முள்ளிவாய்க்காலில் தமிழினத்தினரை வெறி கொண்டு அழித்த நாள் நினைவு கூரல்

முள்ளிவாய்க்கால் இனவழிப்பு வாரத்தின் முதலாம் நாள் நினைவு அஞ்சலி, யாழ். பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி வளாகத்தில் நேற்று வியாழக்கிழமை ஆத்மார்த்தமாக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டது.

அகவணக்கத்துடன் ஆரம்பமான நினைவேந்தலைத் தொடர்ந்து பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஊழியர் சங்க பிரதிநிதிகளால் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டதோடு ஈகைச்சுடரும் ஏற்றப்பட்டது.

இதனையடுத்து கருத்து வெளியிட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர் சமூகம், முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இன அழிப்பின் இறுதி நாட்களை முன்னிட்டு இவ்வாரம் இன அழிப்பு வாரமாக நினைவேந்தல்கள் வட கிழக்கு தமிழர் தாயகமெங்கும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த வாரத்தில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்தாலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி மற்றும் நினைவேந்தலை தமிழர் தாயகம் இதயபூர்வமாக கடைப்பிடிக்கவேண்டும் என பல்கலைக்கழக மாணவ சமூகம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதன்போது யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீட மாணவ ஒன்றிய தலைவர், யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்க தலைவர், யாழ். பல்கலைக்கழகத்தின் அனைத்து பீட மாணவர்கள், யாழ் பல்கலை ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முள்ளிவாய்க்காலில் தமிழினத்தினரை வெறி கொண்டு அழித்த நாள் நினைவு கூரல்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)