
posted 12th July 2022
மன்னாரில் தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை பேரூந்து சபைகளுக்கிடையே நிலவிய முறுகல் நிலையால் மன்னாரில் காலை தொடக்கம் போக்குவரத்து சேவையின்மையால் பிரயாணிகள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர்
செவ்வாய் கிழமை (12.07.2022) மன்னாரில் தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை போக்குவரத்து சேவையாளர்களுக்கிடையே இடம் பெற்ற முறுகல் நிலையால் இன்றைய தினம் (12) இரு சபைகளின் போக்குவரத்து சேவைகளும் இடம்பெறவில்லை.
அதாவது மன்னார் இலங்கை போக்குவரத்து சபை சாலைக்கு டீசல் எரிபொருள் வரும் பட்சத்தில் இதில் தனியார் போக்குவரத்து சேவையினருக்கும் ஒரு பகுதி வழங்கப்பட வேண்டும் என்ற ஒரு நிலைப்பாடு காணப்பட்டபோதும் இது நடைமுறைப்படுத்தப்படாமையாலேயே இந் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
திங்கள் கிழமை (11) மன்னார் இலங்கை போக்குவரத்து சபைக்கு 6600 லீற்றர் டீசல் வந்ததாகவும் இதில் தங்களுக்கு வழங்கப்படவில்லையென என தெரிவித்து தனியார் போக்குவரத்து சேவையினர் செவ்வாய் கிழமை (12) தனியார் போக்குவரத்து சேவைகளை இடைநிறுத்தியதுடன் இலங்கை போக்குவரத்து சபை போக்குவரத்து சேவைகளையும் சேவையில் ஈடுபடுத்த முடியாத நிலையில் தங்கள் வாகனங்களை மறித்து தடைசெய்திருந்தனர்.
இதனால் மன்னாரில் தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபையினரின் போக்குவரத்து சேவைகள் இன்மையால் பலர் தங்கள் பயணங்களை மேற்கொள்ள மடியாத நிலையில் பல அசௌரியங்களுக்கு உள்ளாகியிருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இரு தரப்பினரின் பிரச்சனைகளுக்கு அப்பால் வன்செயலை தூண்டும் விதத்தில் ஒரிருவர் தரித்து வைக்கப்பட்டிருந்த பஸ்களை தாக்கியதில் இரு பஸ் வண்டிகள் சேதத்துக்கு உள்ளாகியதாக மன்னார் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக மன்னார் தனியார் போக்குவரத்து சேவை சங்க செயலாளர் எம். வாகேசன் தெரிவித்தார்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)