பிரதம தபாலதிபருக்கு பிரிவுபசாரம்

“நேர முகாமைத்துவமிக்க, ஆளுமையுடன் கூடிய சிறந்த நிருவாகியாகவும், சக தொழிலாளர் உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதில் வல்லமைமிக்க தொழிற்சங்கத் தலைவராகவும், பிரதம தபாலதிபர் யூ.எல்.எம். பைஸர் திகழ்ந்தார்”

இவ்வாறு, நிந்தவூர் பிரதம தபால் அதிபராக நான்கு வருடங்கள் சிறப்புறக் கடமையாற்றி, அக்கரைப்பற்று அஞ்சல் அத்தியட்சகர் அலுவலகத்தின் பிரதம இலிகிதராக இடமாற்றம் பெற்றுள்ள யூ.எல்.எம். பைஸருக்கு நிந்தவூர் பிரதம தபாலகத்தில் அளிக்கப்பட்ட பிரிவுபசார நிகழ்வுக்கு தலைமைதாங்கி உரையாற்றிய உதவி தபாலதிபர் எம்.ஜே.எம். சல்மான் கூறினார்.

நிகழ்வில் புதிய தபாலதிபராகப் பொறுப்பேற்றுள்ள கே.எம்.ஏ. காதர் வரவேற்கப்பட்டதுடன், பிரிந்து செல்லும் பிரதம தபாலதிபர் யூ.எல்.எம். பைஸருக்கு பொன்னாடை போர்த்தியும், வாழ்த்துப் பத்திரம் நினைவுச் சின்னங்கள் வழங்கியும் கௌரவிக்கப்பட்டார்.

அத்துடன் உப அஞ்சல் அதிபர் க. பாத்திமா றிப்கா “தெற்கே செல்லும் தென்றல்” என்ற தலைப்பில் வாழ்த்துக் கவிதை ஒன்றையும் நிகழ்வில் வாசித்து கையளித்ததுடன், உதவி தபாலதிபர் எஸ்.எல். காலித், உப அஞ்சல் அதிபர்களான ஏ.ஏ. ஹாதி, எம்.சி. முஸம்மில், ஏ.எம். றீனா, ஏ. ஹாறூன் உட்பட பலரும் அன்னாரின் சேவையை விதந்துபாராட்டியும் உரையாற்றினர்.

உதவி தபாலதிபர் சல்மான் தொடர்ந்து உரையாற்றுகையில்,

“மனித நேயமிக்க சிறந்த வழிகாட்டியாகவும் திழ்ந்த தபாலதிபர் பைஸர், தபாலக சேவைகள் பொது மக்களுக்கு சிறப்புற அமைய வேண்டுமென்பதில் பெரும் கரிசனை கொண்ட வராகத் திகழ்ந்ததுடன், தபாலகம் தொடர்பிலான பல முக்கிய பௌதீக வளப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளையும் ஏற்படுத்தினார்.

அஞ்சல், தொலைத் தொடர்புகள் உத்தியோகத்தர் சங்கத்தை ஸ்தாபித்து அதன் தலைமைப் பொறுப்பையும் ஏற்று பரவலான தொழிற் சங்கப் பணிகளையும் வெற்றிகரமாக முன்னெடுத்து வரும் செயல் வீரர் அவராவார்” என்றார்.

பிரதம தபாலதிபர் யூ.எல்.எம். பைஸர் நன்றி தெரிவித்து உரையாற்றுகையில்,

நாம் எதிர்பாராத சிறப்புடன் இந்த பிரிவுசார நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமைக்கு நன்றியும், மகிழ்ச்சியும் தெரிவித்ததுடன், இத்தகைய நிகழ்வு சேவைக்கான மதிப்பீடு எனவும் குறிப்பிட்டார்.

தமது சேவைக் காலத்தில் முழு ஒத்துழைப்பு நல்கிய உப அஞ்சல் அதிபர்கள், பிரதம தபாலக உதவி தபாலதிபர்கள், மற்றும் ஊழியர்களுக்கும் நன்றி பகர்ந்த அவர், நாம் கடமைகளை நேர்மையுடன் செய்து, பொறுப்புணர்வுடன் செயற்பட்டால் எவருக்கும் அச்சப்படத் தேவையில்லை எனவும் கூறினார்.

சிரேஷ்ட ஊடகவியலாளரும், சமூக செயற்பாட்டாளருமான கலாபூஷணம் ஏ.எல்.எம். சலீமும் அன்னாரின் சேவைகளைப்பாராட்டி நிகழ்வில் உரையாற்றினார்.

பிரதம தபாலதிபருக்கு பிரிவுபசாரம்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)