
posted 24th April 2022
வாள் வெட்டினால் அபாய நிலையில் குடும்பஸ்தர்
வாள் வெட்டு தாக்குதலுக்கு இலக்கான இளம் குடும்பஸ்தர் ஒருவர் ஆபத்தான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சனிக்கிழமை (23) காலை வடமராட்சி திக்கம், அல்வாய் வடமேற்கு பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் கைலாசபிள்ளை அன்ரன் இராசநாயகம் (வயது- 44) என்ற இளம் குடும்பஸ்தரே வாள் வெட்டுக்கு இலக்காகியுள்ளார்.
இரண்டு தினங்களாக ஒருவர் பின்தொடர்ந்து வந்ததை அவதானித்த வெட்டுக்கு இலங்கானவர், இன்று பின்தொடர்ந்து வந்ததை அவதானித்து தன்னை பின்தொடர்வதற்கான காரணத்தை கேட்டதாக கூறப்படுகிறது.
இதன்போது அவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இரண்டு கை பகுதியிலும் பலத்த காயமடைந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கிருந்து கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்படுள்ளதாக பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர், இது வரை சந்தேகநபர்களை அடையாளம் காணமுடியவில்லை.
புகையிலை அறுவடையில் தீவிரமாயுள்ள விவசாயிகள்
வடமராட்சி, வலிகாமம் பிரதேசங்களில் பயிரிடப்பட்ட புகையிலையை அறுவடை செய்வதில் விவசாயிகள் மும்மரமாக ஈடுபட்டுள்ளனர். புகையிலைக் செடி ஒன்று 350 ரூபா தொடக்கம் 450 ரூபா வரையில் வடமராட்சிப் பிரதேசத்திலும், 250 ரூபா தொடக்கம் 350 ரூபா வரையில் வலிகாமம் பிரதேசத்திலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
புகையிலையை உலர்த்தி, பதனிட்டு விற்பனை செய்து வரும் புகையிலை வியாபாரிகள், புகையிலைச் செடியை விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்து வருகின்றனர். கொள்வனவு செய்யப்படும் புகையிலையின் தரத்திற்கு ஏற்ப விலைகள் நிர்ணயம் செய்யப்பட்டு வருவதாக புகையிலை வியாபாரிகள் தெரிவித்தனர்.
அறுவடை செய்யப்பட்டு வரும் புகையிலையை இரு பிரதேசங்களிலிருந்து வடமராட்சிப் பிரதேசத்தைச் சேர்ந்த வியாபாரிகளே மிகக் கூடுதலாக கொள்வனவு செய்து வருகின்றனர். ஒரு சில விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த புகையிலையைத் தாங்களே உலர்த்தி பதனிட்டு வருகின்றனர்.
வடமராட்சிப் பிரதேசத்தில் உள்ள மதிற்சுவர்களில் அறுவடை செய்யப்பட்ட புகையிலைகள் கட்டுக் கட்டாக உலரப் போட்டிருப்பதைக் காணக் கூடியதாக இருக்கின்றது.
இருப்பினும் கடந்த வாரம் இடைவிட்டு இரு தினங்களாக கடும் மழை பெய்தமையினால் உலரப் போடப்பட்ட பெருமளவிலான புகையிலைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளதால் சில புகையிலை வியாபாரிகள் நஷ்டத்தையும் எதிர் கொண்டுள்ளனர்.
இதே வேளை கடந்த வருடம் வடமராட்சி, வலிகாமம் பிரதேசங்களில் அதிக பரப்பில் புகையிலைச் செய்கை மேற்கொள்ளப்பட்டதால் உலர்த்தப்பட்டு பதனிடப்பட்ட புகையிலை, வியாபாரிகளிடமும், விவசாயிகளிடமும் சந்தைப்படுத்த முடியாத நிலையில் தேங்கிக் கிடக்கின்றன.
தமிழ் சிவில் சமூக அமையம் எழுப்பிய கேள்வி எது?
ஒரு தேசமாக எமது இருப்பைப் பாதுகாத்துக் கொள்வது தொடர்பான தமிர்களின் நீண்டகாலக் கேள்விக்கு பதிலேதும் உண்டா? என தமிழ் சிவில் சமூக அமையம் கேள்வி எழுப்பியுள்ளது.
அரசை பதவி விலகக் கோரி தெற்கில் போராட்டங்களில் ஈடுபட்டுவரும் இளைஞர்களிடம் இந்த கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ் சிவில் சமூக அமையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
இன்று தெற்கில் போராடிக் கொண்டிருக்கும் பொதுமக்கள், இளைஞர்களுக்கு எம் தோழமையைத் தெரிவிக்க விரும்புகின்றோம். உறுதியாகத் தெரிவிக்கின்றோம்.
ஆனால், நீங்கள் இன்று போராடப் புறப்பட்டதற்கான காரணங்களான பொருளாதார விடயங்கள் எம்மையும் தாக்குகின்றனவே. ஆனாலும், எம் தோள்களை உங்களுடன் இணைப்பதில் உள்ள மனத்தடைக்கான காரணம் தமிழர்களாகிய எம் மனதில் எழுந்து நிற்கும் அச்சமும், களைப்பும் தருகின்ற கேள்வியே.
காலி முகத்திடலில் இருந்து முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளில் இன்றைய பொருளாதாரச் சிக்கல்களுக்கு உண்மையான அடிப்படைக் காரணமான சிங்கள பௌத்த மேலாதிக்க அபிலாஷைகளுக்கு மாற்றீடுகள் முன்வைக்கப்படவில்லை. வெறுமனே முன்மொழியப்பட்டுள்ள ஆட்சி மாற்றம் தமிழருக்கு எதையும் தந்துவிடப் போவதில்லை என்றுள்ளது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY