மீட்சி பெறப் பிரார்த்திப்போம்

வரலாற்றில் என்றுமில்லாதவாறு எமது நாடு எதிர்நோக்கியிருக்கின்ற பாரிய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்சி பெற இப்புனிதத் திருநாளில் பிரார்த்திப்போம் என்று கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் விடுத்துள்ள நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது;

"கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலான காலம், கொவிட்-19 பெருந்தொற்று எனும் அரக்கனின் கோரத்தாண்டவத்தினால் உயிரிழப்புகளுடனும் பல்வேறுபட்ட அவலங்களுடனும் இனவாத நெருக்குவாரங்களுடனும் கடந்து சென்றிருந்தது.

அத்தகைய துன்ப, துயரங்களில் இருந்து நாம் மீண்டெழுவதற்குள் நாட்டின் பொருளாதாரம் அதலபாதாளத்தில் வீழ்ந்து, மக்களை பாரிய நெருக்கடிக்குள் தள்ளியிருக்கிறது. அனைத்து அத்தியாவசிய பொருட்களுக்கும் பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதுடன் அவற்றின் விலைகள் வெகுவாக உயர்ந்திருக்கின்றன.

இதனால் நாடு முழுவதும் இன, மத, பிரதேச வேறுபாடின்றி மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நாடு இன்று கொந்தளிப்பான நிலையில் காணப்படுவதுடன் அரசியல் நெருக்கடியும் ஏற்பட்டிருக்கிறது.

இவ்வாறான ஒரு இக்கட்டான சூழ்நிலையிலேயே முஸ்லிம்கள் றமழான் நோன்புகளை நோற்று, பெருநாளைக் கொண்டாடுகின்றோம். இவ்வேளையில், எம்மில் பெரும்பாலான மக்கள் பொருளாதார நெருக்கடியினால் நிலைகுலைந்து நிற்பதைப் புரிந்து கொண்டு, அவர்களின் வாழ்வாதாரத்திற்காக வசதி படைத்த முஸ்லிம் சகோதரர்கள் நேசக்கரம் நீட்ட முன்வர வேண்டும்.

முஸ்லிம்கள், தாம் எதிர்கொள்கின்ற துன்ப, துயரங்களின்போது பொறுமை, சகிப்புத்தன்மையுடன் அவற்றை இறைவனிடம் பாரம்சாட்டி, பிரார்த்திப்பதே இஸ்லாம் காட்டும் வழிமுறையாகும். மேலும், மனிதனைப் புனிதப்படுத்துகின்ற நோன்பு எமக்கு கற்றுத்தந்துள்ள அனைத்து நற்பண்புகளையும் முழு வாழ்க்கையிலும் கடைப்பிடிப்பதன் மூலமே நாம் நோற்ற நோன்புகள் அரத்தமுள்ளதாக அமையும். அவ்வாறே நோன்பு நோற்று, ஏழை, எளியவர்களின் பசியையும் கஷ்டங்களையும் உணர்ந்துள்ள நாம், அவ்வாறானவர்களுக்கு உதவ பின்னிற்கக் கூடாது என வேண்டுகிறேன்.

மேலும், பல்லின சமூகங்கள் வாழ்கின்ற இந்நாட்டில் முஸ்லிம்கள் பிற சமூகத்தினருக்கு முன்மாதிரியாகவும் ஐக்கியம், சகோதரத்துவத்துடனும் வாழ திடசங்கற்பம் பூணுவோம். அவ்வாறே உலகளாவிய முஸ்லிம் உம்மத் எதிர்நோக்கியிருக்கும் நெருக்கடிகளில் இருந்து மீண்டு- அமைதி, சமாதானம், நிம்மதி ஏற்பட பிரார்த்திப்போம். அனைவரது வாழ்விலும் சுபீட்சம் மலரட்டும். அனைத்து முஸ்லிம்களுக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன். ஈத்முபாரக்.

மீட்சி பெறப் பிரார்த்திப்போம்
மீட்சி பெறப் பிரார்த்திப்போம்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now


ENJOY YOUR HOLIDAY