
posted 30th November 2023

காங்கேசன் துறை முகத்தை பார்வையிட்ட இலங்கைக்கான இந்தியா தூதர்
(எஸ் தில்லைநாதன்)
யாழ்ப்பாணம் வருகை தந்த இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பால்கே புதன் கிழமை (29) காங்கேசன் துறைமுகப் பகுதிகளை பார்வையிட்டார்.
காங்கேசன் துறை நாகப்பட்டினம் கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அதன் கட்டுமானங்கள் மற்றும் தேவைகள் குறித்து இதன் போது யாழ் இந்திய துணை தூதரக அதிகாரிகள் தூதுவருக்கு விளக்கமளித்தனர்.
பளை விபத்தில் இளைஞர் பலி
(எஸ் தில்லைநாதன்)
இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் இருவர் காயங்களுக்கு உள்ளாகினர்.
கிளிநொச்சி - பளை - புலோப்பளை பகுதியில் நேற்று (29) புதன்கிழமை மதியம் இந்த விபத்து இடம்பெற்றது. இதில், பளை நகரப் பகுதியை சேர்ந்த குணம் கணேசன் (வயது - 20) என்பவரே உயிரிழந்தார்.
பளை நகரப் பகுதியில் இருந்து புலோப்பளை நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் புலோப்பளையில் இருந்து பளை நகரம் நோக்கி வந்த மோட்டார் சைக்கிளுமே நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளாகின.
இதில், சம்பவ இடத்திலேயே இளைஞர் உயிரிழந்தார். மற்றைய மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் காயங்களுக்கு உள்ளான நிலையில் பளை பிரதேச மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

போராளிகளை ஒத்த ஆடை - ஆறு பேரிடம் வாக்குமூலம்
(எஸ் தில்லைநாதன்)
மாவீரர் தின நிகழ்வில் புலிகளின் பெண் போராளிகளின் ஆடைகளை ஒத்த உடையை சிறுவர்கள் அணிந்து வந்தனர் என்று கூறப்படும் சம்பவம் தொடர்பில் ஆறு பேரிடம் பொலிஸார் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர்.
கோப்பாய் துயிலும் இல்லம் முன்பாக மாவீரர் நாளான கடந்த திங்கட்கிழமை நினைவேந்தல் நடைபெற்றது. இதில், விடுதலை புலிகளின் பெண் போராளிகளின் உடைகளை ஒத்த ஆடையை சிறார் சிலர் அணிந்திருந்தனர் என்றும் அது தொடர்பான ஒளிப்படங்கள் சமூகவலைதளங்களிலும் பரவின.
இந்த விடயம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். இந்த நிலையில், பெண் போராளிகளின் உடைகளை ஒத்த ஆடையை அணிந்த சிறுவர்களின் பெற்றோரை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.
அவர்களிடம் பெறப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுப்பதாக தெரிவித்த பொலிஸார் இதுவரை எவரையும் இதுவரை கைது செய்யவில்லை என்றும் கூறினர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)