
posted 15th January 2023
வடக்கு மாகாண முன்னாள் ஆளுநரும் முன்னாள் அமைச்சருமான ரெஜினோல்ட் கூரே தனது 74ஆவது வயதில் நேற்று வெள்ளிக்கிழமை காலமானார்.
வியாழக்கிழமை (12) இரவு அவர் திடீர் சுகயீனமடைந்ததை அடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில்13.01.2023 அதிகாலை அவர் காலமானார்.
வாதுவை ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல் சந்திப்பின் போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என மருத்துவமனை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, மேலதிக சிகிச்சைகளுக்காக களுத்துறை போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இதன்போதே, சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார் என தெரிவிக்கப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர், வெகுஜன ஊடக அமைச்சர், சிறு ஏற்றுமதி பயிர் ஊக்குவிப்பு அமைச்சர், விமான போக்குவரத்து அமைச்சர், நீதி பிரதி அமைச்சர், மேல் மாகாண முதலமைச்சர், வட மாகாண ஆளுநர், தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் அதிகார சபையின் தலைவர் மற்றும் அரசால் நடத்தப்படும் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர் என பல பதவிகளை அவர் வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)