மாலுமி இல்லாத கப்பலில்  பயணிக்கும் தமிழ் மக்கள்
மாலுமி இல்லாத கப்பலில்  பயணிக்கும் தமிழ் மக்கள்

வி.தேவராஜ் மூத்த ஊடகவியலாளர்

வி.தேவராஜ்
மூத்த ஊடகவியலாளர்

மாலுமி இல்லாத கப்பலில் தமிழ் மக்கள் போருக்குப் பின் பயணித்துக் கொண்டிருக்கின்றனர்.

அகப்பை அவன் கையில்

இன்றும் அதே நிலைதான் மாற்றமின்றி தொடர்கின்றது.

புலம்பெயர் தமிழர்கள் மீதான தடை நீக்கம் குறித்த விடயம் பேசுப் பொருளாக உள்ளது.

இந்தத் தடை நீக்கத்தின் மூலம் தடை நீக்கப்பட்ட புலம் பெயர் அமைப்புகள் சாதிக்க கூடியது என்ன? இதன் மூலம் தமிழ் மக்கள் அடைந்து கொள்ளக் கூடிய அனுகூலங்கள் என்ன?

புலம்பெயர் தமிழர்கள் மீதான தடையை நீக்கியதன் மூலம் இலங்கை அரசாங்கம், குறிப்பாக ரணில் – ராஜபக்ஷக்கள் அரசாங்கம், சாதித்துக் கொள்ள முயல்வது என்ன? தமிழ்மக்களுக்கும் சர்வதேசத்திற்கும் ரணில் – ராஜபக்ஷக்கள் அரசாங்கம் கூறவருகின்ற செய்தி என்ன?

இலங்கையில் மாறி மாறி ஆட்சிபீடம் ஏறுகின்ற அரசாங்கங்கள் காலத்துக்குக் காலம் தமிழர் விவகாரத்துடன் தொடர்புடைய விடயங்களில் தமது நலன்களுக்காக இவ்வாறான முடிவுகளை அறிவிப்பதும், அந்த முடிவுகளை நடைமுறைப்படுத்தாது விடுவதும், மீண்டும் புதிது புதிதாக முடிவுகளை அறிவிப்பதும் வழமையான ஒன்று. இலங்கை அரசாங்களின் இவ்வாறான நகர்வுகளின் ஒரு நீட்சியே புலம்பெயர் தமிழர்கள் மீதான தற்போதைய தடை நீக்கம் ஆகும். ரணில் – ராஜபக்ஷக்கள் அரசாங்கம் தமது நலன்களுக்காக நாளை இதனை மாற்றிக் கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இன்றைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அன்று பிரதமராக, அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவுடன் நல்லாட்சி அரசாங்கத்தை அமைத்தபோது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு தோற்றுவிக்கப்பட்டது. நல்லாட்சி அரசாங்கத்தைக் கொண்டுவருவதில் தமிழ் மக்களின் பங்களிப்பு குறிப்பாக தமிழ் பேசும் மக்களின் பங்களிப்பு மிக அளப்பரியதாக இருந்தது.

நல்லாட்சி அரசாங்கத்தை தாமே கொண்டு வந்ததாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நெஞ்சை நிமிர்த்தி பிரகடனப்படுத்திக் கொண்டிருந்த காலம். இந்த ஆரவாரங்களுக்கு மத்தியில் ஜ.நா. மனித உரிமை சபையில் 'தகர்ந்து போகும் வாக்குறுதிகளுடன் வரவில்லை' என்று அப்போதைய வெளிநாட்டமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டார். அந்த வாக்குறுதிகளுக்கு என்ன நடந்தது என்பது பற்றி தமிழ் மக்களுக்கு குறிப்பாக புலம் பெயர் தமிழர்களுக்கு நன்றாகவே தெரியும்.

அந்தவகையில் புலம்பெயர் அமைப்பக்கள் மற்றும் தனிநபர்கள் மீதான தடை நீக்கம் குறித்து கொண்டாடுவதற்கு என்ன உள்ளது?

2009 மே மாதம் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவடைந்த பின்னர் இந்த அமைப்புகளில் பல மாறி மாறி பயங்கரவாத அமைப்புகளாக அறிவிக்கப்பட்டு மீண்டும் பலமுறை பட்டியலிலிருந்து நீக்கப்பட்டன. யுத்தம் முடிவடைந்து ஐந்து வருடங்களின் பின்னர் 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் 16 அமைப்புகளையும் 424 நபர்களையும் தடை செய்தது.

நவம்பர் 20 அன்று, நல்லாட்சி அரசாங்கம் எட்டு அமைப்புகள் மற்றும் அவற்றில் அங்கம் வகித்த 267 தனிநபர்கள் மீதான தடையை நீக்கியது. பின்னர் மீண்டும் கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி ஏழு அமைப்புகளையும் 389 நபர்களையும் தடைப் பட்டியலில் சேர்த்தது.

தற்போது 6 அமைப்புகளும் 316 நபர்களும் மீண்டும் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் பேசும் மக்களின் நியாயமான அபிலாஷைகளை அடைவதற்கான பயணத்தில் 2014 இல் பட்டியலிலிடப்பட்டோம், 2015 லும்பட்டியலிலிடப்பட்டோம், 2021 இல் மீண்டும் பட்டியலிலிடப்பட்டோம், 2022 இல் மீண்டும் பட்டியலிலிடப்பட்டோம்' என்று சுரேந்திரன் 'த ஜலன்ட்' நாளிதழுக்குத் தெரிவித்துள்ளார்.

மாறிமாறி ஆட்சிபீடம் ஏறும் கட்சிகள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கூறியே புலம் பெயர் அமைப்பகள் மற்றும் தனி நபர்கள் மீதான தடைகளை விதிப்பதும், பின்னர் சில அமைப்பகள் மீதான தடைகளை நீக்குவதும் மீண்டும் தடைவிதிப்பதுமாக நாடகமாடிக் கொண்டிருக்கின்றனர்.

இதுபற்றி டெய்லிமிரர் (Daily Mirror) ஆகஸ்ட் 16 ஆம்திகதி (16.08.2022) தனது ஆசிரியர் தலையங்கத்தில் பின்வரும் கேள்விகளை முன்வைக்கின்றது.

தேசிய பாதுகாப்பிற்கு விரோதமான அமைப்புக்கள் என தடை செய்யப்பட்ட இரண்டு முறையும் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சராக இருந்த ராஜபக்சவால் முடிவெடுக்கப்பட்டது.

அதே நேரத்தில் தடையை நீக்கும் முடிவுகளை ரணில் விக்கிரமசிங்கே முதல்முறையாக பிரதமராகவும், இப்போது ஜனாதிபதியாகவும் இருக்கும் போது எடுக்கப்பட்டுள்ளது.

எனவே உளவுத்துறை மதிப்பீடுகளின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவுகள் அல்ல அரசியல் முடிவுகள் என்று எவரும் முடிவு செய்வது இயல்பானதே.

கோட்டாபய ராஜபக்ச தொடர்ந்து ஜனாதிபதியாக இருந்திருந்தால், அதிகாரிகள் சமீபத்திய முடிவை எடுத்திருப்பார்களா? என்று கேள்வி எழுப்புகின்றது 'டெய்லி மிரர்' ஆசிரியர் தலையங்கம்

எவ்வாறாயினும் ஒவ்வொரு முறையும் அரசாங்கத்தின் முடிவுகள், பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளின் இத்தகைய மதிப்பீடுகள் மற்றும் பரிந்துரைகளுக்கு காரணமாகும்.

எனினும் ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன மற்றும் ராஜபக்ஷக்களின் ஆதிக்கம் செலுத்தும் தற்போதைய அரசாங்கத்தின் தலைவர்கள் காது கேளாத மௌனத்தையும் மீறி சமீபத்திய முடிவுக்கு உடன்படுகிறார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் எட்டு அமைப்புக்கள் மற்றும் 267 நபர்களை பட்டியலிலிருந்து நீக்கியபோது அவர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்கள் என்பதையும் டெய்லி மிரர் ஆசிரியர் தலையங்கம் சுட்டிக் காட்டியுள்ளது.

உண்மையில் 'தேசிய பாதுகாப்பு' என்ற போர்வையில் அரசியல் தலைமைகள் மேற்கொள்ளும் தீர்மானங்களே இவை. இந்த தீர்மானங்களுக்கும் தேசிய பாதுகாப்புக்கும் சம்பந்தம் இருப்பதாக தெரியவில்லை. கடந்த கால தடைகள், தடை நீக்கம் என்பன மாத்திரமல்ல தற்போதைய தடை நீக்கமும் இதனையே உணர்த்தி நிற்கின்றன.

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தபோது 2010 ஆம் ஆண்டளவில் புலம் பெயர் அமைப்புக்களில் ஒரு சில அமைப்புக்கள் மற்றும் தனி நபர்கள் அவரை வந்து சந்தித்தனர். தமிழர்களுக்கு உதவ வேண்டும். தமிழர் பகுதிகளில் முதலிட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கோடுதான் வந்தனர். ஆனால் ஒன்றும் நடைபெறவில்லை. 'வந்தார்கள் சென்றார்கள்' என்பதாகத்தான் இருந்தது.

ஆனால், இவர்களின் வரவை வைத்து மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் பரபரப்புச் செய்திகளாக்கி ஊடகங்களுக்குத் தீனி போட்டது. ஆனால் தமிழர் தாயகத்தில் ஒன்றும் நடைபெறவில்லை.

அண்மையில் நண்பர் ஒருவர் 'வீடியோ கிளிப்' ஒன்றை அனுப்பி வைத்திருந்தார். அவர் வெளி நாட்டில் இருந்து வடக்கில் முதலிடவந்தவர். அவர் தனது பெயர் வாசுதேவன் என்று குறிப்பிடுகின்றார். 40 வருடங்களுக்கு மேல் வெளி நாட்டில் வசித்து வருவதாகவும், சொந்தக் கம்பெனி வைத்திருந்ததாகவும், ஓய்வு பெற்று தாயகம் திரும்பி தாயகத்தில் முதலிட்டு தொழில் தொடங்க வந்ததாகவும் குறிப்பிடுகின்றார்.

நோயாளியான ஒருவர் சிகிச்சையின் பின் மீள எழ, அதாவது பழைய நிலைக்குத் திரும்பும் நிலையொன்றுள்ளது. அதற்கு றிக்கவரி பீரியட் (Recovery Period) என்பார்கள். அந்த RECOVERY PERIOD போருக்குப் பின் தமிழர் பகுதிகளில் நடைபெறவில்லை. இதனால் தான் வட பகுதியில் பிரச்சனைகள் தோன்றியுள்ளன.

இவைகளை கருத்திற் கொண்டே வட மாகாணத்திற்கு (DFI) நேரடியாக வெளி நாட்டு முதலீடுகளைக் கொண்டு வந்து தொழிற் துறையை தொடங்குவதற்கு 2012ஆம் ஆண்டில் இலங்கைக்கு வந்தேன் என்று கூறும் திரு வாசுதேவன், இதற்கென பண்ணைக் கடலோரம் ஆய்வுகளை மேற்கொண்டதாகக் குறிப்பிடுகின்றார். இந்த திட்டத்தில் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலிட திட்டமிடப்பட்டதாகக் குறிப்பிடுகின்றார். ஆனால், இந்தத் திட்டத்திற்கு எவ்வளவோ முயற்சித்தும் அனுமதி வழங்கப்படவில்லை என்று குறிப்பிடுகின்றார்.

அதேவேளையில், புலம் பெயர்ந்து வாழும் அவருடைய பல நண்பர்கள் பல பில்லியன் அமெரிக்க டொலர்களை வடக்கில் முதலிட விருப்பம் தெரிவித்தனர் என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.

இறுதியில் அவர் ஊவாவில் சென்று முதலிட்டதாகவும் அங்கு தொழிற் துறையைத் தொடங்க எந்தவித தடைகளும் இருக்கவில்லை என்றும் வாசுதேவன் குறிப்பிடுகின்றார்.

நான் தமிழன். தமிழர் பகுதியில் முதலிட தனக்கு அனுமதி இல்லை என்று அவர் குறிப்பிடுகின்றார்.

2016 இல் பூநகரி மண்ணித்தலையில் முதலிடுவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்ட போதும், அதற்கும் அனுமதி கிடைக்கவில்லை. குறிப்பாக வெளிநாட்டு முதலீடுகளுடன் 15 திட்டங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை என வாசுதேவன் குறிப்பிடுகின்றார்.

கனடா நாட்டைச் சேர்ந்த ஒருவர் வடக்கில் உப்பளம் அமைப்பதற்காக இரண்டரை வருடங்கள் முயற்சித்தும் அனுமதி கிடைக்காமையால் உப்பளம் அமைக்கும் திட்டத்தையேக் கைவிட்டுச் சென்றுவிட்டார் என்றும் வாசுதேவன் சுட்டிக் காட்டுகின்றார்.

இந்த நிலைமையில், தமிழர் பகுதிகளுக்கு எவ்வாறு வெளி நாட்டு முதலீடுகள் வரும்? தமிழர் பகுதிகள் எவ்வாறு அபிவிருத்தியாகும்பிரச்சனைகள் தீரும்? என கேள்வி எழுப்பினார் வாசுதேவன்.

புலம்பெயர் தமிழர்களே! அமைப்புக்களே! இதுதான் இலங்கை சிங்கள அரசாங்கங்களின் நிலைப்பாடு.
திரு வாசுதேவனின் உரையைக் கேட்டபோது 1977ஆம் ஆண்டென நினைக்கின்றேன், அப்போதைய தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அமிர்தலிங்கம் அவர்கள் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் ஆற்றிய உரை மீண்டும் எனது காதுகளில் ஒலித்தது.

'அகப்பை அவன் கையில்'

இன்றும் அதே நிலைதான் மாற்றமின்றி தொடர்கின்றது.

வேண்டுமானால் புலம்பெயர் தமிழர்கள் இலங்கை மக்களுக்கு இந்தியா தமிழ்நாடு மற்றும் நாடுகள் உதவி செய்வது போன்று உதவிசெய்யலாம். இதற்கு மாறாக தமிழர் விவகாரத் தீர்வு குறித்து பேசப் போனால் நிறையவே 'தகர்ந்து போகும் வாக்குறுதிகளை' அள்ளி வழங்க ரணில் - ராஜபக்ஷ அரசாங்கம் தயாராக உள்ளது. இந்த வாக்குறுதிகளை நீங்கள் வாங்க தயாராக இருந்தாலும் தமிழ் மக்கள் மீண்டும் ஏமாறுவதற்கு தயாராக இல்லை.

சர்வ தேசத்தின் வாக்குறுதிகளுடன் நீங்கள் களத்தில் இறங்க தயாராக இருந்தாலும், நோர்வே சர்வதேச அணியுடன் தமிழ் மக்களை முள்ளிவாய்க்கால் வரை தள்ளி கொன்றொழித்த வரலாரையும் தமிழ் மக்கள் மறப்பதற்கில்லை.

புலம்பெயர் தமிழர்களான உங்களிடம் இலங்கை அரசாங்கத்தையும் சர்வ தேசத்தையும் கையாளக்கூடிய திட்டங்கள், வியூகங்கள் இருப்பின், களத்தில் இறங்கலாம். ஏனெனில் தமிழ் மக்களுக்கு இலங்கையில் தலைமை இல்லை. மாலுமி இல்லாத கப்பலில் தமிழ் மக்கள் போருக்குப் பின் பயணித்துக் கொண்டிருக்கின்றனர்.

மாலுமி இல்லாத கப்பலில்  பயணிக்கும் தமிழ் மக்கள்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Read More
Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More