
posted 28th March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
நிந்தவூர் பிரதேச சபை நிறைவேற்று அதிகாரி
உள்ளுராட்சி சபைகளின் நீடிக்கப்பட்ட பதவிக்காலம் நிறைவு பெற்று சபைகள் கலைந்ததையடுத்து, தற்போது பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளின் கீழ் சபைகளின் நிருவாகம் கொண்டு வரப்பட்டுள்ளது.
குறிப்பாக உள்ளுராட்சி சபைகளின் ஆணையாளர்கள், மற்றும் செயலாளர்களின் நிருவாகப் பொறுப்பில் சபைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதன்படி அம்பாறை மாவட்டத்திலும், கிழக்கிலும் முதன்மை நிலையிலுள்ள உள்ளுராட்சி சபையான நிந்தவூர் பிரதேச சபைக்கு, சபையின் செயலாளராகக் கடமையாற்றிவரும் திருமதி.ரி. பரமேஸ்வரன் பொறுப்பு வாய்ந்த நிறைவேற்று அதிகாரியாகத் தெரிவு செய்யப்பட்டு தமது கடமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார்.
முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளார் பிறந்த மண்ணானகாரை தீவைச் சேர்ந்த திருமதி.ரி. பரமேஸ்வரன் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் நிந்தவூர் பிரதேச சபையின் செயலாளராக கடமையேற்றதுடன், நிந்தவூர்ப் பிரதேச மக்களின் நல்லபிமானத்தையும், வரவேற்பையும் பெற்ற ஒருவராகத் திகழ்வதுடன், சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் மட்டுமன்றி, ஏற்கனவே சபையிலிருந்த மக்கள் பிரதி நிதிகளான உறுப்பினர்களின் நல்லபிமானத்தை வென்ற ஒருவராகவும் திகழ்ந்து வருகின்றார்.
உள்ளுராட்சி சேவையில் 15 வருட கால அனுபவமிக்க செயலாளர் ரி. பரமேஸ்வரன் நிந்தவூர் பிரதேச சபையின் நிருவாகப் பொறுப்பை (நிறைவேற்று அதிகாரியாக) ஏற்றுக்கொண்டுள்ளமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில்,
சபை நிருவாகத்தை சிறப்புற முன்கொண்டு செல்லும் வகையில் கிழக்கு மாகாண ஆளுநர் மக்கள் நலன் சார்ந்து ஆக்க பூர்வமான ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் தந்துள்ளதாகத் தெரிவித்தார்.
சபையை நாடிவரும் பொது மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்கவும், சபை நடவடிக்கைகளில் பிரதேச மக்களின் நலன்சார்ந்த விடயங்களை முன்னுரிமைப்படுத்தவும், அதேபோன்று சபை ஆட்சிப் பொறுப்பிலிருந்த உறுப்பினர்களால் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டுள்ள வரவு செலவுத்திட்டத்தில் (பஜட்) முன்மொழியப்பட்டுள்ள மக்களுக்கான வேலைத் திட்டங்களை நிறைவேற்றவும் தம்மால் முடிந்தவரை எதிர்காலத்தில் செயற்படவுள்ளதாகவும் மேலும் கருத்து தெரிவித்தார்.
தாம் முன்னெடுக்கும் இத்தகைய மக்கள் நலன்சார் செயற்திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு சபை உத்தியோகத்தர்கள் ஊழியர்களின் அர்ப்பணிப்பான சேவையும் கிடைக்குமென நம்பிக்கை வெளியிட்ட செயலாளர் திருமதி பரமேஸ்வரன், நிந்தவூர் பிரதேச பொது மக்கள் ஒத்துழைப்பையும், ஆதரவையும் பெரிதும் எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.
இதேவேளை நிந்தவூர் பிரதேசதைச் சேர்ந்த பல்வேறு பொது நல அமைப்புகள் உட்பட பிரதேச முக்கியஸ்தர்களும் செயலாளர் திருமதி பரமேஸ்வரனுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)