
posted 12th January 2023
விஜய் - அஜித் நடித்த திரைப்படங்கள் ஒரே திரை அரங்கில்
பருத்தித்துறையில் நேற்று (புதன்) திரையிட்ட விஜய் நடித்த வாரிசு திரைப்படத்தை விஜய் ரசிகர்கள் வரவேற்று திரை அரங்கின் முகப்பு பக்கத்தில் மாலை தோரணங்கள் கட்டி அரங்க வாசலில் பொங்கல் பொங்கி பொங்கலை ரசிகர்களுக்கு வழங்கி மகிழ்ச்சியில் திளைத்தனர்.
ஒரே இடத்தில் அமைந்துள்ள இரு திரை அரங்குகளில் விஜய் நடித்த வாரிசு, அஜித் நடித்த துணிவு ஆகிய படங்கள் திரையிடப்பட்டன. இதில் ஒரு திரை அரங்கு பழுதடைந்தால் ஒரே திரை அரங்கில் இரு படங்களும் நேற்று முழுவதும் மாறி மாறி திரையிடப்பட்டன.
ரசிகர்களின் வற்புறுத்தலால் அதிகாலை 4 மணிக்கு விஜயின் வாரிசு திரையிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து 10 மணிக்காட்சியாக அஜித்தின் துணிவு திரை இடப்பட்டது. வாரிசு திரைப்படத்துக்கு வி.ஜ.பி பார்வையாளர்களுக்கான காட்சிக்காக ஏற்கனவே இத்திரை அரங்கில் டிக்கட் டுக்கள் விற்பனையாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
பழைய மாணவர்களால் ஒரு பேருந்து நன்கொடை
வடமராட்சி நெல்லியடி தேசிய பாடசாலையான மத்திய கல்லூரியின் பயன்பாட்டிற்காக லண்டன் பழைய மாணவர்களால் பேருந்து ஒன்று புதன்கிழமை (11) காலை வழங்கப்பட்டுள்ளது.
நெல்லியடி மத்திய கல்லூரியின் லண்டன் கிளை பழைய மாணவர்களால் 5.8 மில்லியன் ரூபா நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட பேருந்து பாடசாலை அதிபர் கிருஸ்ணகுமாரிடம் கையளிக்கப்பட்டது.
இதற்கு முன்னதாக ஆலயத்தில் பூசைகள் இடம் பெற்று அதனைத் தொடர்ந்து பாடசாலையில் வைத்து பேருந்து உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
கணவன், மனைவியை வெட்டியவர் கைது
கணவன், மனைவி ஆகிய இருவரையும் வெட்டிக் காயப்படுத்தி விட்டு தலைமறைவாக இருந்தவர் நேற்று (11) கோப்பாய் பொலிஸார் கைது செய்தனர்.
இருபாலை மடத்தடி பகுதியில் கடந்த டிசெம்பர் 20ஆம் திகதி வீடு ஒன்றுக்குள் புகுந்தவர் அங்கிருந்த கணவன், மனைவியை வெட்டிக் காயப்படுத்தி விட்டு தலைமறைவாகியிருந்தார்.
வலைப்பாடு பகுதியில் அவர் தலைமறைவாக இருந்த நிலையில் நேற்று அவர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அத்துடன், இந்தத் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வாளும் சந்தேகநபரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபரை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
பதில் முதல்வராக துரைராசா ஈசன்
யாழ்ப்பாணம் மாநகர சபையின் பதில் முதல்வராக துரைராசா ஈசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வராக பதவி வகித்த வி. மணிவண்ணன் கடந்த முதலாம் திகதி பதவி விலகினார். இதையடுத்து அவரின் பதவி வறிதானது. இதையடுத்து எதிர்வரும், 19ஆம் திகதி முதல்வர் தெரிவு நடைபெறவுள்ளது.
இந்நிலையில், யாழ். மாநகர சபையின் பணிகளை தொடர்ச்சியாக முன்னெடுக்க வசதியாக பிரதி முதல்வர் து. ஈசன் பதில் முதல்வராக உள்ளூராட்சி ஆணையாளரால் நியமிக்கப்பட்டுள்ளார்.
மாட்டுக் களவில் 24 வயது நபர் கைது
கோப்பாய் பொலிஸ் பிரிவில் நீண்ட காலமாக மாடுகளை திருடி வந்தவர் என்று கூறப்படும் சந்தேக நபரை பொலிஸார் நேற்று (11) புதன்கிழமை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர், கல்வியங்காடு, இருபாலை பகுதிகளில் நீண்டகாலமாக மாடுகளை திருடி விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்றைய தினம் இருபாலை பகுதியில் மாடு ஒன்றைத் திருடி அதனை விற்பனை செய்ய முயன்ற போது மாட்டு உரிமையாளர் வழங்கிய தகவலுக்கு அமைய பொலிஸார் அவரைக் கைது செய்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்டவர் கல்வியங்காடு பகுதியைச் சேர்ந்த 24 வயது நபர் என்று தெரிய வருகின்றது. கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் எடுத்துள்ளனர்.

செயலிழக்கப்பட்ட பழைய மோட்டார் குண்டுகள்
பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாகர்கோவில் பிரதேசத்திலுள்ள யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்திற்கும் முன்னரங்காக இருந்த தடுப்பு அணைப் பகுதியில் களப்புக்கு அருகில் பழைய மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
பருத்தித்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து பருத்தித்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமை பொலிஸ் பரிசோதகர் பிரியந்த அமரசிங்கவால் நீதிமன்றில் அறிக்கையிடப்பட்டு மன்றின் கட்டளைப்படி யாழ்ப்பாணம் விசேட அதிரடிப் படையினரின் வெடிபொருட்கள் செயலிழப்புப் பிரிவு ஊடாக அவை செயலிழக்க வைக்கப்பட்டன.
ஆமையை இறைச்சிக்காக வெட்டியவர் கைது
அனுமதி பத்திரம் இன்றி சட்டவிரோதமாக கடல் ஆமையை பிடித்து கொலை செய்து இறைச்சியாக்கி உடைமையில் வைத்திருந்த குற்றத்துக்காக சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
ஊர்காவற்துறை பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
ஊர்காவல்துறை பொலிஸ் பிரிவைச் சேர்ந்த கரம்பன் பகுதியில் வசிக்கும் 52 வயதுடைய சந்தேகநபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
அதிரடி நடவடிக்கையில் யாழ். மாநகர சபை
யாழ். மாநகர சபைக்கு உட்பட்ட பகுதியில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கையின் போது 09 குடியிருப்பாளர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், 111 பேருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு சிவப்பு அறிவித்தல் கொடுக்கப்பட்டுள்ளதாக மாநகர சுகாதாரப் பிரிவு அறிவித்துள்ளது.
பருவ மழையை அடுத்து யாழ்ப்பாணத்தில் டெங்கு நுளம்பின் அதிகரிப்பு காரணமாக டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரித்தது.
கடந்த ஆண்டில் 09 பேர் டெங்குக் காய்ச்சலினால் யாழ்ப்பாணத்தில் உயிரிழந்திருந்தனர்.
இந்நிலையில் யாழ்.மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த சில தினங்களாக முன்னெடுக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு நடவடிக்கையின்போது, ஆயிரத்து 505 குடியிருப்புக்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
அதன்போது 74 குடியிருப்புக்களில் டெங்கு குடம்பிகள் காணப்பட்டன. அதில் 65 குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், 09 குடியிருப்பாளர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
அதேவேளை, டெங்கு நுளம்பு பரவுவதற்கு ஏதுவான சூழல் காணப்பட்ட 111 குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு அவர்களுக்கு சிவப்பு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.
குடியையே கெடுத்த மது
மதுபோதையில் வீட்டுக்கு வந்து , மனைவியுடன் முரண்பட்டவர் , குடியிருக்கும் வீட்டைத் தீ வைத்து கொளுத்தியுள்ளார். அச்சுவேலி பாரதி வீதியில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் வீடு பகுதியளவில் எரிந்துள்ளது. வீட்டுக்கு தீ வைத்த குற்றச்சாட்டில் குடும்பஸ்தர் அச்சுவேலிப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.
குறித்த நபர் நிறை போதையில் வீட்டுக்கு வந்து மனைவி ,பிள்ளைகளுடன் சண்டையிட்டு அவர்களை வீட்டின் வெளியே துரத்தி வீட்டை பூட்டி ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொருக்கியுள்ளார். அதன் பின்னர் வீட்டுக்கு தீ வைத்துள்ளார். வீட்டில் தீ பரவியதை அடுத்து அயலவர்கள் ஒன்று கூடி பலத்த சிரமத்தின் மத்தியில் தீயை அணைத்தனர். இருந்தபோதிலும் வீடு பகுதியளவில் எரிந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் வீட்டுக்கு தீ வைத்த குற்றச்சாட்டில் குடும்பஸ்தரை கைது செய்தனர்.
தாலிக்கொடியிலும் கலப்படம்
தங்கத்தக்குப் பதிலாக பித்தளையில் தாலிக்கொடி செய்து கொடுத்து மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒருவர் காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2016ஆம் ஆண்டு தாலியும் கொடியும் என்பவற்றை ஐந்தரை பவுணில் செய்தவற்கு சந்தேகநபரிடம் பணம் கொடுத்து தாலி மற்றும் கொடியை செய்து பெற்றுக்கொண்டுள்ளனர்.
7 வருடங்களின் பின்னர் கடந்த சில தினங்களுக்கு முன்னரே தமது தாலி மற்றும் கொடி என்பவை தங்கம் அல்ல பித்தளை என்பதை கண்டறிந்துள்ளனர்.
அது தொடர்பில் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் சந்தேக நபர் தலைமறைவாகி இருந்தார்.
இந்நிலையில் காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் தலைமறைவாகி இருந்த சந்தேக நபரை கைது செய்து, மேலதிக விசாரணைக்காக தெல்லிப்பழை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)