
posted 12th February 2024
துயரினைப் பகிருங்கள்
துயர் பகிர்வு
வீதியில் காயவிட்டு நெல்லுக்கு காவலிருந்தவர் பலி
வீதியில் நெல்லை காய விட்ட பின்னர், அதன் பாதுகாப்புக்காக வீதிக் கரையில் படுத்திருந்தவர் மோட்டார் சைக்கிள் மோதியதில் உயிரிழந்தார்.
புலோலி - கொடிகாமம் - கச்சாய் பிரதான வீதியில் துன்னாலை மாய்கரான் பகுதியில் இந்தச் சம்பவம் இன்று (12) அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றது. இதில், புலோலி தெற்கை சேர்ந்த பரராஜசிங்கம் நாகேஸ்வரன் (வயது 57) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பில் மேலும் அறிய வருவதாவது,
விபத்தில் உயிரிழந்தவரும், அவரின் சகோதரரும் வயலில் நெல்லை அறுவடை செய்த பின்னர் அது காய்வதற்காக பிரதான வீதியில் ஒரு பாகத்தில் பரப்பியுள்ளனர். நெல் காயவிடப்பட்டதை வீதியில் செல்பவர்கள் உணரும் விதமாக லாண்ட்மாஸ்டரை ஒரு புறத்தில் நிறுத்தியதுடன் மறுபுறத்தில் மின்வெளிச்சம் ஒன்றையும் ஒளிர விட்டுள்ளனர்.
இதன் பின்னர் லாண்ட்மாஸ்டரின் பெட்டிக்குள் சகோதரர் படுத்துள்ளார். உயிரிழந்தவரான நாகேஸ்வரன் வீதியோரத்தில் உறங்கினார். அந்நேரம் இன்று (12) அதிகாலை புலோலியிலிருந்து முகமாலை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த தம்பதியர் எதிரே ஓட்டோவின் வெளிச்சத்தினால் கண்கூசியதன் காரணத்தால் மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் நிலை தடுமாறி கட்டுப்பாட்டை இழந்து வீதியில் படுத்திருந்தவரை மோதியது.
விபத்து நடந்த சத்தம் கேட்டு லாண்ட்மாஸ்டரில் படுத்திருந்தவர் எழுந்து வந்து, தம்பதியருக்கு உதவியதுமல்லாமல் தலையில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனரை மருத்துவமனையில் சேர்ப்பிக்க உதவினார். இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தியவரின் மனைவி சிறுகாயங்களுக்கு உள்ளானார். பின்பு தனது சகோதரரை காணவில்லை என்று தேடுகையில் நெல்லால் அவர் மூடப்பட்ட நிலையில் உள்ளததைக் கண்டு அவரை உடனே மருத்துவமனையில் சேர்ப்பித்தார். இவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
உடல்கூறாய்வில் தலைமீது மோட்டார் சைக்கிள் ஏறியதில், தலைக்குள் இரத்தக் கசிவு ஏற்பட்டு அவர் உயிரிழந்தார் என்று தெரியவந்தது.
இந்த மரணம் தொடர்பான விசாரணைகளை பருத்தித்துறை ஆதார மருத்துவமனையின் மரண விசாரணை அதிகாரி சதானந்தம் சிவராஜா நடத்தினார்.
பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து வருகின்றனர்.
மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் காயங்களுக்கு உள்ளான நிலையில் பருத்தித்துறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)