பிரத்தியேக தாதி வளாகங்கள்

பிரத்தியேக தாதி வளாகங்கள்

பிரத்தியேக தாதி வளாகங்கள்

நாட்டில் தாதியருக்கு பற்றாக்குறை நிலவுகின்ற வேளையில், அரசாங்க தாதியர் பயிற்சி கல்லூரிகளுக்கு மேலதிகமாக தரமான தனியார் தாதியர் கல்லூரிகள் செயல்படுவது வரவேற்கத்தக்க தென்றும், அதன் மூலம் தகைமை பெற்ற பலருக்கு தனியார் துறையில் தொழில் வாய்ப்புகள் வழங்கப்படுவதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்

சர்வதேச செவிலியர் (தாதியர்) கல்வி மருத்துவ வளாகத்தின் 4ஆவது பட்டமளிப்பு விழா பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அதன் நிறுவனர், திருமதி ரிமாஸா முனாப் தலைமையில் இடம்பெற்றபோது அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

இலங்கையைப் பொறுத்தவரை, பாலர் வகுப்பில் இருந்து பல்கலைக்கழகம் வரை இலவச கல்வி நடைமுறையில் இருந்து வருகின்ற போதிலும் கூட, எல்லோருக்கும் அதற்கான வாய்ப்பு இல்லாதிருக்கின்ற சூழ்நிலையில், தனியார் துறையினரும் பல்வேறு கல்வித் துறையில் பங்களிப்பு செய்வதற்கு வாய்ப்பளிக்கப்படுவது காலத்தின் தேவையாகும்.

மறைந்த பதியுத்தீன் மஹ்மூத் கல்வி அமைச்சராக பணியாற்றிய 1970களில் கொண்டுவரப்பட்ட தரப்படுத்தல் முறையின் ஊடாக உயர்கல்வி துறையில் மாற்றங்களை ஏற்படுத்த முன்வந்தபோது அது பலத்த சர்ச்சைக்குரிய விடயமாக மாறியிருந்தது .

பிற்பட்ட காலங்களிலும், குறிப்பாக வட கொழும்பு மருத்துவக் கல்லூரி, தனியார் மருத்துவ கல்லூரியாக எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஏற்படுத்தப்பட்டிருந்த நிலையில், இலங்கையில் மருத்துவக் கல்வித் துறையில் முன்னோடியாக அமைந்தது. பின்னர் அந்த மருத்துவக் கல்லூரி களனி பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது.

இப்பொழுதும் கூட நாட்டில் நான்கு தனியார் மருத்துவ கல்லூரிகளை நிறுவுவதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள சூழ்நிலையில் அதற்கு எதிர்ப்புகள் இருந்த போதிலும் கூட அது இன்றியமையாத ஒரு தேவையாக இருந்துவருவது நன்றாக உணரப்பட்டிருக்கின்றது .
தற்பொழுது நாட்டில் உயர் கல்வித் துறையில் உரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், நானும் உயர் கல்விக்கு பொறுப்பான அமைச்சராகப் பதவி வகித்த குறுகிய காலத்தில் அத்துறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள முயற்சித்திருந்தேன்.

இவ்வாறான பின்னணியில் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு சமாந்தரமாக, தாதியரைப் பயிற்றுவிக்கும் தனியார் தாதியர் பயிற்சி கல்லூரிகளும் நாட்டிற்கு அவசியமென உணரப்பட்டிருக்கின்றது.

குறிப்பாக இந்த சர்வதேச தாதியர் கல்வி மருத்துவ வளாகம் தமிழ் மொழி மூலம் சிரமங்களுக்கு மத்தியில் பாடநெறியை பயிற்சியுடன் வழங்கி வருவது சவாலுக்குரிய விடயமாக இருந்தபோதிலும், அதன் மூலம் தாதியராக அரசாங்கத்தின் ஊடாக பயிலக் கூடிய வாய்ப்பற்றவர்கள் அங்கு கற்றுத் தேறி, தனியார் மருத்துவமனைகளில் வேலை வாய்ப்புகளைப் பெறக்கூடிய சூழ்நிலை உருவாகி இருக்கிறது.

தமிழ் மொழி மூலம் தாதியாக கல்வி கற்றுத் தேர்வது என்பதும் அதற்கான பாடநெறிகளை தமிழ் மொழி மூலம் ஒழுங்குபடுத்துவது என்பது எவ்வளவு சிரமமான விடயமாக இருந்தாலும் அதை இலகுபடுத்தி உங்கள் எல்லோருக்கும் தமிழ் மொழி மூலம் தாதியராக வெளிவருகின்ற வாய்ப்பை இந்தக் கல்லூரி உங்களுக்கு ஏற்படுத்தித் தந்திருக்கின்றது. இது , பின்தங்கிய பிரதேசங்களிலிருந்து வருகின்ற மாணவ, மாணவிகளுக்கும் ஒத்தாசையாக அமைய வேண்டும்.

இந்த கல்லூரி மூலம் பட்டம் பெற்றிருகின்ற நீங்கள் தெரிவு செய்துள்ள இந்த தொழில் முயற்சியில் முன்னேறி, மேற்படிப்பையும் மேற்கொண்டு நாட்டிற்கு சிறந்த சேவையாற்ற முன்வர வேண்டும் என்றார்.

இந்நிகழ்வில் கண் மருத்துவ நிபுணர் அல் ஆலிமா மரீனா தாஹா ரிபாய், பேராசிரியர்களான பிரசன்ன பிரேமதாச, விஜயகுணவர்தன டாக்டர் பிரியா சம்மானி, சென்னை நேசம் உடல் நல விஞ்ஞான கல்லூரி தலைவர் கே. எஸ். எம். யூசுப், சென்னை தொழிலதிபர் ஹசன் அலால்தீன் ஆகியோர் உட்பட பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

பிரத்தியேக தாதி வளாகங்கள்

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)