
posted 5th May 2022
இன்றைய பொருளாதாரப் பின்னடைவு என்பது எதனால் ஏற்பட்டது? அதற்கான தீர்வை கண்டுவிடாது பொருளாதாரத்தை மீண்டெழ வைக்கலாம் என ஆட்சியாளர்கள் சிந்திப்பது அபத்தமானது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணி தலைவரும் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான சபா குகதாஸ் தனது ஊடகச் செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சபா குகதாஸ் தனது ஊடகச் செய்தியில் மேலும் தெரிவித்திருப்பதாவது;
அண்மைய நாட்களில் மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஐங்க அமைச்சர் ரோஹன திசாநாயக்க ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில், வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களை நாட்டில் வந்து தொழில் பேட்டைகளை, வர்த்தக நடவடிக்கைகளை மேற் கொள்ளுமாறும், அதற்காக மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைப்புக்களின் ஊடாக அனுமதிகளை தான் பெற்றுத் தருவதாக கூறியுள்ளார். காரணம் நாட்டில் உள்ள டொலர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான முயற்சி எனவும் தெரிவித்துள்ளார்.
இராஐங்க அமைச்சரின் பிரதான இலக்கு, புலம்பெயர் தமிழர்கள் சார்ந்த முதலீட்டாளர்களையே குறிவைத்தே அறிவிப்பை விடுத்துள்ளார். நாடு முன்னோக்கி செல்ல வேண்டும் இந்த விடையத்தில் அனைவரது ஒத்துழைப்பும் அவசியம்!
ஆனால் இன்றைய பொருளாதாரப் பின்னடைவு என்பது எதனால் ஏற்பட்டது? அதற்கான தீர்வை கண்டுவிடாது பொருளாதாரத்தை மீண்டெழவைக்கலாம் என ஆட்சியாளர்கள் சிந்திப்பது அபத்தமானது. இங்கு தான் தொடர்ந்தும் அரசாங்கம் தவறிழைக்கிறது.
வெளிநாட்டில் உள்ள இலங்கையரில் 70% தமிழர்கள் என்பது உலகம் அறிந்த விடையம். இதனை மையமாக கொண்டு தான் சில மாதங்களுக்கு முன்பாக ஐனாதிபதி கோட்டாபய அவர்கள் அமெரிக்காவில் ஐக்கிய நாடுகளின் கூட்டத்திற்கு சென்ற போது தனது அரசால் தடைசெய்யப்பட்ட புலம்பெயர் தமிழர் அமைப்புக்களை இலங்கையில் முதலீடு செய்ய வருமாறு பகிரங்க அழைப்பை விடுத்தார். இதன்போதே, அரசியல் அவதானிகளுக்கு தெரியும் இலங்கை அரசாங்கம் தனது பொருளாதார இயலுமையை இழந்து விட்டது என்ற உண்மை.
இதனால்தான் தமிழர்கள் ஆகிய நாம் சொல்கின்றோம் இலங்கைத் தீவில் ஏற்பட்ட ஒட்டு மொத்த பொருளாதாரப் பின்னடைவையும் சீர் செய்யும் பலம் புலம்பெயர் தேசத்தில் வாழும் 50% தமிழ் முதலீட்டர்களிடம் உள்ளது. ஆனால் ஐனாதிபதியோ, அமைச்சர்களோ அறிவிப்பு விட்டவுடன் தமிழ் முதலீட்டாளர்கள் வருகைதரத் தயார் இல்லை.
காரணம் இலங்கைத்தீவில் தீர்வின்றித் தொடரும் இனப் பிரச்சினை, உண்மையாக வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்களின் நியாயமான அபிலாசைகள், உறுதியான, நிரந்தரமான அரசியலமைப்பின் ஊடாக வழங்கப்பட்டு இனப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வை ஆட்சியாளர்கள் கொடுத்தால் நிச்சயமாக தமிழ் முதலீட்டாளர்களினால் தேவையான டொலர்களை நாட்டிற்குள் கொண்டு வந்து நாட்டை ஐந்தாண்டுகளில் விழ்ந்த பொருளாதாரத்தில் முன்னோக்கி நகர்த்த முடியும்.
உள்நாட்டு இனப்பிர்ச்சினைக்கு தீர்வைக் கண்டு நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதா? இல்லை பூகோள பிராந்திய வல்லரசுகளிடம் சிக்கி நாட்டை தொடர்ந்து நவ குடியேற்ற வாதத்திற்கு உட்படுத்தி தொடர்ந்து பின்னடவை சந்திக்கப் போகின்றார்களா? என்பதை இலங்கை ஆட்சியாளர்களே தீர்மானிக்க வேண்டும்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)