
posted 23rd July 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
பலவகைச் செய்தித் துணுக்குகள்
போதைப்பொருளுடன் ஒருவர் துன்னாலையில் வைத்து கைது!
(எஸ் தில்லைநாதன்)
துன்னாலை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
உடுப்பிட்டி வடக்கு கம்பர் மலை பகுதியைச் சேர்ந்த 43 வயதானவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.
கைதானவரிடமிருந்து ஒரு கிராம் 960 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் மீட்கப்பட்டது.
விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்ட குறித்த நபர் நெல்லியடி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
சந்தேக நபரை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ரயிலுடன் மோதுண்டு வயோதிபர் மரணம்
(எஸ் தில்லைநாதன்)
தென்மராட்சி, மீசாலை - புத்தூர் சந்திக்கு அருகாமையில் ரயிலுடன் மோதுண்டு வயோதிபர் ஒருவர் உயிரிழந்தார்.
மீசாலை கிழக்கைச் சேர்ந்த 68 வயதுடைய செல்லையா பரமசாமி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கொழும்பு - கோட்டையில் இருந்து காங்கேசன்துறை நோக்கிப் பயணித்த ரயிலுடன் மோதுண்டே குறித்த நபர் உயிரிழந்தார். மீசாலை ரயில் நிலையத்துக்கு அருகில் நேற்று (22) சனி முற்பகல் 11.30 மணியளவில் ரயில் கடவையை அண்டி இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வயோதிபர் மோட்டார் சைக்கிளில் ரயில் கடவையைக் கடக்க முற்பட்டபோதே விபத்தில் சிக்கியுள்ளார்.
வவுனியா துப்பாக்கிச் சூடு; சந்தேக நபர் நேற்று கைது
(எஸ் தில்லைநாதன்)
வவுனியா – நெடுங்கேணி பொலிஸ் பிரிவில் பட்டிக்குடியிருப்பு கிராமத்தில் ஒருவரை சுட்டுக் கொன்ற சந்தேகநபர் நேற்று சனிகாலை கைது செய்யப்பட்டதாக நெடுங்கேணி பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று முன்தினம் வெள்ளிமாலை அழகையா மகேஸ்வரன் என்பவரே இடியன் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
விவசாயியான அவர், தனது தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது, பக்கத்து தோட்டத்தில் நின்ற ஒருவருடன் ஏற்பட்ட தகராறையடுத்து இந்த கொலை நடந்ததாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரும், 39 வயதான சந்தேக நபரும் முன்னாள் போராளி எனக் கூறப்படுகிறது.
குறித்த சந்தேக நபர் மீது சுமார் 5 வரையான வழக்குகள் உள்ளன.
கடந்த வாரம் சட்டவிரோதமாக இடியன் துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
20ஆம் திகதி வவுனியா நீதிமன்றத்தால் அவருக்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டிருந்தது.
அன்றைய தினமே தண்டப்பணத்தைச் செலுத்திவிட்டு வந்து, மற்றொரு இடியன் துப்பாக்கியை பெற்று அதன் மூலமே சூடு நடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
உயிரிழந்தார்
(ஏ.எல்.எம்.சலீம்)
மட்டக்களப்பு போதனா மருத்துவமனை வளாகத்தில் இடம்பெற்ற விபத்தில் சிகிச்சை பெற்று வந்தவர் உயிரிழந்தார்.
இந்த விபத்தில் ஆரையம்பதி பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான மட்டக்களப்பு போதனா மருத்துவமனையின் சுகாதார உதவியாளரான தட்சணாமூர்த்தி புகழேந்தி (40) என்பவரே உயிரிழந்தார்.
மருத்துவமனை வைத்தியசாலை வளாகத்தில் உள்ள கட்டடத்தின் இரண்டாம் மாடிக்கு சென்றபோது விழுந்து படுகாயமடைந்தார்.
அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.
பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான மாவட்ட மட்ட முகாமைத்துவப்போட்டி முடிவுகள்
எஸ் தில்லைநாதன்
அண்மையில் நடைபெற்று முடிந்த யாழ்மாவட்ட பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கிடையிலான மாவட்ட மட்ட முகாமைத்துவப்போட்டி முடிவுகள் வெளியாகியுள்ளன.
முதல் 10 நிலையிலுள்ள 11 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடைய பெயர் விபரங்கள் அடங்கிய பட்டியல் யாழ்மாவட்ட அரசாங்க அதிபர் அ. சிவபாலசுந்தரனால் யாழ்மாவட்ட சகல பிரதேச செயலர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
- முதலாவது இடம் சுவாமிநாதன் சச்சிதானந்தன் காரைநகர் பிரதேசசெயலகம் , காரைநகர் தெற்கு J/44 கி.அ. பிரிவு
- இரண்டாவது இடம் துஷ்யந்தன் கோகிலா சண்டிலிப்பாய் பிரதேசசெயலகம், சண்டிலிப்பாய் மத்தி J/142 கி.அ.பிரிவு
- மூன்றாவது இடம் யோகுதாஸன் சுதாகர் மருதங்கேணி பிரதேசசெயலகம் , நாகர்கோவில் கிழக்கு J/423 கி.அ.பிரிவு
- நான்காவது இடம் எவ்.ஏ.சீ. ஆதிரை வேலணை பிரதேசசெயலகம் மண்கும்பான் J/11 கி.அ.பிரிவு
- ஐந்தாவது இடம் சுபாஜினி ஜெயதாஸ் பருத்தித்துறை பிரதேசசெயலகம், கெருடாவில் வடக்கு J/386 கி.அ.பிரிவு
- ஆறாவது இடம் வரதராஜன் இந்துமதி யாழ்ப்பாணம் பிரதேசசெயலகம் , மருதடி J/77 கி.அ.பிரிவு
- ஏழாவது இடம் பொன்னையா தயாளன் ஊர்காவற்றுறை பிரதேச செயலகம், அனலைதீவு தெற்கு J/38 கி.அ. பிரிவு
- எட்டாவது இடம் சந்தானலட்சுமி சுதாகரன் தெல்லிப்பளை பிரதேசசெயலகம், பலாலி தெற்கு J/252 கி.அ.பிரிவு
- ஒன்பதாவது இடம் சுபாகரன் விஜிதா சண்டிலிப்பாய் பிரதேசசெயலகம், சண்டிலிப்பாய் மேற்பட்ட J/ 143 கி.அ.பிரிவு
- பத்தாவது இடம் பேரின்பநாதன் கௌரி உடுவில் பிரதேச செயலகம் , கந்தரோடை J/200 கி.அ. பிரிவு மற்றும் இரத்தினசிங்கம் கணேசன் யாழ்ப்பாணம் பிரதேச செயலகம், நெடுங்குளம் J/61 கி.அ. பிரிவு என குறிப்பிடப்பட்டுள்ளது

காத்தான்குடி பொலிஸாரால் கைது
(ஏ.எல்.எம்.சலீம்)
அம்பாறை மாவட்டம் நிந்தவூர் மற்றும் மட்டக்களப்பு மாவட்டம் கல்லடி பகுதிகளில் திருடப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பொருட்களுடன் சந்தேகநபர்கள் இருவரை கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
இதன்படி, நிந்தவூரில் கடந்த 18ஆம் திகதி திருடப்பட்ட மோட்டார் சைக்கிளுடன் 32 வயதுடைய ஒருவரையும், கல்லடியில் திருடப்பட்ட மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் காத்தான்குடி ஊர் வீதியில் 19 வயதுடைய மற்ற சந்தேக நபரையும் காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸாரின் சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். இருவரிடமிருந்து சுமார் 13 இலட்சம் ரூபாய் பெறுமதியான 2 மோட்டார் சைக்கிள்கள், ஒரு மடிக்கணினி மற்றும் பொறுமதியான பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
இதன்போது, குறித்த சந்தேக நபர்களில் ஒருவர் ஆரையம்பதியையும், மற்றொருவர் காத்தான்குடியையும் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)