
posted 5th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
பொதுமக்களை சித்திரவதைக்குள்ளாக்கக்கூடாது
குற்றவியல் சட்டப் புலனாய்வுகள் பொலிஸில் முறைப்பாடொன்றினைச் செய்வதன் மூலமோ அல்லது முறைப்பாடின்றியோ பொலிசார் ஆரம்பிக்கலாம். அம்மீறல்களை புலனாய்வு செய்வதன் நோக்கம் யார் யாருக்கு என்ன செய்தார் என்ற கேள்விக்கு இயன்றளவு விடையளிப்பதாகும். மீறல் சம்பவம் எத்தனை தடவைகள் இடம்பெற்றுள்ளதென்பதையும் ஒரு சம்பவத்தில் எத்தனை மீறல்கள் இடம்பெற்றுள்ளது என்பதையும் இனங்காண இந்த புலனாய்வுகள் உதவும். இப்புலனாய்வுகளின் போது சந்தேக நபருக்கோ அல்லது பாதிக்கப்பட்டவருக்கோ உள ரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ தீங்கு ஏற்படாத வண்ணம் விசாரணைகள் செய்யப்பட வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனைப் பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சித்திரவதையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவளிக்கும் சர்வதேச தினத்தையொட்டி பொலிஸ் அதிகாரிகளுக்கான விழிப்புணர்வு செயலமர்வு கடந்த செவ்வாய்க்கிழமை கல்முனை பொலிஸ் நிலையத்தில் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் தலைமையில் இடம்பெற்ற போது தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
மனித உரிமை மீறல் சம்பவம் என்பது ஆரம்பமும், முடிவும் உள்ள ஏதோவொரு நிகழ்வாகும். அது தனி நிகழ்வாக, தொடர் நிகழ்வாக பலர் இணைந்து இடம்பெறும் கூட்டு நிகழ்வாக இருக்கலாம். இதனை பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸ் நிலையங்களுக்கு முறைப்பாடு செய்கின்றபோது துரிதமான நடவடிக்கை எடுக்கப்பட்டு மேலும் மீறல்கள் ஏற்படாத வகையில் பொலிசார் செயற்படவேண்டியது அவர்களின் கடமையிலான பணியாகும். முறைப்பாடு செய்ய நிலையத்திற்கு வருபவர்களை அன்போடு ஆதரித்து வார்த்தைப் பிரயோகங்களை எவரது மனமும் புண்படாத வகையில் பாவிக்கவேண்டும். இது மனித கௌரவத்தை பாதுகாக்கும் என்பதால் சித்திரவதைக் கலாச்சாரம் இல்லாதொழிப்பதற்கு அனைவர்களும் முன் வந்து செயற்படவேண்டும் என்றார்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)