
posted 4th January 2024
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
நல்லிணக்கப் பொறிமுறை
உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்காலச் செயலகத்தின் ‘தேசிய ரீதியாக பொது மக்கள் கருத்தறியும் நடவடிக்கையின் கிழக்கு மாகாணத்துக்கான விஜயம் வியாழக்கிழமை (04) முதல் சனிக்கிழமை (06) வரை நடைபெறவுள்ளதாக கொள்கைப் பிரிவுப் பிரதானி கலாநிதி யுவி தங்கராஜா தெரிவித்தார்.
இடைக்காலச் செயலகத்தின் பிரதிநிதிகள் வியாழக்கிழமை திருகோணமலை மாவட்டத்திற்கான விஜயத்தில், திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர், திருமலை மறைமாவட்ட ஆயர் ஆகியோரைச் சந்திப்பதுடன், திருகோணமலை மாவட்ட பல்சமய ஒன்றியம், சிவில் சமூகம் மற்றும் மூதூர் குவேனி பழங்குடி அமைப்பினரையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர்.
வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்துக்கான விஜயத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரை காலை வேளையில் சந்தித்துக் கலந்துரையாடுவதுடன், கிழக்குப் பல்கலைக்கழக நிருவாகத்தினர் மற்றும் விரிவுரையாளர்களைச் சந்திக்கின்றனர். அடுத்து மட்டக்களப்பு சிவில் பிரஜைகள் அமைப்பு, காத்தான்குடி அனைத்து பள்ளிவாயல்கள் சம்மேளனம், மட்டக்களப்பு சிவில் சமூகம் ஆகியவற்றினையும் சந்தித்துக் கலந்துரையாடுகின்றனர்.
அதே நேரம், சனிக்கிழமை நடைபெறும் அம்பாறை மாவட்டத்துக்கான விஜயத்தில் கல்முனையில் தமிழ் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளையும், சம்மாந்துறையில் முஸ்லிம் சமூகப் பிரதிநிதிகளையும் சந்திக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இடைக்கால செயலக அதிகாரிகள் குழுவின் விஜயமானது, தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான நிலையான கட்டமைப்பை உருவாக்குவதற்கான விடயங்கள் மற்றும் பரிந்துரைகளை சேகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்காலச் செயலகம் இவ் ஆணைக்குழுவை அமைப்பதற்கான ஆரம்பக்கட்ட வேலைகளின் ஒரு படியாக பிரதானமான பங்குதாரர்களுடனான சந்திப்புக்களை நடத்துகிறது.
உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்காலச் செயலகத்தின் பிரதிநிதிகள் கடந்த டிசம்பர் 10 முதல் டிசம்பர் 12 வரை வடக்கு மாகாணத்துக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்தது.
இதன் போது, சிவில் சமூக அமைப்புகள், மதத் தலைவர்கள், சிரேஷ்ட பேராசிரியர்கள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், சமூக அமைப்பு பிரதிநிதிகள், பெண் உரிமை இயக்கங்கள் உள்ளிட்ட முக்கிய பங்குதாரர்களுடன் சந்திப்புக்கள் நடத்தப்பட்டன.
அதே போன்று மத்திய மாகாணம், தென்மாகாணம் உள்ளிட்ட ஏனைய மாகாணங்களுக்கான விஜயங்களை மேற்கொண்டு அப்பிரதேசத்தின் சமூகப் பங்குதாரர்களையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)