கொண்ட சுலோக அட்டைகளையும் ஏந்தியிருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் தேசிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட செயற்குழு உறுப்பினரும், கல்முனைத் தொகுதி அமைப்பாளருமான ஏ. ஆதம்பாவா கருத்து வெளியிடுகையில்,
“கல்முனை மாநகர சபையில் இடம் பெற்றுள்ள நிதி மோசடி, ஊழல் தொடர்பில் சம்பந்தப்பட்ட சகலரும் நீதியின் முன் நிறுத்தப்பட்டு மக்கள் பணம் மீளப்பெறப்படுவதுடன், உரிய தண்டனையும் வழங்கப்பட வேண்டும்.
மக்களின் பணம் மூன்று கோடிக்கு மேல் சூறையாடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 1994 ஆம் ஆண்டு முதல் மாநகர சபையின் ஆட்சி அதிகாரத்தை வைத்திருக்கும் முஸ்லிம் காங்கிரசும் இது விடயத்தில் மக்களுக்குப்பதில் சொல்ல வேண்டும்.
இந்த நிதிமோசடியின் பின்னணியில் செயற்பட்டவர்களையும் வெளிச்சத்திற்குக் கொண்டுவர வேண்டும்.
இதேவேளை மக்கள் தமது ஜனநாயக உரிமைகளைக் கோரி நிற்கும் நிலையிலும், ஐக்கிய மக்கள் சக்தியின் பக்கம் மக்கள் அலை அலையாகத் திரண்டு வருவதைக் கண்ட அச்சத்திலுமே ஜனாதிபதி உள்ளுராட்சி மன்றத் தேர்தலைப் பிற்போடுவதற்கு பகீரதப் பிரயத்தனங்களை முன்னெடுத்துள்ளார்” எனத்தெரிவித்தார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)