
posted 20th December 2022
இலங்கைக்கு வருகை தந்திருக்கும் தமிழக சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா, சிறீலங்கா முஸ்லிம் கவுன்ஸிலின் தலைவரும், முன்னாள் “நவமணி” பிரதம ஆசிரியருமான சிரேஷ்ட ஊடகவியலாளர் அல்-ஹாஜ் என்.எம். அமீனைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
கொழும்பு, தெஹிவளையிலுள்ள சிரேஷ்ட ஊடகவியலாளர் அமீனின் இல்லத்திற்கு நேரில் விஜயம் செய்ததுடன், நட்பு ரீதியான கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.
இதன்போது இலங்கை முஸ்லிம்கள் தொடர்பாகவும், முஸ்லிம்களின் தற்கால அரசியல் நிலமைகள் மற்றும் ஊடகத்துறை சார்ந்த விடயங்கள் தொடர்பாகவும் பேராசிரியர் ஜவாஹிருல்லா கேட்டறிந்து கொண்டார்.
சந்திப்பின் போது புலவர் மூதூர் அனஸ் எழுதிய “அமீன் காப்பியம்” எனும் நூலை, அடையாளம் வெளியீட்டக பிரதானி சாதிக், திருமதி நஸ்லிமா அமீன் ஆகியோர் சகிதம் சிரேஷ்ட ஊடகவியலாளர் அமீன் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லாவுக்கு ஞாபகர்த்தமாக வழங்கினார்.
பேராசிரியர் ஜவாஹிருல்லாவின் நபிகளாரின் சமூக உறவு எனும் நூல் வெளியீட்டு விழா கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொழும்பில் நடைபெற்றமையும் குறிப்பிட்டத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)