
posted 19th July 2022
மன்னாரில் இவ் வருடமும் (2022) ஆடிப்பிறப்பு கொண்டாட்டம் வடக்குமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் மன்னார் மாவட்டச் செயலக அலுவலர்கள் நலன்புரிச் சங்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டடில் மிக சிறப்பாக மன்னார் மாவட்ட செயலகத்தில் கொண்டாடப்பட்டது.
இவ் ஆடிப்பிறப்பு கொண்டாட்டம் ஆடிப் பிறப்பில் 'தமிழர் நாம் கூடிக் கொண்டாடிக் குதூகலிப்போம்' எனும் தொனிப் பொருளில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இவ் ஆடிப்பிறப்பு நிகழ்வு மன்னார் மாவட்டச் செயலக திட்டமிடல் பணிப்பாளர் க. மகேஸ்வரன் தலைமையில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் செவ்வாய் கிழமை (19) காலை 9 மணியளவில் நடைபெற்றது.
மன்னார் மாவட்ட சிரேஸ்ட கலாச்சார உத்தியோகத்திர் திரு. நித்தியானந்தன் அவர்களின் நெறியாள்கையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மன்னார் மாவட்டச் செயலாளர் திருமதி ஸ்ரான்லி டிமெல் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக நவாலியூர் சோமசுந்தரம் பிள்ளை அவர்களின் உருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செழுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து மாவட்ட கீதம் இசைக்கப்பட்டதுடன் பிரதம விருந்தினர் உரையும் அதனைத் தொடர்ந்து 'ஆடிமாதத்தின் சிறப்புப்' பற்றி மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலை ஆரம்பப் பிரிவு பகுதித் தலைவர் திரு. பாலசுப்பிரமணியம் சதீஸ் அவர்களால் நிகழ்த்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மாவட்டச் செயலக அலுவலர்களுக்கான வீட்டுத்தோட்ட பயிர்ச் செய்கைகளுக்குரிய மரக்கரி நாற்றுக்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் மன்னார் உதவி மாவட்டச் செயலாளர்கள், மன்னார் அனர்த்த முகாமைத்துவ அதிகாரி கனகரெத்தினம் திலீபன், மன்னார் சமுர்த்தி பணிப்பாளர் திரு. அலியார் உட்பட கலாச்சார உத்தியோகத்தர்கள் மாவட்டச் செயலகத்தின் பதவிநிலை உத்தியோகத்தர்கள் முசலி பிரதேச செயலாளர் திரு. சிவராஜீ மாவட்ட செயலகத்தின் பணியாளர்களும் கலந்து கொண்டு இவ் விழாவை சிறப்பித்தனர்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)