
posted 29th May 2022
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் யார் என்பதை தற்போதைய அரசே தீர்மானிக்கும். ஆனால் நான் அமைச்சரவை அந்தஸ்துள்ள தமிழ் அமைச்சர் என்ற ரீதியில் யாழ். கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு என்னால் முடிந்த சேவையை செய்வேன். அதில் யாரும் தலையிட முடியாது. யாரும் தடுக்கவும் முடியாது என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
யாழ். மாவட்டத்தில் உள்ள பொருளாதார நெருக்கடி நிலை தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் இன்று யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தற்போது கோட்டா- ரணில் ஆட்சி இடம்பெறுகின்றது. யாழ். கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் பதவி யாருக்கும் வழங்கப்படவில்லை. எனவே நீங்கள்தான் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரா? என ஊடகவியலாளர் ஒருவர் கேட்டதற்கு பதில் அளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
அதை அரசாங்கம் தான் தீர்மானிக்க வேண்டும். யாரை நியமிக்க தீர்மானிக்கிறார்கள் என்று எனக்கு தெரியாது. ஆனால் எனக்கு ஒரு கடமை உள்ளது. கிளிநொச்சி, யாழ்ப்பாண மாவட்டங்களில் ஒரு மூத்த பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சரவை அந்தஸ்துள்ள ஒரு தமிழ் அமைச்சர் என்ற ரீதியில் எனது மக்களுக்கு என் சேவை தொடரும். அதனை யாரும் தடுக்க முடியாது என்றார்.
கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் பதவி விலகவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்த கருத்து தொடர்பில் ஊடகவியாளர்கள் கேட்டபோது,
அவருடைய சுபாவம் அப்படி தான். ஒரு கொலை இடம்பெற்றால் கொலைகாரன் காசை கொடுத்து காப்பாற்றச் சொன்னால் காப்பாற்றுபவர்தான் சுமந்திரன் என்றார்.
யாழ். மாவட்டத்தில் மக்கள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடி தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் யாழ். மாவட்ட செயலகத்தில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபரின் தலைமையில் இடம்பெற்றது.
இந்த கூட்டத்தில் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து பிரதேச செயலர்கள், யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் கடற்றொழில் திணைக்களம் மற்றும் ஏனைய துறை சார் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
யாழ். மாவட்டத்தில் பொது மக்கள் எதிர்நோக்கும் அத்தியாவசிய பொருட்கள், எரிபொருள் விநியோகம், எரிவாயு விநியோகம் எனப்பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதில் ஆராயப்பட்டதுடன் அதற்குரிய தீர்வும் எட்டப்பட்டது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY