விட்டுக்கொடுக்கத் தயாரில்லை - மாநகர முதல்வர்

கல்முனை மாநகராட்சி ஆள்புல எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் மாட்டிறைச்சியின் விலை கட்டுக்கடங்காமல் செல்வதைக் கருத்தில் கொண்டு, கட்டுப்பாட்டு விலையை நிர்ணயம் செய்து, அதனை இறுக்கமாக அமுல்படுத்துவதற்கு எடுத்துள்ள நடவடிக்கைகளில் இருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீப் தெரிவித்துள்ளார்.

இறைச்சி வியாபாரத்தில் இருந்து வருகின்ற மாபியாவை ஒழிப்பதற்கு பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது;

2022.08.06ஆம் திகதி சனிக்கிழமை தொடக்கம் கட்டுப்பாட்டு விலையில் மாட்டிறைச்சியை விற்பதற்கு வியாபாரிகள் இணக்கம் தெரிவித்திருந்தனர். ஆனாலும், அன்றைய தினத்தில் இருந்து பெரும்பாலான இறைச்சி வியாபாரிகள் மாடறுத்து- இறைச்சிக் கடைகளை திறக்காமல், வியாபாரத்தை நிறுத்தியுள்ளனர். இன்னும் சில நாட்களுக்கு இந்நிலை தொடரலாம்.

உண்மையில், நிர்ணய விலைக்கு இறைச்சியை விற்காமல், தமது தீர்மானத்தை மீறும் இறைச்சிக் கடைகளை இழுத்து மூடுவதற்கு நான் தயாராக இருந்தேன். அதற்காக பொலிஸ் மற்றும் மாநகர சபை உத்தியோகத்தர்கள் சகிதம் கள விஜயம் மேற்கொண்டு கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏற்பாடாகியிருந்தது. ஆனால், வியாபாரம் நடத்தாமல் கடைகளை அவர்களாகவே மூடியிருந்தமை முதல் வெற்றியாகும்.

01 கிலோ கிராம் மாட்டிறைச்சி 1600 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட வேண்டும். அதில் ஆகக்கூடியது 200 கிராம் மாத்திரமே எலும்பு அடங்கியிருத்தல் வேண்டும். தனி இறைச்சியாயின் 01 கிலோ கிராம்- 1800 ரூபாவுக்கே விற்கப்பட வேண்டும். அனைத்து இறைச்சிக் கடைகளிலும் டிஜிட்டல் தராசு பயன்படுத்தப்பட வேண்டும் என்ற தீர்மானங்கள் மாநகர சபைகள் கட்டளைச் சட்டம் பிரிவு 272 (8)(gg) இன் பிரகாரம் மாநகர முதல்வருக்கு உரித்தான அதிகாரத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அதுவும் மாட்டிறைச்சி வியாபாரிகளின் இணக்கப்பாட்டுடனேயே இத்தீர்மானங்களை மேற்கொண்டிருந்தோம்.

இத்தீர்மானங்களை மீறும் மாட்டிறைச்சி வியாபாரிகள் மீது மாநகர சபைகள் கட்டளைச் சட்டம் பிரிவு 272 (8) (c),(d) இன் கீழ் குறித்த மாட்டிறைச்சிக் கடைகள் உடனடியாக இழுத்து மூடப்படும் எனவும், நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு, சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் மாட்டிறைச்சிக் கடைக்கான வியாபார உரிமம் இரத்துச் செய்யப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

மேலும், மாட்டிறைச்சி வியாபாரிகளுடனான குறித்த கலந்துரையாடலில், அவர்களினால் தெரிவிக்கப்பட்ட செலவீனங்கள் தொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்பினருடன் ஆராய்ந்தபோது, அவை மிகைப்படுத்தப்பட்டவை என தெரிய வந்துள்ளது.

உண்மைகள் மறைக்கப்பட்டு, செலவீனங்கள் அதிகமாகக் காட்டப்பட்டே மாட்டிறைச்சி வியாபாரத்தில் கொள்ளை இலாபம் அடிக்கப்படுகின்றமை நிரூபிக்கப்பட்டுள்ளதால், இந்த மாபியாவை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது. இந்த விடயத்தில் எத்தகைய விமர்சனங்கள், சவால்கள் வந்தாலும் அவற்றை முறியடித்து ,மக்களுக்கு நியாய விலையில் மாட்டிறைச்சி கிடைப்பதை உறுதிப்படுத்துவதற்கு அதீத பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றோம்.

இந்த விடயம் சம்மந்தமாக கல்முனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட பொலிஸ் உயர் அதிகாரிகள் மற்றும் நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகளுடனும் அம்பாறை மாவட்டத்திலுள்ள ஏனைய சில உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்களுடனும் முதல்வர் பேசியிருப்பதுடன் அவர்களது ஒத்துழைப்பும் கிடைக்கப் பெற்றுள்ளது.

ஆகையினால், தீர்மானிக்கப்பட்ட விலைகளுக்கு மாட்டிறைச்சி விற்பதற்கு வியாபாரிகள் முன்வராத வரை இறைச்சிக் கடைகளை திறப்பதற்கோ, வேறு வழிகளில் மாட்டிறைச்சி விற்பதற்கோ அனுமதி வழங்கப்பட மாட்டாது.

இதனால் இன்னும் சில தினங்களுக்கு நுகர்வோருக்கு இறைச்சி கிடைக்காமல் போகலாம். இது விடயத்தில் சகிப்புத் தன்மையுடன் பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம் இந்த மாபியாவை முறியடித்து விடலாம் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

விட்டுக்கொடுக்கத் தயாரில்லை - மாநகர முதல்வர்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Read More
Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More