
posted 16th March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
வைத்தியர்களின் தொழிற்சங்க பணிப்பு
தொழிற்சங்க பணிப்பகிஷ்கரிப்பில் வைத்தியர்கள் ஈடுபட்டாலும் அவசர சிகிச்சைப் பிரிவு தொடர்ந்தும் இயங்குமென அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் யாழ். போதனா வைத்தியசாலை கிளையின் தலைவர் எஸ். மதிவாணண் தெரிவித்தார்.
அதே நேரத்தில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்ற வைத்தியர்கள் தனியார் வைத்தியசாலைகளிலும் சேவையில் ஈடுபட முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
தொழிற் சங்க நடவடிக்கை தொடர்பில் யாழ் போதனாவில் நேற்று (15) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
இந்த நாட்டில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பல தரப்பினர்களும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்ற நிலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரும் சில கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக அரசின் நியாயமற்ற வரிக்கொள்கை, சம்பள குறைப்பு, மருந்து தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு அரசாங்கம் உடனடியாகத் தீர்வை வழங்கவேண்டுமென வலியுறுத்தி கடந்த போராட்டங்களை முன்னெடுத்திருந்தோம்.
எனினும் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்காததால் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளோம். இந்த தொழிற்சங்க நடவடிக்கையினால் பொது மக்கள் பாதிக்கப்படாத வகையில் அவசர சிகிச்சைப் பிரிவுகள் தொடர்ந்தும் இயங்கி வருகின்றன. ஆனாலும் ஏனைய சேவைகளில் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு எமது மன வருத்தத்தை தெரிவித்து கொள்கிறோம். மேலும் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவது எமது நோக்கமும் அல்ல. அதனால் முடிந்தவரை சேவையை வழங்க தயாராக இருக்கிறோம். இதற்காகவே சில சில இடங்களில் நாளாந்த ரீதியாக இந்த தொழிற்சங்க நடவடிக்கையை முதலில் ஆரம்பித்திருந்தோம்.
இவ்வாறான நிலைமையில் நாளைய தினம் நாடாளாவிய ரீதியில் முன்னெடுக்கவுள்ள தொழிற்சங்க நடவடிக்கையில் நாமும் இணைந்து கொள்கிறோம்.
எமது இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் அவசர சிகிச்சைகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவுகள் இயங்கும் என்பதை மக்களுக்கு மீளவும் தெரிவித்துக் கொள்கிறோம்.
அதேநேரம் மக்களுக்கு ஏற்படும் சிரமத்திற்கு எமது மன வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதுடன் எமது மக்கள் தொடர்ச்சியாக பாதிப்படைய விடமாட்டோம் என்பதையும் கூறிக் கொள்கிறோம்.
ஆகையினால் நாம் முன் வைத்துள்ள கோரிக்கைகளிற்கு அரசாங்கம் விரைவாக சமூகமான தீர்வை ஏற்படுத்த வேண்டும். அவ்வாறான தீர்வை வழங்கும் எனவும் எதிர்பார்க்கிறோம்.
இதேவேளை அரச வைத்திய சாலைகளில் தொழிற்சங்க போராட்டத்தில் வைத்தியர்கள் ஈடுபடுகின்ற போது தனியார் வைத்தியசாலைகளில் சேவையில் ஈடுபட முடியாது.
ஆனால், அரச வைத்தியசாலையில் அவசர சிகிச்சை வழங்குவது போன்று தனியார் வைத்தியசாலையிலும் அவசர சிகிச்சையை மட்டுமே வழங்க முடியும். மாறாக சாதாரண சேவைகளில் ஈடுபட முடியாது என்றார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)