
posted 27th February 2023
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதான அரச பஸ் நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமாக நபர் ஒருவர் பல கடவுச் சீட்டுக்களை நபர்களிடம் பெற்று வருவதாக பொலிஸ் விசேட பிரிவு பொறுப்பதிகாரிக்கு தகவல் கிடைக்கப்பெற்றிருந்தது.
இதற்கமைய சம்பவ இடத்துக்கு கல்முனை தலைமையக பொலிஸார் தேடுதல் ஒன்றை மேற்கொண்டனர்.
இதன்போது மட்டக்களப்பு மாவட்டம் ஆரையம்பதி பகுதியைச் சேர்ந்த 51 வயது மதிக்கத்தக்க மைக்கல் மணிமேகலன் என்பவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு என கூறிச் சிலரிடம் பெற்றுக் கொண்ட கடவுச் சீட்டுக்களுடன் கைதானார்.
இவ்வாறு கைதான நபர் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
குறித்த நபரிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் வங்கிக் கணக்கின் ஊடாக பலரிடம் பணக்கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
மேலும் சந்தேக நபர் வசம் இருந்த கடவுச் சீட்டுக்கள் மீட்கப்பட்டு உரிமையாளர்கள் பொலிஸ் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டனர்.
இவ்வாறு வரவழைக்கப்பட்டவர்கள் அனைவரும் நற்பிட்டிமுனை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் தமது கடவுச்சீட்டுக்களை சந்தேக நபரிடம் மத்திய கிழக்கு வேலைவாய்ப்புக்காக வழங்கியதாகவும் அதற்காக சந்தேக நபரின் வங்கிக் கணக்குக்கு பெருந்தொகையான பணத்தை வைப்பிலிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.
பொலிஸ் குழுவினர் இவ்விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைவரிடமும் வாக்குமூலங்களை பெற்றுள்ளதுடன் கைதான சந்தேக நபர் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக அனுப்புகின்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரா அல்லது இடை தரகரா என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)