
posted 5th May 2022
யாழ்.கடற்பரப்பில் புதன்கிழமை அதிகாலை 123 மில்லியன் ரூபாய் பெறுமதியான சுமார் 492 கிலோ கிராம் கேரளா கஞ்சாவை கடற்படையினர் கைப்பற்றியுள்ளதுடன், சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
யாழ்.கடற்பகுதியில் கடற்படையினர் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த படகொன்றை வழிமறித்து சோதனையிட்டனர்.
இதன்போது படகில் 15 சாக்குகளில் 225 பொதிகளில் சுமார் 492 கிலோ கிராம் கேரளா கஞ்சாவினை மீட்டுள்ளனர். அதனை அடுத்து படகோட்டியான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞனையும் கைது செய்தனர்.
மீட்கப்பட்ட கஞ்சா மற்றும் படகினையும், கைது செய்யப்பட்ட இளைஞனையும் சட்ட நடவடிக்கைக்காக பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், சந்தேகநபரையும் சான்று பொருட்களையும் நீதிமன்றில் பாரப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)