
posted 30th May 2022
வடக்கு-கிழக்கில் இருந்த தொழிற்சாலைகளை நிர்மூலமாக்கிய ஆட்சியாளர்கள், தெற்கிலாவது தொழிற்சாலைகளை நிர்மாணித்துள்ளார்களா என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க. பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று அவர் விடுத்த விசேட அறிக்கை ஒன்றிலேயே மேற்கண்டவாறு கேள்வி எழுப்பிய அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு;
தமிழர்களுக்கு எத்தகைய உரிமைகளையும் கொடுக்க மாட்டேன் என்று தெரிவித்து அதற்காகவே மக்கள் ஆணையைப் பெற்றுக்கொண்டதாக அன்றைய ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தன தெரிவித்ததுடன் இன்றளவும் தொடரும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையையும் தோற்றுவித்தார். இலங்கையின் ஆட்சியாளர்கள் அனைவரும் தமிழின விரோதப் போக்கை முதலீடாக வைத்தே ஆட்சி செய்து வந்துள்ளனர். இதன் பெறுபேற்றை இன்று நாடு அனுபவிக்கிறது.
தமிழ் தேசிய இன விடுதலைக்கான ஆயுதப் போராட்டக் களத்தையும் அதன் அவசியத்தையும் உருவாக்கியதும் ஜெயவர்தனவே. அதன் பின்னர் இந்தப் போராட்டத்தை அடக்குவதற்காக, இஸ்ரேலிய மொசாட்டின் ஆலோசனைகளைப் பெற்று, தமிழினத்திற்கு எதிராக யுத்தத்தைப் பிரகடனப்படுத்தியவரும் அவரே. தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையே பிளவுகளை ஏற்படுத்தி, தமிழ், முஸ்லிம் தரப்புகளை மோதவிடக்கூடிய அளவிற்கு மொசாட்டின் ஆலோசனைகளைப் பெற்று செயல்படுத்தி வந்தது மாத்திரமல்லாமல், யுத்த தளபாடங்களைப் பெற்றுக்கொள்வதற்கான நிதியை சேகரிப்பதற்கு மகாவலி திட்டத்தை காரணம் காட்டி பல மில்லியன் பெறுமதியான ஆயுத தளபாடங்களை கொள்முதல் செய்தது மட்டுமன்றி, இதுவரை மகாவலி நீரே செல்லாத முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி ‘எல்’ வலயம் என்பதை உருவாக்கி, அங்கு வசித்துவந்த தமிழ் மக்களை விரட்டியடித்து, மணலாறு என்ற தமிழ்ப் பிரதேசத்தை வெலிஓயா என்ற சிங்களப் பெயருக்கு மாற்றியவரும் அவரே.
முப்பதுவருடகால நீண்ட யுத்தத்திற்கு அடித்தளமிட்டு, வடக்கில் மகாவலி அபிவிருத்தி திட்டம் என்ற பெயரில் பொய்யான திட்டத்தை முன்மொழிந்து, சர்வதேச சமூகத்தின் கண்களில் மண்ணைத்தூவி கடன்களைப் பெற்று, அவர் ஆரம்பித்த யுத்தத்தை அவருக்குப் பின்வந்த அனைத்து ஜனாதிபதிகளும் பின்பற்றினர். அனைவருக்கும் ஒரு படி மேலே சென்று மகிந்த ராஜபக்ஷ தமிழர்களுக்கான உரிமைகளைத் தாம் தருவதற்குத் தயாராக இருப்பதாகவும் அதற்குப் பயங்கரவாதம் தடையாக இருப்பதாகவும் கூறி சர்வதேச சமூகத்தைப் பிழையாக வழிநடத்தி அளவு கணக்கின்றி கடன்களையும் நிதியுதவிகளையும் ஆயுதங்களையும் பெற்று, 2009இல் முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்படுவதற்கும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் காணாமல் ஆக்கப்படுவதற்கும் பல பில்லியன் ரூபாய்சொத்திழப்பிற்கும் காரணமாக அமைந்தார்.
வடக்கு - கிழக்கை அபிவிருத்தி செய்வதற்கான அதிகாரங்களைத் தமிழ் மக்கள் கேட்டபோது, அதனை குண்டுவீசி அழித்தீர்கள். அங்கிருந்த ஒருசில தொழிற்சாலைகளையும் குண்டுவீசி நிர்மூலமாக்கினீர்கள்.
வடக்கு - கிழக்கில்தான் இந்தகதி என்றால் நீங்கள் காலாதிகாலமாக ஆட்சி செய்யும் தென்பகுதியில் எத்தனை தொழிற்சாலைகளை உருவாக்கியிருக்கிறீர்கள்? அங்கும்கூட இன்று பாணுக்கும், பருப்புக்கும், எரிபொருளுக்கும், எரிவாயுவுக்கும் மக்கள் நாளாந்தம் வரிசையில் நிற்கும் நிலையைத்தானே உருவாக்கியிருக்கிறீர்கள்.
குரங்குக்குக் கூடு கட்டத் தெரியாது. ஆனால், அதற்கு பறவைகள் கட்டிய கூட்டை சின்னாபின்னமாக்கத் தெரியும். அதைப் போலவே இலங்கையை சீர்படுத்துவதற்குப் பதிலாக அதனைச் சின்னாபின்னப் படுத்தும் வேலையையே எமது ஆட்சியாளர்கள் அனைவரும் செய்து வந்திருக்கிறார்கள். ஆகவே, இன்றைய இந்த நிலைக்கு ஜே. ஆரிலிருந்து இன்றுவரை ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் அனைவரும் பொறுப்புக்கூற வேண்டியவர்கள்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையார் தேசிய இனப்பிரச்னை தீராமல் நாடு அபிவிருத்தி அடையாது என்று கூறியுள்ளார். அதனை வரவேற்பது போன்று பிரதமர் ரணிலும் புலம்பெயர் உறவுகளின் முதலீட்டை எதிர்பார்த்திருப்பதாகக் கூறுகிறார்.
ஆனால் தமிழர்கள் முன்புபோல் ஏமாறத் தயாரில்லை. இதய சுத்தியுடன் தேசிய இனப்பிரச்னைத் தீர்விற்கான முன்மொழிவுடன் ஆக்கபூர்வமான செயல்திட்டங்களை அரசாங்கம் முன்வைக்குமாக இருந்தால் அனைத்து தமிழ் மக்களும் நாட்டின் அபிவிருத்திக்குப் பங்களிப்புச் செய்வதற்கு தயாராகவே உள்ளனர் என்றுள்ளது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY