
posted 29th November 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
37 வருடங்கள் பூர்த்தி
இலங்கை முஸ்லிம்களின் தனித்துவ இயக்கமான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டு இன்றுடன் (29.11.2023) 37 வருடங்கள் பூர்த்தியடைகின்றன.
இதனையொட்டி கட்சியின் தவிசாளரும் முன்னாள் வட கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஏ.எல்.அப்துல் மஜீட் வரலாற்று அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.
அதில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது,
இலங்கை முஸ்லிம்களின் தனித்துவ அரசியல் இயக்கமாக இருந்து வருவது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாத்திரமே ஆகும்.
இடி, மின்னல், புயல், சுழல், சூராவளி அத்தனையும் தாங்கி நிற்கும் உறுதியான ஆல மரம் போல் ஒரு பாறையின் வலிமையுடன் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பயணித்துக்கொண்டு 37 வருடங்களை இன்றுடன் பூர்த்தி செய்து 38வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
1986ம் ஆண்டு நவம்பர் மாதம் 29ம் திகதி நிறுவனத் தலைவர் அஷ்-ஷஹீத் MHM. அஷ்ரஃப் அவர்களின் தலைமையில் அரசியல் கட்சியாக பிரகடனம் செய்து வைக்கப்பட்டது.
ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் இருந்து இலங்கையில் அரசியல் கட்சிகள் தோற்றம் பெறத்தொடங்கியுள்ளன. லங்கா சமசமா கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், இலங்கை - இந்திய காங்கிரஸ் என்பன.
சுதந்திரத்தின் பின் தமிழரசுக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி போன்ற கட்சிகள் ஆரம்பிக்கப்பட்டன.
இலங்கை முஸ்லிம்கள் 40 வருடகாலமாக அரசியலில் சிதருண்டு கிடந்தனர். அவர்களை ஒழுங்குபடுத்தி, ஒன்றுபடுத்தி, "அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு" என்பது போல் ஒரு அரசியல் கட்டுறுதியான சமூகமாக மாற்றிய பெருமை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசையே சாரும்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கடந்த கால வரலாற்றுப் பக்கத்தினை புரட்டிப் பார்க்கும் போது அது ஏற்படுத்திய அதிர்வுகள், சாதனைகள், சமுதாயத்தில் அது ஏற்படுத்திய தாக்கங்கள் கட்சி அரசியல் மாச்சாரியங்களுக்கு அப்பால் நோக்குதல் வேண்டும்.
நமது சமூகத்தில் உள்ள இன்றைய தலைமுறை நுணிப்புல் மேய்பவர்களாகவும், ஓயாத தர்க்கத்தில் ஈடுபடுபவர்களாகவும் இருந்து வருவது கவலைக்குரிய விடயமாகும். காழ்ப்புணர்ச்சி எனும் கருப்புக் கண்ணாடியை களற்றி வைத்துவிட்டு உண்மையை தேடிப்பிடிப்பதும் ஆய்வு செய்யும், கலந்துரையாடல் செய்யும் பக்குவத்தையும் அவர்கள் வளர்த்துக்கொள்ளும் போது பரந்த அறிவும் விரிந்த பார்வையும் கிடைக்கின்றது. அது நம்மை சமூகத்தில் நிலை நிறுத்திக் கொள்ள உதவும்.
உயர்ந்த கோட்பாடுகளும், உன்னதமான இலட்சியங்களும், வேட்கையும், விடா முயற்சியும், அர்ப்பணிப்பும், தியாகமும் இருந்தால் சாதிக்க முடியும் என்பதற்கு தலைவர் அஷ் - ஷஹீத் அஸ்ரஃப் அவர்கள் ஒரு சரித்திரம்.
32 வயதில் ஒரு அரசியல் கட்சியை அமைத்து கடின உழைப்பும், விடா முயற்சியும் முஸ்லிம் மக்களுக்கு அரசியல் முகவரியை பெற்றுக் கொடுத்ததுடன் அவர்களை அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக ஆக்கிய பெருமை தலைவர் அஷ் - ஷஹீத் அஸ்ரஃப் அவர்களையே சாரும்.
1994ம் ஆண்டு மார்ச் மாதம் 10ம் திகதி கிழக்கு மாகாணத்திலும், வவுனியாவிலும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. எனது நினைவுக்கெட்டிய வரையில் 1966ம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குப் பின் நடைபெற்ற தேர்தலாக இத் தேர்தல் அமைந்திருந்தது. 1979ம் ஆண்டு மே மாதம் 23ம் திகதி இடம்பெற்ற பொதுத் தேர்தலில் ஆட்சிக்கு வந்த ஸ்ரீ மாவோ RD பண்டாரநாயக்க தலைமையிலான அரசாங்கமும், 1977ம் ஆண்டு ஜுலை மாதம் 21ம் திகதி இடம்பெற்ற பொதுத் தேர்தல் மூலம் ஆட்சியைக்கு வந்த J.R. ஜயவர்த்தன தலைமையிலான அரசாங்கமும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போட்டு வந்தன என்பது நீண்ட வரலாராகும்.
1993ம் ஆண்டு மே மாதம் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி D.P. விஜேதுங்க தலைமையிலான அரசாங்கம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடாத்த முன்வந்தது. அத் தேர்தல் 17 வருடங்கள் தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்து வந்த ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் பலப்பரீட்சையாக மாறியது. தேர்தலில் ஆளும் அதிகார வர்க்கத்தைத் தோற்கடித்து கிழக்கு மாகாணத்தில் பல சபைகளை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றியது. வவுனியா, குச்சவெளி, தம்பலகாமம் உட்பட பல சபைகளில் பெருவாரியான உறுப்பினர்களை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பெற்றுக்கொண்டது. துரதிர்ஷ்டவசமாக 90 வாக்குகளால் பொத்துவில் பிரதேச சபையையும், 252 வாக்குகளால் நிந்தவூர் பிரதேச சபையையும் இழக்க வேண்டி ஏற்பட்டது.
அதே வருடம் மே மாதம் 11ம் திகதி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 12வது வருடாந்த மாநாடு கல்முனையில் நடாத்தப்பட்டது. காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதைப் போன்று மனித வெள்ளமாக காட்சியளித்த அம் மாநாட்டில் பல கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
குறிப்பாக முன்னால் கல்வி அமைச்சர் கலாநிதி S. பதியூதீன் மஃமூத், இ.தொ.கா. தலைவர் S. தொண்டமான், ஈ ரோஸ் பாராளுமன்ற உறுப்பினர் பசீர் சேகுதாவுத், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் P. சிதம்பரம், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட பிரதித் தலைவர் K.P. ரத்னாயக்க ஆகியோரின் உரைகள் போற்றத்தக்கதாக அமைந்திருந்தன. அம் மாநாடானது 17 வருடங்கள் ஆட்சியில் இருந்து வந்த ஐக்கிய தேசியக் கட்சியின் அரசைத் தோற்கடித்து சந்திரிக்கா அம்மையார் தலைமையிலான அரசாங்கம் அமைப்பதற்கு வழி கோலியது.
2000ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 10ம் திகதி பொதுத் தேர்தல் நடாத்துவதற்கான அரச ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. தேர்தலில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில் கொழும்பில் இருந்து அம்பாறை நோக்கி வானூர்த்தியில் பயணம் செய்து கொண்டிருந்த தலைவர் அஷ்ரஃப் அவர்கள் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி மரணமானார். (செப்டம்பர் மாதம் 16ம் திகதி 2000ம் ஆண்டு) அவரது மறைவினால் போராளிகள் அதிர்ச்சியடைந்திருந்த அவ் வேளையில் கட்சிக்குள் குழப்பங்கள், வெடிப்புகள், இணைத்தலைமை, வெளியேற்றம், காட்டிக்கொடுப்புக்கள் என துரோகச் செயல்கள் அரங்கேறிக்கொண்டிருந்தன.
23 வருடங்களாக கட்சிக்குள் ஏற்பட்டு வரும் அத்தனை சவால்களுக்கும் முகங்கொடுத்து அவசரப்படாமல் அமைதியாக இருந்து நிலவரங்களை அவதானித்து அவற்றை எவ்வாறு விவேகமாக கையாள்வது என்பது குறித்து தீர்மானிப்பதும், நிலவரங்களை அவசரமான அனுகுமுறையில் தீர்க்கமான தீர்மானங்களை எடுக்கும் துணிவாற்றலும், சானக்கியமும் நமது தற்போதைய தேசியத் தலைமை அல் ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு உண்டு என்பதுடன்,
மரமாகவும், மரத்தின் விழுதாகவும், விழுதின் வேராகவும் நின்று கட்சியை பாதுகாத்து வரும் வல்லமையும் தலைவர் ரவூப் ஹக்கீமிற்கு உரித்தானது.
இன்னும் பல ஆண்டுகள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு அல் ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்கள் தலைமை தாங்க வேண்டும் என்பதில் இரு வேறு கருத்துகளுக்கு இடமில்லை.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)