
posted 7th December 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
ஹக்கீமின் கடும் விசனம்
குற்றச்சாட்டுக்களை நீதியரசரை குறிப்பிட்டு முன்வைப்பது மிகவும் அசிங்கமானது இவ்வாறு பாராளுமன்றத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கடும் விசனம் தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்;
பாராளுமன்றத்தில் கடுமையாக நடந்து கொள்ளும் பொழுது, குற்றச்சாட்டுக்களை நீதியரசர் ஒருவரை குறிப்பிட்டு முன்வைக்கும் பொழுது அது மிகவும் அசிங்கமான விடயம் என்பதை நான் கூறிக்கொள்கின்றேன். அது தவிர்க்கப்படவேண்டும்.
சக உறுப்பினர் ரிஷாட் பதியுத்தீனும், நீதியமைச்சரும் சில விடயங்களை எழுப்பியிருந்தார்கள். அதனைக் கேட்டு நானும் முன்னைய நாளில் சலனப்பட்டேன். ஒருவரின் சிறப்புரிமை என்பது சந்தேகத்துக்குரியது அல்ல, அது பாராட்டப்பட வேண்டும். அதுதான் சிறப்புரிமை என்பது. ஆனால், அரசாங்த்தின் இன்னுமொரு நிறுவனம் தொடர்பான விடயத்தை எடுத்து கொள்கின்ற போது அதற்கு வரம்புகள் இருக்கின்றன. அதில் நாங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சிலவகை பிரச்சினைகள் அல்லது விடயங்கள் இங்கே கூறப்பட்டன. ஏனெனில் பாராளுமன்ற சிறப்புரிமைகள் சட்டம் உங்களுக்கு பாராளுமன்ற விவகாரங்களை விரும்பியவாறு நடாத்திச் செல்வதற்கு அதிகாரத்தை வழங்குகின்றது.
அதேபோல், நீதியரசர்களும் நீதிபதிகளும் அவர்களது விவகாரங்களை சுதந்திரத்துடன் நடத்திச் செல்வதற்கான அனுமதி இருக்க வேண்டும். எனவே பாராளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியிலும், ரிஷாட் பதியுத்தீனின் சகபாடி என்ற ரீதியிலும் நீதிபதிகளை நான் எவ்வாறு குறை கூறுவது?
ஏன் இந்த நீதியரசர்கள் ஒருவர் மாறி ஒருவராக வழக்குகளைப் பொறுப்பேற்க மறுத்துக் கொண்டிருக்கின்றார்கள்? நான் அவர்களை விமர்சிக்க விரும்பவில்லை. அந்த வழக்கை விசாரிப்பதில் தடைகள் ஏதும் இருக்கின்றதா? என்பதை பிரதம நீதியரசர் நிச்சயமாக அந்த நீதியரசரை சம்பந்தப்பட்ட வழக்கை விசாரிக்க நியமிப்பதற்கு முன்பு பிரஸ்தாப நீதியரசரிடம் கேட்டிருக்க வேண்டும். அது உண்மையான அரசியலோடு சம்பந்தப்பட்ட விடயம்.
அந்த சந்தர்ப்பத்தில் நாங்கள் ரிஷாட் பதியுதீன் மீது அனுதாபப்பட்டோம். அவரது நீண்டகால சிறைவாசம் மிக அற்பத்தனமான விடயம். புனையப்பட்ட கட்டுக்கதைகளினால் அவர் சிறையில் அடைக்கப்பட்டது அநீதி என்பதையிட்டுத்தான் அவருடன் நாங்கள் இருந்தோம்.
ஹல்ஸ்டொப் (புதுக்கடை)பில் முன்னணி சட்டவாதியான மிகப்பெரும் ஆளுமையாக மதிக்கப்படும் அவர் என்ன கூறினார் என்பது எனக்கு தெரியும். ரிஷாட் பேசுகின்ற விடயம் தொடர்பாக அவர் மிகவும் குழப்பமடைந்து இருக்கின்றார். இந்த சபையில் ஜனாதிபதி சட்டத்தரணிகள் இருக்கின்றார்கள். முன்னாள் ஜனாதிபதியும் நீதி மன்றத்தில் சட்டத்தரணியாக இருந்தவர். எனவே இவ்வாறு நீதியரசர் ஒருவரைக் குறிப்பிட்டு விமர்சிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
இங்கு ஒரு மரபு இருக்கிறது. அவர்களுக்கு நாங்கள் சட்டத்தைக் கற்பிக்க முடியாது. நாங்கள் குறிப்பிடும் விதத்தில் அவர்கள் தீர்ப்பு வழங்க முடியாது. நான் கூறுபவர் பெரும் ஆளுமை. அவரின் பெயரை இங்கே குறிப்பிட முடியாது. அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவுக்குத் தெரியும். நான் அவரின் கனிஷ்ட சட்டத்தரணியாக இருந்திருக்கின்றேன். இன்னொரு சிரேஷ்ட நீதிபதியின் கனிஷ்ட சட்டத்தரணியாக இருந்திருக்கின்றேன். ஜனாதிபதி சட்டத்தரணியான என்னுடைய உறவினரும் இருக்கின்றார். இந்த ஆளுமைகளின் நற்பெயர்கள் களங்கப்படுத்தப்படுகின்றன. இதே சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை குறிப்பிட்டு நிந்திக்கும் போது அது இன்னும் பிரச்சினையாக மாறுகின்றது.
எனக்கு நிச்சயமாகத் தெரியும் . சபாநாயகர் அவர்களே! இவ்வாறான சிறப்புரிமை விடயங்களை எழுப்புகையில் நீங்கள் என்ன கூறப்படுகின்றது என்பதை பிரதியை வாங்கி பரிசீலித்திருக்க வேண்டும்.
அந்த நீதியரசர்களின் தொலைபேசி பதிவுகள் பரிசீலிக்கப்பட வேண்டும் என அவர் கேட்டு இருக்கின்றார். அது எல்லையைத் தாண்டுகின்றது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தெரியும். நான் நீதியமைச்சராக இருந்த போது மன்னார் நீதிமன்றத்தில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அப்போதைய பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க என்னை அழைத்தார். அவர் மிகவும் குழப்பமடைந்திருந்தார். நீதிமன்றத்துக்கு கல் எறியப்பட்டிருந்தது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்னை அழைத்து பாராளுமன்றத்தில் இந்த விடயத்தைக் கூற வேண்டாம் என்று சொல்லியிருந்தார். இவை கடந்த காலத்தில் நடந்து இருக்கின்றன. எனவே நாங்கள் இவ்வாறு கடுமையாக நடந்து கொள்ளும் பொழுது குற்றச்சாட்டுக்களை நீதியரசரை குறிப்பிட்டு முன்வைக்கும் பொழுது அது மிகவும் அசிங்கமான விடயம் என்பதை நான் கூறிக்கொள்கின்றேன்.
இது தவிர்க்கப்படவேண்டும். நீதியரசர்களின் பெயர்கள் இங்கு இழுக்கப்பட்டு இருக்கின்றன. இது நீதியற்றது. நியாயமற்றது என்றார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)